திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2020 (11:23 IST)

கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிப்பதால் குழந்தைக்கு சிக்கலா?

கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிக்கலாமா? அது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம்.

அதற்கு பதில் தருகிறது இக்கட்டுரை.

கர்ப்பிணிப் பெண்கள் அல்லது குழந்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் கேஃபைன் உட்கொள்ளுதலை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாலும் ஒரு நாளில் இரண்டு கப் தேநீரோ காபியோ பருகுவதில் தவறில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.

கர்ப்பமாக இருக்கும்போது இவ்வளவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற எந்த பாதுகாப்பு நிலையும் இல்லை என்று மருத்துவ சஞ்சிகையில் வெளியான புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.


ஆனால், சற்று எச்சரிக்கையுடன் கேஃபைனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்து.

நாள் ஒன்றுக்கு 200 மில்லி கிராம் அல்லது அதற்கும் குறைவான அளவு கேஃபைன் எடுத்துக்கொள்வது, கருச்சிதைவு அல்லது கருவில் இருக்கும் போது குழந்தை சரியாக வளர்வது தொடர்பான பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் எவ்வளவு கேஃபைன் உட்கொள்கிறார்கள் என்பதை கணக்கிடும் தொழில்நுட்பங்களும் வந்துவிட்டன.

இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை எழுதிய ஐஸ்லாந்தின் ரேக்ஜவிக் பல்கலைக்கழகத்தின் உளவலியலாளர் பேராசிரியர் ஜேக் ஜேம்ஸ், இந்த ஆய்வு கண்காணிப்பில் எடுக்கப்பட்டது என்றும் கர்ப்ப காலத்தில் கேஃபைன் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பதை நிச்சயமாக நிரூபிக்க முடியாது என்று தெரிவிக்கிறார்.


ஆனால், தான் செய்த ஆய்வுபடி, கர்ப்பிணி பெண்கள் தேநீர் அல்லது காஃபி பருகுவதை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது என அவர் பரிந்துரைக்கிறார்.

இதனை மற்ற வல்லுநர்கள் வலுவாக எதிர்கின்றனர்.

கேஃபைன் எடுத்துக்கொள்வதை கட்டுப்படுத்தலாம் என்றும் ஆனால் கர்ப்பத்தின்போது இதனை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது கிடையாது என பிரிட்டன் சுகாதார சேவை, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் மற்றும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் கல்லூரிகளின் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா காலத்தில் பிரசவம் - ஒரு கர்ப்பிணி பெண்ணின் அனுபவம்

இந்த ஆய்வறிக்கையில் அதிக எச்சரிக்கை இருப்பதாகவும் அதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லையென்றும் ஆஸ்திரேலியாவின் அடிலைட் பல்கலைக்கழகத்தின் மருந்தாளரான மருத்துவர் லூக் தெரிவிக்கிறார்.

"கர்ப்பமாக இருக்கும்போது எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அதெல்லாம்விட முக்கியம் அவர்களுக்கு பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு கேஃபைன் எடுத்துக்கொள்ளலாம் என்பதை புரியவைக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

லண்டன் கிங்க்ஸ் கல்லூரியின் மகப்பேறியியல் துறை பேராசிரியர் ஆண்டரூ ஷெனன் கூறுகையில், இதுபோன்ற சில ஆய்வறிக்கைகளில் தவறு இருக்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்

மேலும், தேநீர் மற்றும் காஃபி குடிப்பவர்களின் மற்ற வழக்கங்களை இதில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. உதாரணமாக புகைப்பிடித்தல்.

"மனிதர்களின் உணவுப் பழக்கத்தில், கேஃபைன் நீண்ட காலமாக இருந்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் இதனை அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது" என்று அவர் தெரிவிக்கிறார்.