வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2020 (08:34 IST)

தோனி: 16 ஆண்டுகளாக தலைப்பு செய்திகளின் நாயகனாக இருப்பது எப்படி?

மும்பை வாங்கடே மைதானத்தில், 2011-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இலங்கை பந்துவீச்சாளர் குலசேகரா வீசிய பந்தை இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடிக்க, அந்த மைதானம் மட்டுமல்லாமல் இந்தியாவே ஆரவாரத்தில் அதிர்ந்தது.

இந்தியா 28 ஆண்டுகளுக்கு பிறகு (முன்னதாக 1983) உலகக்கோப்பையை வெல்ல காரணமாக அமைந்த அந்த சிக்ஸர், ஆட்டத்தின் இறுதி ஓவருக்கு முந்தைய ஓவரில் அடிக்கப்பட்டது.

இந்த சிக்ஸரை அடித்த தோனி, இதேபோல் எண்ணற்ற போட்டிகளில் இறுதி ஓவர்களில் அதகளம் நடத்தியவர்தான்.


கேப்டன் கூல், தல, எம்எஸ்டி என ரசிகர்களால் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளான இன்று (ஜூலை 7) அவரது எண்ணற்ற ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரை வாழ்த்தியுள்ளனர். ட்விட்டர் போன்ற சமூக ஊடகத்தில் அவரது பிறந்தநாள் தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளன.

யார் இந்த தோனி? எப்படி ஆரம்பித்தது பயணம்?

1981-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி ராஞ்சியில் பிறந்த தோனி, இளம் வயதில் அதிகம் விளையாடியது கால்பந்து மற்றும் பாட்மிண்டன் ஆகியவையே.

தோனி படித்த பள்ளியின் கிரிக்கெட் அணியில் வழக்கமாக விளையாடும் விக்கெட் கீப்பர் ஒரு போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட, அந்த போட்டியில் தோனி விக்கெட் கீப்பராக விளையாடினார். அப்படி ஆரம்பித்ததே அவரது கிரிக்கெட் வாழ்க்கை.

பள்ளியில் விளையாடும்போது தோனியின் பேட்டிங்கிற்கும், அவரது பிரத்தியேக ஷாட்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

மிகவும் சாதாரணமான பின்னணியில் பிறந்து வளர்ந்த தோனிக்கு சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை.

சிசிஎல், பிகார், ஜார்க்கண்ட் இந்தியா ஏ, கிழக்கு மண்டலம் என பல அணிகளில் விளையாடிய தோனியின் பெயர், 2000 முதல் இந்தியா மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிகளில் இடம்பெற வாய்ப்புள்ளவர்கள் குறித்த செய்திகளில் தொடர்ந்து இடம்பெற்றது.

சச்சின் - தோனி : என்ன ஒற்றுமை?
ஆனால் 2004 டிசம்பரில் தான், இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் தோனியால் விளையாட முடிந்தது. அந்த போட்டியில் நடந்தது என்ன தெரியுமா?

கிரிக்கெட் ஜாம்பவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கருக்கும், தோனிக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக சிறந்த வீரர்களாக கருதப்படும் இவர்கள் இருவரும் தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.

வங்கதேச அணிக்கு எதிராக 20004-இல் நடந்த தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் தோனி வெளியேறினார்.

எனினும் இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து சில வாய்ப்புகளை அணித்தலைவர் கங்குலி அளித்தார். 2005-இல் விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி 148 ரன்கள் குவித்து கவனம் பெற்றார்.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அதே ஆண்டில் இலங்கையுடன் நடந்த போட்டியில் 183 ரன்களை எடுத்த தோனி அணியில் தனது இடத்தை மேலும் வலுவாக்கினார்.

ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, 2007 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய காலகட்டத்தில் தோனி உள்பட பல இந்திய வீரர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அந்த ஆண்டில் நடந்த முதல் டி20 உலக கோப்பை தொடரில், டிராவிட், சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் விளையாடாத நிலையில், இளம் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்றது தோனிக்கு அதிக பாராட்டுகளை பெற்றுத் தந்தது.


2007 டி20 மற்றும் 2011 ஐசிசி உலக கோப்பைகளை தோனியின் தலைமையில் இந்தியா வென்றுள்ளது அவரது தலைமைக்குப் பாராட்டுகளை தந்தது.

2013 ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. .2010 மற்றும் 2016 ஆகிய இருமுறைகள் இந்தியா ஆசிய கோப்பையை வென்றதும் இவரது தலைமையில் தான்.

இவை ஒருபுறமிக்க, உலக அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஐபிஎல் தொடர்களிலும் தோனியின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் வெகுவாக புகழப்பட்டது.

