செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (23:33 IST)

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்புக்கு '2024' தேர்தல் காரணமா? கிறிஸ்தவ மக்களின் நிலை என்ன?

இலங்கையில் மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலான ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டு, நான்கு வருடங்களை அண்மித்துள்ள இந்த சூழ்நிலையில், அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் முறையாக இன்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
 
கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கோரினார்.
 
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவொன்றை பிறப்பித்தது.
 
இதன்படி, 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிபயர்நீதிம
இதற்கமைய, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 
அத்துடன், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபா விதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அதேபோன்று, முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த நட்டஈட்டு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
இந்த நட்டஈட்டை தொகையிலிருந்து, தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் தலா ஒரு மில்லியன் ரூபா வீதமும், தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் 5 லட்சம் ரூபா வீதமும் நட்டஈட்டை வழங்குமாறும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
 
 
இவ்வாறான நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் தான் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
தன்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறிழைத்துள்ளமையினால், அந்த அதிகாரிகளை நியமித்த தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதைவிடுத்து, தனக்கும், இந்த தாக்குதலுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என கூறிய அவர், இவ்வாறான தாக்குதலொன்று நடத்தப்படவுள்ளமை தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
 
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் உடல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
''நான் அறிந்த விதத்தில் கத்தோலிக்க மக்கள், என்மீது வைராக்கியமோ, குரோதமோ வைக்கவில்லை. எனது ஆட்சிக் காலத்தில் வேறு நபர்களினால் செய்யப்பட்ட தவறு காரணமாக இன்று எனக்கு நட்டஈடு செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சிக் காலத்தில், இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றமை குறித்து உயிரிழந்த மக்கள், அங்கங்களை இழந்து, ஓரிடத்தில் முடங்கியுள்ள மக்களிடமும், இறைவனிடமும் விசேடமாக மன்னிப்பு கோருகின்றேன்.
 
அதேபோன்று, நான் எந்தவொரு விடயமும் அறியாமல், இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இவ்வாறு உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டமை தொடர்பில் கத்தோலிக்க மக்களிடமும் நான் மன்னிப்பு கோருகின்றேன்.
 
நான் தவறிழைத்ததாக இந்த தீர்ப்பில் கூறப்படவில்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஏதேனும் பாரிய குற்றங்களை இழைத்திருப்பார்களாயின், அந்த குற்றத்திற்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என மிகவும் தெளிவாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது." என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
 
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோரிய அடுத்த நிமிடமே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
 
ஈஸ்டர் தாக்குதலில் மன்னிப்பு கோரும் வகையில் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
 
''தென் ஆபிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா 27 வருடங்கள் சிறைச்சாலையில் இருந்தார். 27 வருடங்கள் சிறை வாழ்க்கையை முடித்து விட்டு வெளியில் வந்த அவரை, அந்த நாட்டு மக்கள் நாட்டின் தலைவராக்கினார்கள். அதனால், ஒரு விடயத்தை மிகவும் தெளிவாக கூற வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் பின்வாங்கும் மனிதன் அல்ல.
 
எந்தவொரு சூழ்ச்சியை கண்டும் நான் அஞ்சப் போவதில்லை. நீதிமன்றத்திற்கு நான் மதிப்பளிக்கின்றேன். சட்டத்தை மதிக்கின்றேன். நீதிமன்றத்திற்கு தலைவணங்குகின்றேன். நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை நான் முழுமையாக வாசித்துள்ளேன். எனக்கு எவ்வாறான துன்புறுத்தல்கள் கொடுத்தாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எனது கட்சியின் ஆதரவுடன் எனக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதனை மிகவும் தெளிவாக கூறிக் கொள்கின்றேன்." என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.
 
 
 
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பகிரங்கமாக கோரப்பட்ட மன்னிப்பானது, சுயநல மன்னிப்பே தவிர, ஆன்மீக மன்னிப்பு கிடையாது என கூறிய அருட்தந்தை எம்.சக்திவேல், இந்த மன்னிப்பை தம்மால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
 
''மன்னிப்பு கேட்பது வேறு. மன்னிப்புடன் சேர்த்து அடுத்த தேர்தலில் போட்டியிட போகின்றேன் என்று சொன்னால், இது உண்மையான மன்னிப்பு கிடையாது. இது அடுத்த தேர்தலுக்கு, நான் மன்னிப்பு கேட்டு விட்டேன்;. இதுவரை எந்தவொரு தலைவரும் செய்யாத ஒன்றை, நான் செய்திருக்கின்றேன் என்பதை காட்டி ஒரு பக்கம் அரசியலை கொண்டு வருகின்றார்.
 
இந்த மன்னிப்பு, இறந்து போன உயிர்களை மீள கொண்டு வந்து கொடுக்குமா?. இல்லை. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை இவர் வெளிப்படுத்த விரும்பவில்லை. இவருக்கு அது தெரியும். மன்னிப்பு கேட்கும் அதேநேரம், இவருக்கு தெரிந்த உண்மையையும் வெளியிட்டிருக்க வேண்டும். உண்மைகள் அனைத்தையும் சொல்வதாக நாடாளுமன்றத்தில் அவர் கூறியிருந்தார். ஆனால், எந்தவொரு உண்மையையும் அவர் சொல்லவில்லை. மன்னிப்பு என்பது ஆழத்தில் இருந்து வரவேண்டும். எதற்கு மன்னிப்பு கேட்கின்றார்?. தான் செய்ததற்கு மட்டுமா? தான் செய்யாமல் விட்டதற்கு மட்டுமா? அல்லது உண்மையை இன்னும் மறைத்து வைத்திருக்கின்றேன். அதற்காக மன்னிப்பு கேட்கின்றாரா?
 
இது ஒரு அரசியல் ரீதியிலான, சுயநலம் கொண்ட ஒரு மன்னிப்பே தவிர, இதில் ஆன்மீக ரீதியிலான மன்னிப்பு கிடையாது. ஆன்மீக ரீதியிலான மன்னிப்பு என்பது வேறு. இதற்குள் அரசியல் தான் இருக்கின்றது. இதுவொரு சுயலன மன்னிப்பு. அதனால், இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் மீண்டும் தான் ஒரு அரசியல்வாதி என்பதை காட்ட வருகின்றாரே தவிர, ஒரு மனிதனாக காட்டவில்லை. மனிதன் என்று சொன்னால், ஆன்மீகத்தில் இருந்து சொல்ல வேண்டும். ஆன்மீகத்திலிருந்து சொல்லும் போது, உண்மை வெளிவரும். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஏன் காத்திருந்தார்.
 
அதுவரை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. நான் ஒன்றும் செய்யவில்லை. நான் ஒன்றும் செய்யவில்லை, என்னை குற்றவாளியாக்கிவிட்டார்கள் என்று சொன்னாரே தவிர, ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது எப்படி மனம் திருந்தினார். தேர்தலில் நிற்க போகின்றேன் என்று வரும் போது தான், மனம் திருந்துகின்றார். அதற்கு முன்பு மனம் திருந்தவில்லை. இந்த மனம் திருந்தலானது, அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது. இதில் ஆன்மீகம் கிடையாது. மனிதம் கிடையாது. உண்மை கிடையாது." என அருட்தந்தை எம்.சக்திவேல் தெரிவிக்கின்றார்.