வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2023 (09:25 IST)

தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போல பிற மாநிலங்களில் விவாதத்தைத் தூண்டிய விளையாட்டுகள்!

தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போல பிற மாநிலங்களில் விவாதத்தைத் தூண்டிய விளையாட்டுகள்!
 
தமிழ்நாட்டில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டு பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோல மற்ற விலங்குகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டு மற்றும் போட்டிகள் அவ்வப்போது பேசுபொருளாகி வருகின்றன. அவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
 
சேவல் சண்டை
 
 சேவல் சண்டை என்பது இரண்டு சேவல்களுக்கு இடையே நடக்கும் போட்டி. ஜல்லிக்கட்டில் காளைகளை பிரத்யேகமாக போட்டிக்காக தயார்படுத்துவது போல சேவல்களை மோதச் செய்து அவை ரத்தம் சிந்த ஆடும் ஆட்டம் இந்தியாவின் பல கிராமப்புறங்களில் நடத்தப்படுகின்றன.
 
இந்த வகை சேவல்களை ஆங்கிலத்தில் கேம் காக்ஸ்கள் என அழைக்கிறார்கள். சில கிராமங்களில் சேவலின் மூக்கில் கத்தி இணைக்கப்பட்டு அதைக் கொண்டு எதிரி சேவலின் மீது விழும் காயங்கள் அடிப்படையில் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகின்றன.
 
பெரும்பாலும் இந்த போட்டியில் பங்கெடுக்கும் சேவல்கள் மரணத்தை தழுவாது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டைகள் பரவலாக நடத்தப்படுகின்றன.
 
வரலாறு: சிந்து சமவெளி நாகரிகத்தில் சேவல் சண்டை ஒரு பொழுதுபோக்காக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்தியா, சீனா, பெர்ஷிசியா, பிற கிழக்கு நாடுகள் மற்றும் பண்டைய கிரேக்கத்தின் பண்டைய நாகரிகங்களில் சேவல் சண்டை நடத்தப்பட்டதற்கான வரலாறு உள்ளது.
இந்தியாவில், சேவல் சண்டை ஒரு பழங்கால சமய சடங்காக இருந்து வந்தது. இது ஒரு புனித விழாவாக (அதாவது ஒரு மத மற்றும் ஆன்மிக விழாவின் அங்கமாக) கோயில் வளாகத்தில் நடத்தப்படுகிறது. இந்தியாவில், சேவல் சண்டை ஒரு விளையாட்டாக மட்டுமின்றி சூதாட்டத்திற்காகவும் சிலர் நடத்துகிறார்கள்.
 
தமிழில் சேவல் சண்டை, வெற்றிக்கால் சேவல் சண்டை என்ற பெயரிலும் தெலுங்கில் கொடி பாண்டம், துலுவில் கோரிக் கட்டா எனவும் அழைக்கப்படுகின்றன. ஆந்திராவி்ன் கரேம்புடி கிராமம், கர்நாடகாவின் உடுப்பி மற்றும் கேரளாவின் காசர்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இந்த சேவல் சண்டை பரவலாக நடத்தப்படுகின்றன. ஜார்க்கண்டில், சேவல் சண்டையை 'படா' என்று அழைக்கிறார்கள்.
 
சட்ட அந்தஸ்து: விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறுவதாகக் கூறி, இந்த விளையாட்டை இந்திய நீதித்துறை தடை செய்துள்ளது. இந்திய விலங்குகள் நல வாரியம் சேவல்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் காட்டும் அறிக்கையை வெளியிட்டது. 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஆந்திர பிரதேசத்தில் ‘சேவல் சண்டை’ மீதான தடையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இருந்தபோதும் அம்மாநிலத்தில் சட்டவிரோதமாக இப்போதும் சேவல் சண்டை நடத்தப்படும் செய்திகள் வருகின்றன.
 
கம்பாலா
 
'கம்பாலா கன்னடா' என்பது இந்தியாவின் கடலோர கர்நாடகாவில் உள்ள உள்ளூர் நில உரிமையாளர்கள் மற்றும் குடும்பங்கள் அல்லது கிராமத்தின் தலைவராக இருப்பவரின் ஆதரவோடு நடத்தப்படும் வருடாந்திர எருமைப் பந்தயம் ஆகும்.
 
