வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 1 மே 2022 (13:49 IST)

இலங்கை பொருளாதார நெருக்கடி: நாட்டில் பழைய கார்கள் மட்டுமே ஓடுவது ஏன்?

BBC
இலங்கைச் சாலைகளில் புதிய கார்களைக் காண்பது அரிது. பளபளப்பாகத் தெரியும் சில கார்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவையாகவே இருக்கும். காரணம் இலங்கையில் புதிய மோட்டார் வாகனங்கள் எதுவும் கிடையாது.

இலங்கையில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அசெம்ப்ளிங் எனப்படும் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வாகனங்களைத் தயாரிக்கும் பணிகளும் பெரிய அளவில் கிடையாது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், ஜப்பானில் இருந்தும்தான் பெரும்பாலும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியச் சாலைகளில் சாதாரணமாகக் காண முடியாத பல வகையான கார்கள் இலங்கையில் உண்டு.

நேரடியாக இறக்குமதி செய்வதால் கூடுதலான மேம்பட்ட வசதிகளைக் கொண்ட வாகனங்கள் இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன.

2019-ஆம் ஆண்டு அரசுப் புள்ளி விவரங்களின்படி நாட்டில் சுமார் 80 லட்சம் மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன. இவற்றில் 46.7 லட்சம் இருசக்கர வாகனங்கள். 8.75 லட்சம் கார்கள்.

இலங்கையில் இப்போது பழைய கார்கள் மட்டும்தான் ஓடுகின்றன. ஏனென்றால் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்ட பல்வேறு பொருள்களில் மோட்டார் வாகனங்களும் அடங்கும். அந்நியச் செலாவணி நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு எடுத்தது.
BBC

இறக்குமதிக்குத் தடை, இலங்கையில் கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இல்லை என்பதால், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களே இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

புதிய வாகனங்கள் கிடைக்காததால் பழைய வாகனங்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. விலையும் இரண்டு மடங்கு வரை அதிகரித்திருக்கிறது. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வாகனத்தை அதைவிட அதிக விலைக்கு இப்போது விற்க முடியும்.

உதாரணத்துக்கு சுஸுகி நிறுவனத்தின் வேகன் ஆர் காரை எடுத்துக் கொண்டால் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதே காரை 60 லட்சம் ரூபாய்க்குக் கேட்பதாக பெயரைச் சொல்ல விரும்பாத வாகன உரிமையாளர் ஒருவர் கூறினார்.

இறக்குமதியை மட்டுமே சார்ந்திருப்பதால், இலங்கையில் வாகனங்களின் விலை இந்தியா போன்ற நாடுகளை விட அதிகம். தற்போதைய பொருளாதார நெருக்கடியும், இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே செல்வதும் விலை உயர்வுக்குக் கூடுதல் காரணங்கள்.

இப்போது ஒரு இந்திய ரூபாய்க்கு 4.57 இலங்கை ரூபாய் தர வேண்டும். அதாவது 60 லட்சம் ரூபாய்க்கு இலங்கையில் விற்கப்படும் காரின் இந்திய ரூபாய் மதிப்பு 13 லட்சம். ஆனால் இதுவே ஒப்பீட்டளவில் மிக அதிகம்.

பழைய கார்களை விற்பனை செய்யும் இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் 2018-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வேகன்ஆர் காரின் விலை 61 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது வாங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கார் இரண்டு மடங்குக்கு விலை பேசப்படுகிறது.

இருப்பினும் தங்களிடம் இருக்கும் கார்களை விற்பதற்கு பலர் முன்வருவதில்லை. மீண்டும் புதிய காரையோ, வேறு பழைய காரையோ வாங்க முடியாது என்பதால், பழைய கார்களையே புதுப்பித்து பயன்படுத்தி வருகிறார்கள்.
BBC

கார்கள் மட்டுமல்லாமல், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் போன்றவற்றுக்கும் இதை நிலைதான்.

"புதிய இரு சக்கர வாகனங்கள் வருவதில்லை. அதனால் பழைய வண்டியையே பழுதுநீக்கி பயன்படுத்தி வருகிறேன். 60 ஆயிரம் ரூபாய்க்கு வண்டியை வாங்கினேன். இப்போது 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு கேட்கிறார்கள். ஆனால் இதைக் கொடுத்துவிட்டால், வேறு வண்டி கிடைக்காது" என்கிறார் இருசக்கர வாகனம் வைத்திருக்கும் ஜீவன்.

வாகனங்கள் பழையதாகிக் கொண்டிருப்பதால், அவற்றைப் பழுதுநீக்கும் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் உதிரி பாகங்களின் விலை இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.

"இரு ஆண்டுகளுக்கு முன்பு 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆட்டோ கிளட்ச்சின் விலை இப்போது 16 ஆயிரம் ரூபாய்," என்கிறார் ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றும் ஜாஃபர்.

இதுவரை புதிய கார்களை விற்றுவந்த பல்வேறு நிறுவனங்கள் இப்போது பழைய கார்களை மட்டுமே விற்பனை செய்யும் வகையில் தங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன.

"நாங்கள் புதிய கார்களை விற்கும் ஷோரும் வைத்திருக்கிறோம். ஆனால் கார் இறக்குமதி இல்லாததால் பழைய கார்களை மட்டுமே இப்போது விற்க முடிகிறது." என்கிறார் கார் விற்பனை நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றும் வசீம்.

"2015-ஆண்டு தயாரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ காரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 70 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். இப்போது இதன் விலை 2 கோடியே 15 லட்சம் ரூபாய்"

பழைய கார்களின் விலை அதிகமாக இருக்கிறது என்பதற்காக அதன் விற்பனை சிறப்பாக இருக்கிறது என்று கூற முடியாது என்கிறார் வசீம். "வாகனங்களை வாங்குவதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டிருக்கிறது. அதிக விலை என்பதால் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது"

பழைய வாகனங்கள் என்பதால் கடனில் வாங்குவதிலும் சிக்கல் இருக்கிறது. "கடன் வழங்கும் நிறுவனங்கள் வாகனங்களுக்கு 50 சதவிகித விலை மதிப்பீடு செய்வதால் மீதிப் பணத்தை ரொக்கமாகக் கட்ட வேண்டியிருக்கிறது" என்கிறார் கார் விற்பனை நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றும். அர்ஜுன விஜயசிங்க.