புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2019 (17:55 IST)

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி: 35 ஆண்டுகளுக்கு பின் மலைக்கோட்டை நகரை கைப்பற்ற முனையும் திமுக

இந்தியாவில் முதல் தேர்தலில் இருந்தே, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாறாமல் இன்றும் இருந்து வருகிறது.
 

 
2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
 
தொகுதி மறுசீரமைப்புக்கு முன் திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை (தனி), சோழவந்தான், திண்டுக்கல், ஆத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இருந்தன.

தற்போதைய மக்களவை உறுப்பினராக அதிமுக-வின் எம். உதய குமார் உள்ளார்.
 
சபரிமலை ஐயப்பன் கோயில் சர்ச்சை களமாகியுள்ள பழனி
 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் எல்லா வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பின்னர் தோன்றியுள்ள பிரச்சனைகளை அடுத்து கவனம் பெற்றுள்ள இடமாக மாறியுள்ளது பழனி.

 
சபரிமலைக்கு செல்லும் பெண்களை பழனியில் தடுத்து நிறுத்துவதும், அங்கிருந்தே காவல்துறையினர் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து அழைத்து செல்லுவதும் வழக்கமாகியுள்ளதால், பழனி இந்த மக்களவை தேர்தலில் உற்றுநோக்கப்படும் இடமாக மாறியுள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் புகழ் பெற்ற முருகன் மலைக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, 2013ம் ஆண்டு சங்ககால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
இந்த சட்டமன்ற தொகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர். 9 இந்து வழிபாட்டுத்தலங்களும், 7 இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களும் உடைய இந்த தொகுதியில் கொடைக்கானல் உள்பட முக்கிய சுற்றுலா தளங்களான ஆறுகள், அணைகள் காணப்படுகின்றன.
 
மலர்கள் அதிகம் விளைகின்ற பகுதியாக இந்த மக்களவை தொகுதியில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி விளங்குகிறது. பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ள இந்த மக்கள் பூ பறித்தல், பூ தொடுத்தல் பூ வியாபாரம் போன்ற தொழில்களில் பரவலாக ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் மிகப் பெரிய மலர் சந்தைகளில் ஒன்று நிலக்கோட்டையில் உள்ளது.
 
அதிக மலர்கள் விளைவதால் இங்கு சென்ட் தொழிற்சாலை கொண்டு வர வேண்டுமென்பதும், வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டுமென்பதும் மக்களின் நெடுங்கால கோரிக்கையாக உள்ளது.
 
நிலக்கோட்டையில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற ஒரு சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த பிரச்சனையை முற்றிலும் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு மக்களால் வைக்கப்பட்டு வருகிறது.
 
 
திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்
 
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி இரண்டாம் இடம் கட்சி
 
1951 அம்மு சுவாமிநாதன் இந்திய தேசிய காங்கிரஸ் கிருஷ்ணசாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
 
1957 எம். குலாம் முகைதீன் இந்திய தேசிய காங்கிரஸ் எஸ். சி. பால கிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரஸ்
 
1962 டி. எஸ். சுந்தரம் ராமசந்திரன் இந்திய தேசிய காங்கிரஸ் எம். எஸ். அப்துல் காதர் திராவிட முன்னேற்ற கழகம்
 
1967 என். அன்பழகன் திராவிட முன்னேற்ற கழகம் டி. எஸ். எஸ். ராமமசந்திரன் இந்திய தேசிய காங்கிரஸ்
 
1971 எம். ராஜாங்கம் திராவிட முன்னேற்ற கழகம் கே. சீமசாமி சுதந்திர கட்சி
 
1973 கே. மாயத்தேவர் அண்ணா திராவிட கழகம் (இடைத்தேர்தல்) தகவல் இல்லை தகவல் இல்லை
 
1977 கே. மாயத்தேவர் அண்ணா திராவிட கழகம் ஏ. பாலசுப்பிரமணியன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
 
1980 கே. மாயத்தேவர் திராவிட முன்னேற்ற கழகம் வி. ராஜன் செல்லப்பா அண்ணா திராவிட கழகம்
 
1984 கே. ஆர். நடராஜன் அண்ணா திராவிட கழகம் கே. மாயத்தேவர் திராவிட முன்னேற்ற கழகம்
 
1989 சி. ஸ்ரீனிவாசன் அண்ணா திராவிட கழகம் என். வரதராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
 
1991 சி. ஸ்ரீனிவாசன் அண்ணா திராவிட கழகம் கே. மாயத்தேவர் திராவிட முன்னேற்ற கழகம்
 
1996 என். எஸ். வி. சித்தன் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) சி. ஸ்ரீனிவாசன் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
 
1998 சி. ஸ்ரீனிவாசன் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என். எஸ். வி. சித்தன் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)
 
1999 சி. ஸ்ரீனிவாசன் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எஸ். சந்திர சேகர் திராவிட முன்னேற்ற கழகம்
 
2004 என். எஸ். வி. சித்தன் இந்திய தேசிய காங்கிரஸ் எம். ஜெயராமன் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
 
2009 என். எஸ். வி. சித்தன் இந்திய தேசிய காங்கிரஸ் பி. பாலசுப்பிரமணி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
 
2014 எம். உதய குமார் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எஸ். காந்தி ராஜன் திராவிட முன்னேற்ற கழகம்
 
இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு நகராட்சியாகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது.
 
தயிர், வெண்ணெய்க்கும் ஒட்டன்சத்திரம் மிகவும் புகழ்பெற்றது. பாலில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதற்காக சுமார் 600 கடைகள் இருக்கும் மிக பெரிய சந்தை இங்குதான்உள்ளது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு தயிர் மற்றும் வெண்ணெய் அனுப்பப்படுகிறது,
 
இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கும் நிலையில், மக்காச்சோளம், புகையிலை, காய்கறிகள், மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, முருங்கை, பருத்தி, சூரியகாந்தி, கரும்பு உள்ளிட்ட பல பயிர்கள்பயிர் செய்யப்படுகின்றன.
 
முதல் மக்களவை தேர்தல் தொடங்கி தற்போது வரை காங்கிரஸ் 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) ஒரு முறையும், அதிமுக 8 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
 
1980ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் நேரிடையாக களமிறங்கி வெற்றிக்காணவில்லை.

35 ஆண்டுகளுக்கு பின்னர், திமுக இந்த தொகுதியில் நேரடியாக 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு இந்த தொகுதியை கைப்பற்றும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
 
காங்கிரஸோடு கூட்டணியின்போது, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸுக்கு திமுக அளித்து வந்தது.
 
அதனுடைய சிறந்த பயனாக 2004 முதல் 2009 என இரண்டு முறை என். எஸ். வி. சித்தன் வெற்றி பெற்றார்.
 
தண்ணீர் பிரச்சனை, விவசாயம் இங்குள்ள பொது பிரச்சனையாக இருப்பதால், விவசாயிகள் தங்களின் கடன்களை மன்னிப்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராடிய விவசாயிகளுக்கு எவ்வித முடிவும் கிடைக்காதது இந்த மக்களவைத் தொகுதியில் எதிரெலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.