ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2024 (17:42 IST)

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

India Bangladesh

ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறியதில் இருந்து, இந்தியாவுக்கு சாதகமற்ற பல விஷயங்கள் அங்கு நடக்கின்றன.

 

 

கடந்த புதன்கிழமை பாகிஸ்தானின் சரக்குக் கப்பல் ஒன்று கராச்சியில் இருந்து புறப்பட்டு வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள சிட்டகாங் துறைமுகத்தை சென்றடைந்தது.

 

1971 வங்கதேச விடுதலைப் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கடல்வழி வர்த்தகம் நடப்பது இதுவே முதல்முறை. முன்னதாக, சிங்கப்பூர் அல்லது கொழும்பு வழியாகவே இரு நாடுகளுக்கும் இடையே கடல்வழி வர்த்தகம் நடந்து வந்தது.

 

வங்கதேசத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்திற்கு சரக்குக் கப்பல் நேரடியாக வருவது இதுவே முதல் முறை, இது இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது." என்று குறிப்பிட்டது.

 

"இந்தப் புதிய பாதையானது இருநாடுகளுக்கு இடையேயான விநியோகச் சங்கிலியை மேலும் சீரமைக்கும், போக்குவரத்து நேரத்தைக் குறைத்து, இரு நாடுகளுக்கும் புதிய வணிக வாய்ப்புகளைத் திறக்கும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

வங்கதேசம்-பாகிஸ்தான் இடையேயான இந்த நேரடி கடல்சார் இணைப்பு, இருநாடுகள் இடையே பாரம்பரியமாக நீடிக்கும் சிக்கலான ராஜதந்திர உறவுகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

வங்கதேசத்தில் முந்தைய ஷேக் ஹசீனா அரசாங்கம் இந்தியாவுடன் நட்பாக இருந்தது. அந்த அரசாங்கத்தை வெளியேற்றி வங்கதேசத்தில் தற்போது பதவிக்கு வந்திருக்கும் முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இடைக்கால அரசின் நிர்வாகத்தில் பாகிஸ்தானுடனான உறவுகள் நெருக்கமாகும் அறிகுறி தென்படுகிறது.

 

ஆனால் சமீபத்திய செய்தி இந்தியாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஹசீனா ஆட்சி கவிழ்ப்பை தொடர்ந்து வங்கதேசம் உடனான இந்தியாவின் உறவு ஏற்கனவே வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.

 

வங்கதேசத்தின் கொள்கைகளில் மாற்றம்
 

ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து விலகிய பிறகு, இஸ்லாமாபாத் மற்றும் வங்கதேசம் இடையே பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்தது.

 

இந்த ஆண்டு செப்டம்பரில், நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது, வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இருவரும் தனியாக சந்தித்தனர். இரு நாடுகளுக்கு இடையேயான "இருதரப்பு ஒத்துழைப்புக்கு புத்துயிரூட்டுவது" குறித்து அவர்கள் வலியுறுத்தினர்.

 

நியூயார்க்கில் நிகழ்ந்த சந்திப்பின் போது யூனுஸ் "எங்கள் உறவை மீட்டெடுப்பது மிகவும் முக்கியம்.” என்றார்.

 

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் “புதிய அத்தியாயத்தை தொடங்குவது” குறித்தும் பேசினார்.

 

இது ஹசீனா நிர்வாகத்தின் கீழ் நடைமுறையில் இருந்த கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட நடவடிக்கை.

 

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, ஆகஸ்ட் 2022 இல், சீனாவால் கட்டப்பட்ட போர்க்கப்பலான பி.என்.எஸ் தைமூரை சிட்டகாங் துறைமுகத்தில் (வங்கதேசத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது) நிறுத்த வங்கதேச அரசு மறுத்தது.

 

கம்போடியா மற்றும் மலேசியா கடற்படைகளுடன் நிகழ்ந்த கடற்படை பயிற்சிக்குப் பிறகு அந்த போர்க்கப்பல் இறுதியாக இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

 

இந்த போர்க்கப்பலை சிட்டகாங் துறைமுகத்தில் நிறுத்த வங்கதேச அரசு அனுமதிக்காததால், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்தது.

 

இப்படியிருக்க, அமான் 2025 (AMAN naval exercise) கடற்படை பயிற்சி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. வங்கதேசம் ஏற்கனவே அதன் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

 

ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பால் பாகிஸ்தானுக்கு பெரிய வாய்ப்பு

இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் பாகிஸ்தான் செய்தி சேனலுடனான உரையாடலில், "இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ​​ஷேக் ஹசீனா இந்தியாவில் இருக்கிறார். இது பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது" என்று ஒப்புக்கொண்டார்.