2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களை அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வென்றது.சென்னை மற்றும் தமிழகத்தில் தோனிக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

தோனி மீதான விமர்சனங்கள் என்ன?

அதேவேளையில் 2011-இல், இங்கிலாந்தில் நடந்த 4 டெஸ்ட் தொடரில் 0-4 என தோனி தலைமையிலான தோல்வியடைந்தது. 2011-12-இல் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா மீண்டும் 0-4 என் தோல்வியடைந்தது.

இந்த காலகட்டத்தில் தோனியின் தலைமை மீதும், டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் குறித்தும் முதல்முறையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

2012-இல் இந்தியா வந்த இங்கிலாந்து அணியிடம் மீண்டும் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்தது. 2014-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் ஒய்வு பெற போவதாக தோனி அறிவித்தார்.

பின்னர் 2017-இல் ஒருநாள் மற்றும் டி20 போட்டி கேப்டன் பதவிகளில் இருந்தும் விலகும் முடிவை தோனி அறிவித்தார்.

அதன் பிறகு, 2019 ஐசிசி உலகக்கோப்பை தொடர் வரை, இந்திய அணியில் விக்கெட் கீப்பர் அல்லது பேட்ஸ்மேனாக மட்டும் தோனி இடம்பெற்று வந்தார்.

மிகவும் எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்து, இந்திய அணிக்கு தலைமையேற்று பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் பல பரிணாமங்களில் முத்திரை பதித்துள்ள தோனியின் பேட்டிங், தலைமை பண்பு மற்றும் ஹெலிகாப்டர் ஷாட்கள் போன்றவை நீண்ட காலமாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளன.

கடந்த காலங்களில் அவர் குடும்ப புகைப்படங்கள் போன்றவையும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன.

இனி தோனி?

அதேவேளையில், தற்போது தோனியால் இந்திய அணியில் இனி விளையாட முடியுமா என்ற கேள்வியும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக 2019 ஐசிசி உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியுற்று இந்தியா வெளியேறிய சூழலில், அதற்கு பிறகு நடந்த எந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் தோனி அணியில் இடம்பெறவில்லை.

அவர் ஓய்வு பெறப் போகிறார் என அவ்வப்போது செய்திகள் வெளிவந்தாலும், ஒய்வு பெறுவது குறித்து தோனி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர், இறுதி ஓவர்களில் அற்புதமாக விளையாடிப் பல போட்டிகளில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர், 2 உலக கோப்பைகளை வென்ற இந்திய அணிகளுக்கு தலைமை தாங்கியவர் என தோனி குறித்து அவரது ரசிகர்கள் நினைவுகூர்வதுண்டு.

தான் அறிமுகமான 23 வயதில் விரைவாக விக்கெட்டுகளுக்கு இடையே ஓடிய தோனி, தற்போதும் அதே வேகத்துடன் ஓடுகிறார். அதே ஹெலிகாப்டர் ஷாட், அதே இறுதி ஓவர் சிக்ஸர்கள், அதே தோனிதான். ஆனால், மிகவும் பண்பட்டவராக, அனுபவமும், முதிர்ச்சியும் கொண்டவராக அணியினரை வழிநடத்துகிறார் என அவர் ரசிகர்கள் மற்றும் சில விளையாட்டு விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தனது முதல் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல், ரன் அவுட்டான தோனி, தான் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டியில் (2019 ஐசிசி உலகக்கோப்பை அரையிறுதி போட்டி) ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலின் மிக அருமையான த்ரோவால் ஆட்டமிழந்தார். அத்துடன் இந்தியாவின் உலக கோப்பை பயணமும் முடிவடைந்தது.

இந்நிலையில், இதுவே அவரது கடைசி போட்டியாக இருக்குமா என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு, இந்தாண்டு நடக்க வேண்டிய டி20 உலக கோப்பை தொடர் உள்ளிட்ட பல போட்டிகள் நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இனி எப்போது சர்வதேச போட்டிகளில் இந்தியா விளையாடும் என்று தற்போதைய சூழலில் தெளிவாக தெரியாத சூழலில், அப்படி விளையாடும் பட்சத்தில் அந்த அணியில் தோனி இடம்பெறுவாரா அல்லது அவரது ஒய்வு அறிவிப்பை வெளியிடுவாரா என செய்திகள் அவ்வப்போது வெளிவந்தவண்ணமுள்ளன.

ஆனால், மிகவும் நெருக்கடியான தருணங்களை எண்ணற்ற முறைகள் நிதானமாக எதிர்கொண்டு வெற்றி பெற்ற தோனி இம்முறையும் அவ்வாறு வெல்வார் என்கின்றனர் அவரது ரசிகர்கள். அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது இனி வரும் மாதங்களில் தெரியவரும்.