கம்பாலாவுக்கு பயன்படுத்தப்படும் ‘பாதை’ சேறும் சகதியும் நிறைந்தது. இரண்டு ஜோடி எருமை மாடுகளுக்கு இடையே இந்த போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு ஜோடியும் ஈர நெல் வயல்களில் மோதும். இந்த எருமைகள் சவுக்கை கொண்டு அடிக்கும் விவசாயியால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
 
பழங்காலத்தில், வெற்றி பெறும் எருமை மாடுகளுக்கு தேங்காய் மற்றும் வாழைப்பழங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இப்போது, வெற்றியாளர்களுக்கு தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுகின்றன. ரொக்க பரிசுகள் வழங்குவதும் நடைமுறையில் உள்ளது.
வரலாறு: கத்ரி கம்பாலா மங்களூருவின் கத்ரியில் நடைபெற்றது. மேலும் இது ஸ்ரீ மஞ்சுநாதர் கோயிலுடன் தொடர்புடையது என்பதால் இது தேவார கம்பாலா (கடவுளின் கம்பளம்) என்றும் அழைக்கப்படுகிறது.
 
இந்நிகழ்ச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன் மங்களூருவில் இருந்த அலுப மன்னர்கள் கலந்து கொண்டனர். கம்பாலா இன்னும் அங்குள்ள கிராமப்புற மக்களின் விருப்ப நிகழ்வாக உள்ளது. சில விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாத்ததற்கு நன்றி செலுத்துவதற்காக (கடவுளுக்கு) தங்கள் எருமை மாடுகளை ஓட்டிச் செல்வதால், ஒரு சடங்கு ரீதியான அணுகுமுறையாகவும் கம்பாலா பார்க்கப்படுகிறது.
 
கம்பாலா பருவம் நவம்பரில் தொடங்கி மார்ச் வரை நீடிக்கும். ஆண்டுதோறும் கடலோர கர்நாடகாவில், வந்தாரு, குல்வாடி போன்ற சிறிய தொலைதூர கிராமங்களில் இந்நிகழ்வு நடைபெறும். இது தெற்கு கேரளாவின் ஆனந்தப்பள்ளி நகரிலும் அறுவடைக்கு பிந்தைய காலத்தில் நடைபெறுகிறது.
 
சட்ட அந்தஸ்து: போட்டியில் பங்கெடுக்கும் எருமைகள் மீது சவுக்கடிகளைப் பயன்படுத்துவதால், அவை கொடுமையை அனுபவிப்பதாகக் கூறி, விலங்குகள் நல செயல்பாட்டாளர்கள் விமர்சிக்கிறார்கள். 2014ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “தமிழ்நாடு, மகாராஷ்டிரா அல்லது நாட்டின் பிற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு அல்லது மாட்டு வண்டிப் பந்தயங்களில் காளைகளை காட்சிப்படுத்தும் விலங்குகளாகப் பயன்படுத்த முடியாது” என்று கூறியது.
2016ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி மாநில உயர் நீதிமன்றம், அம்மாநிலத்தில் அனைத்து கம்பாலா நிகழ்ச்சிகளையும் நிறுத்த இடைக்காலத் தடை விதித்தது.
 
மாட்டு வண்டி பந்தயம்
 
 
மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில், மாட்டு வண்டி பந்தயங்கள் நீண்ட காலமாக பொழுதுபோக்கு மற்றும் அதன் ஆதார அடையாளமாக இருந்து வருகின்றன. இந்த வகை மாட்டு வண்டி போட்டி, சுமார் 25 விநாடிகள் நீடிக்கும். அதிகபட்ச தூரம் 500 மீட்டர். பலருக்கு, இது ஒரு அடையாளம். பல விவசாயிகள் இதை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக்கொள்கிறார்கள்.
 
கிராம கண்காட்சிகளையொட்டியும் இது நடத்தப்படும். மகாராஷ்டிராவில் விநாயகர் அல்லது கணேஷ் சதுர்த்தியையொட்டியும் 'ஜாத்ரா' எனப்படும் வருடாந்திர கிராம திருவிழாவின் இன்றியமையாத அம்சமாகவும் மாட்டு வண்டி போட்டி நடத்தப்படும்.
 