 

வங்கதேசம் உடனான பாகிஸ்தானின் கசப்பான உறவுகளுக்கு ஷேக் ஹசீனாவைக் குற்றம்சாட்டிய பாசித், "ஷேக் ஹசீனா இந்தியாவின் பக்கம் நின்றார். அவர் சில கொள்கைகளைக் கொண்டு முன்னேறிச் சென்றார்" என்றார்.

 

தற்போது பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வங்கதேசத்தின் சிட்டகாங்கிற்கு முதல் சரக்கு கப்பல் வந்ததை அப்துல் பாசித் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறார்.

 

பாசித் கூறுகையில், "பாகிஸ்தானின் சரக்கு கப்பல் ஒன்று நேரடியாக சிட்டகாங் செல்வது இதுவே முதல் முறை. இதற்கு முன் இரு நாடுகளுக்கு இடையே எந்த வர்த்தகம் நடந்தாலும் சிங்கப்பூர் மற்றும் இலங்கை வழியாகத்தான் நடந்து வந்தது. எனவே இது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் தலைமை இப்போது மிகவும் திறந்த மனதுடன் உள்ளது. அவர்கள் இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்கு எதிரானவர்கள் அல்ல. அதேசமயம் பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்துவதில் எந்த தவறும் இல்லை” என்றார்.

 

"இப்போது அடுத்தக்கட்டமாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளும் பேச்சுவார்த்தைகள் நடத்தக்கூடும். அடுத்த ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் தொடங்கும்" என்று அவர் கூறினார்.

 

"ஷேக் ஹசீனா வெளியேறியதன் மூலம் பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் ஷேக் ஹசீனாவின் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பாகிஸ்தான்-வங்கதேச உறவுகளைப் பார்ப்பதில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். அவரது பார்வை பாகிஸ்தான் மீதான பாரபட்சம் நிறைந்தது. அவரால் கடந்த காலத்திலிருந்து வெளியேற முடியவில்லை.’’ என்றும் அவர் கூறினார்.

 

அப்துல் பாசித், "இப்போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை இரு நாடுகளின் நலனுக்காக நாங்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்." என்றார்.

 

வர்த்தகம் மட்டுமின்றி, மற்ற துறைகளிலும் ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்துள்ளது. வங்கதேச குடிமக்களுக்கு உடனடி இலவச விசா வசதியை பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

வங்கதேசத்துக்கான பாகிஸ்தான் தூதர் சையத் அகமது மருஃப், நவம்பர் 6 ஆம் தேதி, "வங்கதேச குடிமக்களுக்கு பாகிஸ்தானில் இலவச விசா வழங்கப்படும். இது 48 மணி நேரத்திற்குள் கிடைக்கும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இணையதளத்தில் தகவல்களை உள்ளீடு செய்வது தான். விசாக்களில் வணிக மற்றும் சுற்றுலா விசா என இரண்டு பிரிவுகள் உள்ளன. பயணிகள் திரும்புவதற்கான டிக்கெட் மற்றும் அவர்கள் தங்க விரும்பும் இடம் பற்றிய தகவல்களை மட்டுமே வழங்கினால் போதுமானது.”

 

2023ல் பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 800 மில்லியன் டாலராக இருந்தது.

 

இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
 

பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்று மாற்றம் குறித்து இந்தியாவில் கவலை எழுந்துள்ளது.

 

கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஆங்கில நாளிதழான தி டெலிகிராஃபிடம் நிபுணர் ஒருவர் கூறுகையில், "சிட்டகாங் மற்றும் மோங்லா ஆகியவை வங்கதேசத்தின் இரண்டு பெரிய துறைமுகங்கள். அவை இரண்டும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எட்டாத நிலையில் இருந்தன. முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் இணைப்பு கொழும்பு மற்றும் இலங்கை வழியாக இருந்தது. இப்போது, ​​பாகிஸ்தான் கப்பல்கள் நேரடியாக சிட்டகாங்கை சென்றடையும். தடை செய்யப்பட்ட பொருட்கள் வங்கதேசத்துக்குச் சென்று அங்கிருந்து இந்தியாவில் உள்ள பிரிவினைவாதக் குழுக்களின் கைகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

 

இந்த நிபுணர் 2004 இல் சிட்டகாங்கில் மீட்கப்பட்ட மிகப் பெரிய சட்டவிரோத ஆயுதங்களைக் குறிப்பிட்டார்.

