வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (21:18 IST)

நாடாளுமன்றத்தில் போராடிய எம்பிக்கள் - பட்ஜெட்டால் எவற்றின் விலை உயரும்?

இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் இடதுசாரி கட்சிகளின் எம்பிக்கள், செங்கல்லில் எய்ம்ஸ் என அச்சிடப்பட்ட காகிதத்தை ஒட்டி, நிதிநிலை அறிக்கையில் மதுரை எய்ம்ஸ் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நாடாளுமன்றத்தில் 2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட சில நிமிடங்களில், அதில் மதுரை எய்ம்ஸ் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் செல்லும் பிரதான முகப்பு வாயிலுக்கு எதிரே இருக்கும் காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஜய்வசந்த், செல்லக்குமார், ஞானதிரவியம், சு.வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
"மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்காத இந்திய நிதியமைச்சரை கண்டிக்கிறோம்" என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
 
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு
பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறும்போது, "இது வெறும் வாயிலேயே வடை சுடும் பட்ஜெட்," என்று கூறி காணொளியொன்றை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 
இந்த பட்ஜெட் அறிக்கையில் பொதுவாக சாதகமான அம்சங்கள் இருப்பதாகத் தோன்றினாலும் அதில் சில சந்தேகங்களும் சில துறைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்களும் காணப்படுகின்றன.
வருமான வரி உச்சவரம்பாக புதிய முறைக்கு மாறுவோருக்கு ரூ. 7 லட்சம்வரை வரி செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், இந்த சலுகையை ஒருவர் பெற வேண்டுமானால் முதலில் புதிய முறைக்கு தன்னை அவர் மாற்றிக் கொள்ளும் கட்டாயம் ஏற்படும்.
 
விலை குறைப்பும், அதிகரிப்பும்
செல்போன்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றின் முதலீட்டு உதிரி பாகங்கள், லித்தியம் பேட்டரிகள் மீதான சுங்க வரி விலக்கு அல்லது வரி குறைப்பு அறிவிப்பால் அவற்றின் விலை மலிவாகலாம்.
 
செல்போன்களில் உள்ள கேமரா லென்ஸ்கள், லேப்டாப், டிஎஸ்எல்ஆர் கேமராக்கள் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
 
தொழில்நுட்ப முறையில் செயற்கையாக உருவாக்கப்படும் வைரத்துக்கு மூல காரணமான விதைகளின் விலைக்கான வரி குறைவதால், செயற்கை வைரத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.
 
பட்ஜெட் அறிவிப்பால் எவற்றின் விலை உயரும்?
 
அதே சமயம், தங்க கட்டிகள் மீதான சுங்க வரி உயர்த்தப்படுவதால் சில ஆபரண நகைகள் மற்றும் தங்கம் சார்ந்த தயாரிப்புகளின் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல, பல பொருட்களின் சுங்க வரியை அரசு உயர்த்தியுள்ளது.
 
இதன் மூலம் உள்நாட்டில் அவற்றுக்கான தயாரிப்பு ஊக்குவிக்கப்படலாம் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். அவர் அறிவித்துள்ள வரி உயர்வால் 'உடனடியாக அதிகரிக்கப்படலாம்' என எதிர்பார்க்கப்படும் பொருட்களின் விவரம்:
 
புகை பிடிப்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் பட்ஜெட்டில் சிகரெட் தயாரிப்புகளின் வரி 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
ரசாயன ரப்பர் பொருட்கள் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
நவீன சமையல் அறையில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் சிம்னி மீதான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
2013-14இல் நரேந்திர மோதி பிரதமரான போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை விட தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒன்பது மடங்கு அதிகமாகும்.