இந்த விளையாட்டு பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருவதாகவும், இது மாநில கலாசாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், பழமையின் அடையாளமாகவும் இருப்பதாக விழா அமைப்பாளர்கள் கூறுகிறார்கள். இதில் பங்கேற்கும் விலங்குகளை ஒரு பொழுதுபோக்கு தேவைக்காக வைத்திருப்பார்களே தவிர அவை வணிக நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுவது கிடையாது.
 
இந்த பந்தயங்கள் தடை செய்யப்பட்டால், அதற்காகவே வளர்க்கப்படும் காளைகள் ஆபத்தில் இருக்கும் என்பது அவர்களின் வாதம். மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மட்டுமின்றி காளை, எருதுகளையும் குதிரைகளையும் கொண்டு நடக்கும் பந்தயங்கள் ஆந்திராவிலும் நடப்பதுண்டு.
 
அத்துடன் சத்தீஸ்கரில் போலா, உத்தரகுஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாட்டு வண்டி பந்தயம், கேரளாவில் மராமதி மகோத்சவம், வருடாந்திர கால்நடை கண்காட்சியிலும் தமிழ்நாட்டில் ரேக்ளா பந்தயம், மேற்கு வங்கத்தில் தசமி திருநாளிலும் இந்த வகை மாட்டு வண்டி பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
 
சட்ட அந்தஸ்து: சேறும் சகதியும் சமமற்ற குண்டும் குழியுமான பாதைகளில் இந்த போட்டிகள் பல இடங்களில் நடத்தப்படுவதால் விலங்குகள், உடல் உபாதைகள் மற்றும் மூட்டு இணைப்புகளால் கடுமையான இன்னல்களுக்கு ஆளாவதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா குற்றம்சாட்டி வருகிறது.
 
கடைசியாக இந்த வகை போட்டிக்கு 2014இல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
 
ஆனாலும், அரசியல் விருப்பம் மற்றும் உள்ளூர் விருப்பங்களை கருத்தில் கொண்டு இந்த வகை போட்டிகள் மகாராஷ்டிராவில் நடத்தப்படுகின்றன.
 
ஒட்டக பந்தயம்
 
 
ராஜஸ்தானின் அஹ்மீர் மாவட்டத்தில் நடக்கும் புஷ்கர் கண்காட்சியின்போது குதிரை மற்றும் ஒட்டக பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் பந்தயத்தில் வெற்றியாளருக்கு ராஜஸ்தான் அரசாங்கத்திடமிருந்து ரொக்கப் பரிசு கிடைக்கும்.
 
ஒட்டகங்கள் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றியாளர்களாக வெளிவர பயிற்சி அளிக்கப்படுகின்றன. இந்தப் பந்தயத்தின் அங்கமாக கிராமிய நடனம் மற்றும் இசை கொண்டாட்டங்கள் நடைபெறும். ஒட்டக அழகு போட்டியும் விழாவில் நடத்தப்படும்.
 
ஒட்டகத்தின் மீது அதிக எண்ணிக்கையிலான மக்களை அமர வைத்து பாரம் தாங்காமல் ஒட்டகம் விலகும்போது மேலே உள்ள மக்கள் விழுவதும் உற்சாகக் களிப்பின் காட்சியாக அங்கு கருதப்படுகிறது.
 
இதில், அதிக எண்ணிக்கையிலான மக்களை முதுகில் ஏற்றிச் செல்லும் ஒட்டகம் செல்லும் நீண்ட தூரத்தின் அடிப்படையில் அந்தப் போட்டியின் வெற்றியாளர் ஒட்டகம் தீர்மானிக்கப்படும்.
 
புஷ்கரில் ஒட்டகப் பந்தயம் பாலைவனத்தில் நடத்தப்படுவதால், பாலைவனத்தின் ஒப்பற்ற சவாரியை ஆதாரமாகக் கருதப்படும் ஒட்டகத்தின் முக்கியத்துவம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
 
வழக்கமாக ஆண்டின் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஒரு வாரம் முழுவதும் புஷ்கர் ஒட்டகக் கண்காட்சி நடக்கும். அப்போது ஒட்டகப் பந்தயம் முக்கியமாக நடைபெறும்.
 
சட்ட அந்தஸ்து: ராஜஸ்தான் அரசு ஒட்டக பந்தயத்தை ஆதரிக்கிறது, ஆனால் ஒட்டகத்தை வெட்டுவது, மூக்கு குத்துவது, சித்ரவதை செய்வதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.
 
