செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (16:10 IST)

நாய்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் வரும் - எப்போது என கூறும் ஆய்வு!

நாய்கள் தங்கள் உரிமையாளர்களுடன் மீண்டும் இணையும்போது, அவை ஆனந்தக் கண்ணீர் விட்டு அழும் என்று ஒரு சிறிய ஆய்வு கண்டறிந்துள்ளது.


நீண்ட காலத்திற்குப் பிறகு, நாய்கள் தங்களின் மனிதத் தோழமைகளைப் பார்க்கும்போது உண்மையிலேயே சிலிர்ப்படையும் என்று ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கண்ணீர், நாய்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்துவதாக கருதப்படுகிறது.

இந்த ஆய்வு 22 நாய்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து செய்யப்பட்டது. மேலும், இது அவற்றின் உரிமையாளர்களுடனும், அவற்றுக்கு தெரிந்த மற்றவர்களுடனும் மீண்டும் இணைந்த நாய்களின் எதிர்வினைகளை அடிப்படையாக கொண்டது.

இந்த கோட்பாட்டை சோதிப்பதற்காக, நாய்கள் தங்களின் உரிமையாளர்களுடன் இயல்பாக இருந்த போதும், அவற்றின் கண்களுக்குக் கீழே காகிதத் துண்டுகளை அசாபு பல்கலைக்கழகம் மற்றும் ஜிச்சி மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் வைத்தனர். அதே போல், ஐந்து முதல் ஏழு மணி நேரம் பிரிந்த பிறகு, அவர்களுடன் மீண்டும் சேர ஒரு நிமிடம் இருந்தபோதும், நாய்களின் கண்களுக்கு கீழே அவர்கள் காகிதத் துண்டுகள் வைத்தனர்.

நாய்கள் தங்கள் உரிமையாளர்களைப் பார்த்தபோது, அவை ஒரே நேரத்தில் கண்ணீர் சிந்துவதை அவர்கள் கண்டுபிடித்தனர். நாய்கள் தங்களுக்குப் பரிச்சயமானவர்களுடன் மீண்டும் இணைந்தபோது, உரிமையாளர்களை பார்த்தபோது வந்த அளவுக்கு கண்ணீர் வரவில்லை.

நாய்களின் கண்ணீர் அவைகளின் உணர்ச்சிகளுடன் இணைந்ததா என்பதைப் பார்க்க, அன்பு செலுத்துவதற்கு முக்கிய காரணமான ஆக்ஸிடாஸின் ஹார்மோன் கொண்ட ஒரு திரவத்தை நாய்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் செலுத்தினர்.

அதனை பயன்படுத்தியவுடன், நாய்களின் கண்ணீர் கணிசமாக அதிகரித்ததைக் கண்டறிந்தனர். நாய்கள் தங்கள் கண்ணீர் நரம்பிழைகளை சுத்தமாக வைத்திருக்க அழுகின்றன என்பது தெரிந்த விஷயம். அத்தகைய அழுகை அவற்றின் உணர்வுகளுடன் தொடர்புடையது அல்ல.

"விலங்குகள் தங்கள் உரிமையாளர்களுடன் மீண்டும் இணைவது போன்ற மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் ஆனந்த கண்ணீர் சிந்தும் என்பதைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை," என்று 'கரண்ட் பயாலஜி' இதழில் வெளியான இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான டேக்ஃபுமி கிகுசுய் கூறினார்.

தங்களின் செல்லப்பிராணிகள் வாலை அசைப்பது அல்லது முகத்தை நக்குவது பற்றி உரிமையாளர்களுக்கு நன்கு தெரியும். அதன் கண்ணீர் அவர்களையும் பாதிக்கின்றது. ஒரு நாயின் பார்வை ஆக்ஸிடாஸின் சுரப்பைத் தூண்டுகிறது. இதனால் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணியை இன்னும் கூடுதல் பாதுகாப்புடனும், அன்பாகவும் வளர்க்கிறார்கள்.

தங்கள் செல்லபிராணிகளை கண்ணீருடன் பார்த்தபோது உரிமையாளர்களும் மிகவும் அன்பாக இருப்பதை ஆய்வில் கண்டறிந்தனர். "அவர்களின் கண்ணீர் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும். மேலும் இது இணக்கப் பிணைப்புக்கு வழிவகுக்கும்," என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.