 

ஏப்ரல் 1, 2004 அன்று, வங்கதேசத்தின் வரலாற்றில் மிகப்பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதங்கள் இரண்டு பெரிய இழுவை படகுகள் மூலம் சிட்டகாங்கிற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்டன.

 

அன்றைய பி.என்.பி. அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படுவதற்கு இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது முக்கிய காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

 

தெற்காசியாவில் என்ன தாக்கம்?

 

வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வளர்ந்து வரும் உறவை இந்தியா அச்சத்துடன் பார்க்கிறது. ஏனெனில் நீண்ட காலத்திற்கு இது தெற்காசியாவில் புவிசார் அரசியல் சமன்பாட்டை பாதிக்கும்.

 

இந்திய பாதுகாப்பு முகமைகளுடன் தொடர்புடைய ஒரு அதிகாரி ஆங்கில நாளிதழான டெலிகிராஃபிடம், "கடந்த ஆண்டு இந்தியா மோங்லா துறைமுகத்தை இயக்கும் உரிமையைப் பெற்ற போது, ​​அது சீனாவை விட இந்தியாவுக்கு ஒரு மூலோபாய நன்மையாக இருந்தது. ஆனால் இப்போது பாகிஸ்தானுக்கு சிட்டகாங் துறைமுகத்தை திறந்துள்ளது. இப்போது இரண்டு துறைமுகங்களின் கடல் வழிகளும் பாகிஸ்தான் கப்பல்களை அனுமதிக்கும். சிட்டகாங் மியான்மருக்கு அருகில் இருப்பதால் இது பிராந்திய புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்."

 

வடகிழக்கு கிளர்ச்சிக் குழுக்கள் மியான்மரில் தஞ்சம் புகுந்தது குறித்து இந்திய பாதுகாப்பு முகமைகளுக்கு சந்தேகம் உள்ளது. இந்த வழியாக அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 

வங்கதேசத்தின் அடிப்படைவாதக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை நீக்கப்பட்ட செய்தியும், தற்போது வங்கதேச அரசியல் சாசனத்தில் இருந்து மதச்சார்பின்மை என்ற வார்த்தை நீக்கப்பட உள்ளது என்ற செய்தியும் இந்தியாவின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

 

இந்தியாவின் நன்கு அறியப்பட்ட பாதுகாப்பு நிபுணர் பிரம்மா செல்லனே எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் " வங்கதேசத்தில் ராணுவ-முல்லா ஆட்சியின் கீழ், யூனுஸ் பெயரளவிலான தலைவரின் பாத்திரத்தை வகிக்கும் நிலையில், நாடு வன்முறை செய்யும் இஸ்லாமியர்களின் கோட்டையாக மாறியுள்ளது. இப்போது அட்டர்னி ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை அரசியல் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்." என்று குறிப்பிட்டுள்ளார்.

 

"வங்கதேசத்தின் பன்மைத்துவ மரபுகளை அழிக்க தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி முயற்சிக்கிறது. 90% மக்கள் முஸ்லிம்களாக இருக்கும் ஒரு நாட்டின் யதார்த்தத்துடன் மதச்சார்பின்மை பொருந்தாது என்று அட்டர்னி ஜெனரல் வாதிடுகிறார்.”என்று குறிப்பிட்டார்.

 

வங்கதேசத்தில் பாகிஸ்தானுடன் நல்லுறவு கொண்ட அரசாங்கம் இருப்பது இது முதல் முறை அல்ல.

 

16 ஆண்டுகளாக, ராணுவ சர்வாதிகாரம் மற்றும் வங்கதேசத்தின் தேசியவாத கட்சி (BNP) தலைமையிலான அரசாங்கங்களும் பாகிஸ்தானுடன் நட்புறவை பேணி வந்தன.

 

இருப்பினும், இந்தியா உடனான வங்கதேசத்தின் உறவுகள் பல ஆண்டுகளாக வலுவாக வளர்ந்தன. குறிப்பாக 1996 முதல் 2001 வரையிலும், பின்னர் 2009 முதல் 2024 வரையிலும் ஹசீனா பிரதமராக இருந்த காலத்தில் இருநாட்டு உறவுகள் வலுவடைந்தன.

 

ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சியில், வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவுகள் மிகவும் நெருக்கமாக இருந்தன. இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பும் கணிசமாக வளர்ந்தது. வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே விரிவான ஒத்துழைப்பு இருந்தது.

 

வங்கதேசம் தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. இருதரப்பு வர்த்தகம் சுமார் $16 பில்லியன் மதிப்புடையது.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு