1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (14:16 IST)

கொரோனா அச்சம்: இறந்து பிறந்த குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இறந்த குழந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய கிராம மக்கள் அனுமதிக்காத்தால் தனது குழந்தையின் உடலை கால்வாயில் தந்தை வீசி சென்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
இது குறித்து நந்தியால் காவல் நிலைய துணை ஆய்வாளர் சுதாகர் ரெட்டி கூறுகையில், ஜூலை 18 அன்று சபோலு கிராமத்திற்கு அருகிலுள்ள கர்னூல்-குடபா கால்வாயில் ஒரு குழந்தையின் உடல் மிதந்து கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
 
உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிறந்த குழந்தையின் கையில் கட்டப்பட்டிருந்த அடையாளத்தை வைத்து குழந்தையின் பெற்றோர் ஷான்ஷா வாலி என கண்டுபிடித்தனர். இவர் கர்னூல் மாவட்டம் கோட்டாபாடு கிராமத்தில் வசிப்பவர். தனது மனைவி மடர் பேவை வெள்ளிக்கிழமை காலையில் நந்தியாலில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார்.
 
அன்று மாலை மடர் பேவிற்க்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது. தனது இறந்த குழந்தைக்கு இறுதி சடங்கு செய்ய தனது கிராமத்திற்கு உடலைக் கொண்டு சென்றுள்ளார். ஊர் மக்கள் குழந்தைக்கு கொரோனா நோய்த் தொற்று இருந்திருக்கலாம் என அஞ்சி ஊருக்குள் அனுமதிக்கவில்லை.
 
இதனால் மனமுடைந்த வாலி தன் குழந்தையின் உடலை சபோலு கிராமத்திற்கு அருகிலுள்ள கர்னூல்-குடபா கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளார் என கூறினார். மேலும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் குழந்தையின் உடலை பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.