நாய் சண்டை
 
 
நாய் சண்டை என்பது பார்வையாளர்களின் பொழுதுபோக்குக்காக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது ஆபத்தான ரத்தம் சிந்தி விளையாடும் போட்டியாகவும் உள்ளது.
 
ஒரு குழியில் அல்லது கூண்டில் உணவின்றி நாய்கள் தனித்தனியாக வைக்கப்படும். பிறகு அவை திறக்கப்பட்டு மோதிக் கொள்ளச் செய்யப்படும்போது இரண்டில் எந்த வகை நாய் மோதி இறக்கிறதோ அதற்குக் காரணமான மற்றொரு நாய் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது.
 
வெற்றி பெற்ற நாய் மீது லட்சக்கணக்கில் பந்தயம் கட்டப்படுகிறது.
 
வரலாறு: காளைகள் மற்றும் கரடிகள் போல நாய்களை மோதவிடும் பழக்கம், இங்கிலாந்தில் 18ஆம் நூற்றாண்டு வரை மத்திய காலம் வரை இருந்தது. இப்போது இந்த வகை போட்டி, இந்திய கிராமங்களுக்கும் நுழைந்துள்ளது.
 
இந்த வகை நாய் சண்டைக்காக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நாய்கள் கடத்தப்படுகின்றன. டெல்லியின் புறநகர் பகுதிகளிலும், ஹரியாணாவின் குருகிராமிலும் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட பண்ணை வீடுகளிலும் நொய்டாவிலும் இந்த வகை நாய் சண்டைகள் சட்டவிரோதமாக நடப்பதாக ஊடக செய்திகளில் அடிக்கடி காண முடிகிறது.
 
இந்த "நாய் சண்டைகளை" காண தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தவறாமல் கூடுகிறார்கள். இந்த சண்டைகள் பஞ்சாப் மற்றும் ஹரியானாணாவின் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு விரிவடைந்து அங்குள்ள பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்கு போட்டிாகவும் மாறியுள்ளன.
 
சட்ட அந்தஸ்து: ஆனால், இந்த வகை போட்டிகளை நடத்த சட்ட அனுமதி கிடையாது.
 
விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாய் சண்டை சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்றமும் இந்த வகை போட்டிக்குத் தடை விதித்துள்ளது.
 
புல்புல் சண்டை
அசாமின் அறுவடை திருவிழாவான போகலி பிஹுவுடன் இணைந்த ஒவ்வொரு மகர சங்கராந்தியின் போதும், குவாஹட்டியில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள ஹஜோவில் உள்ள ஹயக்ரீவா-மாதவா கோவிலில் புல்புல் சண்டைகள் நடத்தப்படுகின்றன.
 
மகர சங்கராந்தி நாளில் கோவில் வளாகத்திற்குக் கொண்டு செல்வதற்கு முன், சுற்றியுள்ள கிராம மக்கள் புல்புல் எனப்படும் குருவி வகையைச் சேர்ந்த பறவையின் குஞ்சுகளைப் பிடித்து சில வாரங்களுக்கு வளர்ப்பார்கள். வெற்றிப் பறவைகளின் உரிமையாளர்கள் பல்வேறு பரிசுகளைப் பெறுவார்கள். சண்டையின் போது பறவைகளுக்கு காயங்கள் ஏற்படும்.
 
தோல்வியடைந்த பறவைகள், மீண்டும் போட்டியில் கலந்து கொள்ளாதபடி முகடுகள் ட்ரிம் செய்யப்பட்டு விடுவிக்கப்படும்.
 
புல்புல் சண்டை அசாமிய இந்து மத மரபுகளின் கோவில் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இதற்காக அங்குள்ள மக்கள் நைட்டிங்கேல் அல்லது புல்புல்களைப் பிடித்து அவற்றுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்.
 
பெரிய அஹோம் மன்னர் ஸ்வர்கதேயோ பிரமத்த சிங்க கோவிலின் படிக்கட்டுகளில் இறங்கும்போது இரண்டு புல்புல் பறவைகள் சண்டையிடுவதைக் கண்டதாக மக்கள் நம்புகிறார்கள். அவற்றின் போராட்ட உணர்வைக் கண்டு மகிழ்ந்த மன்னர், புல்புல் பறவைகளைப் பிடிக்கவும், அவற்றின் சண்டைகளை ஒழுங்கமைக்கவும் அறிவுறுத்தியதாக வரலாறு உண்டு. காலப்போக்கில் அந்த வழக்கமே அசாமில் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறிப்போனது.
 
குறிப்பிட்ட வகை புல்புல் பறவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் அவை இரண்டு அணிகளாகப் பிரிக்கப்படும் - "பாரலிடோலா" மற்றும் "சொனரிடோலா" என அவை அழைக்கப்படும். இது அப்பகுதியில் உள்ள இரண்டு பகுதிகளைக் குறிக்கிறது. "மேசிங்" எனப்படும் பறவை சண்டை நிபுணர்களால் இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி கட்டுப்படுத்தப்படும்.
 
சட்ட அந்தஸ்து: உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின் அடிப்படையில், அசாம் அரசாங்கம் புல்புல் சண்டையை நடத்துவதற்கு ஆதரவான உத்தரவை வெளியிட்டபோது, ஜனவரி 2015இல் இந்த பறவை சண்டை பாரம்பரியத்தைத் தடை செய்வதற்கான நகர்வுகள் தொடங்கின. அதை எதிர்த்து கோவில் கமிட்டியினர் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
 
2015ஆம் ஆண்டில், ஒற்றை நீதிபதி அமர்வு, அரசாங்க உத்தரவின் செயல்பாட்டை நிறுத்தியது, ஆனால் இந்திய விலங்குகள் நல வாரியம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஜனவரி 2016இல் வெற்றி பெற்றது.
 
குதிரை பந்தயம்
 
 
இது ஒரு குதிரையேற்ற செயல்திறன் விளையாட்டு. உலகின் பல நாடுகளில் பழங்காலம் முதல் இது காணப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஜாக்கிகள், போட்டிக்காக நிர்ணயிக்கப்பட்ட தூரத்திற்கு மேல் குதிரைகளில் சவாரி செய்வர்.
 
மேலும் குதிரைகளில் எது வேகமான வரலாறு படைக்கிறது என்பதைக் கண்டறிவதே இதன் நோக்கம். குதிரைப் பந்தயம் கிரீஸ், பாபிலோன், சிரியா மற்றும் எகிப்தில் பண்டைய காலம் முதல் நடைமுறையில் இருப்பதற்கான பல வரலாறுகள் உள்ளன.
 
இந்தியாவில் குதிரைப் பந்தயம் 200 ஆண்டுகள் பழைமையானது. நாட்டிலேயே முதல் ரேஸ்கோர்ஸ் 1777இல் சென்னையில் அமைக்கப்பட்டது. இன்று, ஆறு பந்தய அதிகாரிகளால் ஒன்பது பந்தயத் தடங்களில் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது.
 
1891ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் ஆதரவின் கீழ் மைசூரில் குதிரை பந்தயம் தொடங்கியது. இந்தியாவில் ஐந்து ‘கிளாசிக்’ குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
 
'இந்தியா 1,000' மற்றும் '2,000 கினியாக்கள்' டிசம்பரில் நடத்தப்படுகின்றன. 'இந்தியன் ஓக்ஸ்' மற்றும் 'இந்தியன் டெர்பி' மும்பையிலும், செயின்ட் லெகர் புனேவிலும் நடத்தப்படுகின்றன. 'பெங்களூரு டெர்பி' மற்றும் 'தி சூப்பர் மைல்' என்று மற்ற பந்தயங்களும் நடத்தப்படுகின்றன.
 
சட்ட அந்தஸ்து: 1996இல், உச்ச நீதிமன்றம் குதிரைப் பந்தயங்களில் பந்தயம் கட்டுவது திறமையின் விளையாட்டு, அதிர்ஷ்டம் மட்டுமல்ல, 1888ஆம் ஆண்டு காவல் சட்டம் அல்லது 1930ஆம் ஆண்டு கேமிங் சட்டத்தின் கீழ் "சூதாட்டத்தின்" சட்டவிரோத வடிவமாக இல்லை எனத் தீர்ப்பளித்தது.
 
அந்தத் தீர்ப்புக்குப் பிறகு இந்தியாவில் குதிரை பந்தயம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரபலம் அடைந்துள்ளது. இந்தியாவில் குதிரைப் பந்தயம் என்பது சட்டபூர்வ மற்றும் பெரிதும் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்முறை பந்தயமாகக் கருதப்படுகிறது.