‘தல’ தோனி மற்றும் இறுதி ஓவர்கள் - என்றும் மாறாத காதல் கதை

dhoni
Last Modified வெள்ளி, 28 ஜூன் 2019 (21:27 IST)
011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இலங்கை பந்துவீச்சாளர் குலசேகரா வீசிய பந்தை இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடிக்க, மும்பை வாங்கடே மைதானம் மட்டுமல்லாமல் இந்தியாவே ஆரவாரத்தில் அதிர்ந்தது
இந்தியா 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வெல்ல காரணமாக அமைந்த அந்த சிக்ஸர் ஆட்டத்தின் இறுதி ஓவருக்கு முந்தைய ஓவரில் அடிக்கப்பட்டது.
 
இந்த சிக்ஸரை அடித்த தோனி, இதேபோல் எண்ணற்ற போட்டிகளில் இறுதி ஓவர்களில் அதகளம் நடத்தியவர்தான்.
 
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வியாழக்கிழமை மான்செஸ்டர் நகரில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரன்கள் குவிக்க தடுமாறியது.
 
240 ரன்கள் எடுக்கமுடியுமா என போராடிய அணியின் பேட்டிங், தோனி மற்றும் பாண்ட்யா இணையால் இறுதி ஓவர்களில் வலுவான ஸ்கோரை எட்டியது.
 
குறிப்பாக தோனியின் இறுதி ஓவர் விளாசல் அலாதியானது. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பொறுமையாக விளையாடிய தோனி, அதிக அளவு பந்துகளை வீணடித்துவிட்டார் என்று சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டார்.
 
மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தாமஸ் வீசிய முதல் பந்தை தோனி மிட்விக்கெட் திசையில் சிக்ஸராக மாற்ற இந்திய ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
 
இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் ஒரு ரன் எடுக்க வாய்ப்பிருந்தும் அதை எடுக்காத தோனி, ஓவரின் எஞ்சிய பந்துகளை தானே சந்திக்க முடிவெடுத்தார்.
 
நான்காவது பந்து பவுண்டரியாக, ஒருநாள் போட்டிகளில் தனது 72-வது அரைசதத்தை பதிவுசெய்த தோனி, அடுத்த இரண்டு பந்துகளுக்கு காத்திருந்தார்.
 
ஐந்தாவது பந்து யார்க்கராக அமைய, இறுதிப்பந்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
 
தாமஸ் வீசிய அந்த கடைசி பந்தை தோனி மீண்டும் சிக்ஸருக்கு விரட்ட, ஆரவாரத்தில் திளைத்த ரசிகர்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை. கடந்த 15 ஆண்டுகளில் எண்ணற்ற முறைகள் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இறுதி ஓவர்களில், குறிப்பாக கடைசி ஓவரில் தோனியின் பிரத்யேக 'ஹெலிகாப்டர்' ஷாட்கள் மற்றும் அதிரடி சிக்ஸர்கள் வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது.
 
கடைசி ஓவர் வரை எத்தனை பந்துகள் வீணடிக்கப்பட்டு இருந்தாலும், கடைசி ஓவரில் தோனி இருந்தால், எந்த பந்துவீச்சாளரும் அச்சம் கொள்வார்.
 
அதேவேளையில் இறுதி ஓவர்களில் தேவைப்படும்போது மிக விரைவாக ஓடி ஒரு ரன்னை இரண்டு ரன்னாக மாற்றுவது, இரண்டு ரன்களை மூன்றாக மாற்றுவது, தோனியின் மற்றொரு சிறப்பு அம்சம்.
 
15 ஆண்டுகளாக பரவசப்படுத்தும் 'ஹெலிகாப்டர்' ஷாட்கள்
 
தனது 23-வது வயதில், முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய தோனிக்கு வரும் ஜுலை மாதம் 38 வயது பூர்த்தியாகவுள்ளது. இதுதான் அவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பை என்றும், நடப்பு உலகக்கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெறக்கூடும் என்று கூறப்படுகிறது.
 
இவை உண்மையாக அமையுமா என்பது தோனிக்கு மட்டும்தான் தெரியும். ஆனால், 23 வயதில் விரைவாக விக்கெட்டுகளுக்கு இடையே ஓடிய தோனி, தற்போதும் அதே வேகத்துடன் ஓடுகிறார். அதே ஹெலிகாப்டர் ஷாட், அதே இறுதி ஓவர் சிக்ஸர்கள், அதே தோனிதான். ஆனால், மிகவும் பண்பட்டவராக, அனுபவமும், முதிர்ச்சியும் கொண்டவராக அணியினரை வழிநடத்துகிறார்.
 
அணியின் தலைவராக விராட் கோலி இருந்தபோதிலும், பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குவது மற்றும் பீல்டர்களை சரியான இடத்துக்கு நகர்த்துவது என தோனியின் பங்களிப்பு தொடர்வதை தொலைக்காட்சியில் அனைவரும் பார்த்திருக்கமுடியும்.
 
இளம் வயதில் நீண்ட தலைமுடியும், முகம் முழுவதும் தெறிக்கும் சிரிப்புமாக காணப்பட்ட தோனியின் நடையுடை பாணிகள் மாறிவிட்டன. மாறாதது கடைசி ஓவர்களில் தொடரும் அவரின் அதிரடியும், ரசிகர்களுக்கு அவர் மீதான நம்பிக்கையும்தான்.
 
'தோனி ஒரு சகாப்தம்''
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் மெதுவாக பேட் செய்தார் என்று தோனி மீது சிலரால் விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் குறித்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
 
மான்செஸ்டர் போட்டி முடிந்தபிறகு பேசிய அணித்தலைவர் விராட் கோலி கூறுகையில், ''தோனி ஒரு சகாப்தம். ஒரு போட்டியில் அவர் சரிவர விளையாடாவிட்டாலும் அனைவரும் பேச ஆரம்பித்துவிடுகின்றனர். ஆனால், அணியினருக்கு அவர் மீது எப்போதும் அலாதியான நம்பிக்கை உண்டு,'' என்று கூறினார்.
 
''எந்த சூழலில் எப்படி விளையாடவேண்டும், எது அணிக்கு போதுமான ஸ்கோராக இருக்கும் என்று அனைத்தையும் அறிந்தவர் தோனி. தனது அனுபவம் மற்றும் கிரிக்கெட் குறித்த அபார புரிதலால் ஏராளமான போட்டிகளில் அணியை வெற்றிபெற வைத்துள்ளார். அதேபோல் அணியை வழிநடத்தியும் உள்ளார்,'' என்று கோலி மேலும் கூறினார்.
 
உலகக் கோப்பை கிரிக்கெட்டும், மலைக்கவைக்கும் அதன் வணிகமும்
 
அதிரடி பேட்டிங் மட்டுமல்ல, அவரது அணி பந்துவீசும்போதும் தோனியின் பங்கு அதிகமாக இருந்துள்ளது. எதிரணி பேட்ஸ்மேன்களின் பலவீனம் மற்றும் பிட்ச்சின் தன்மை குறித்து மிக சரியாக கணிக்கும் தோனியின் ஆலோசனைகள் எண்ணற்ற முறை இந்தியாவுக்கு விக்கெட்டுகளை பெற்றுத்தந்துள்ளது.
 
ஆரம்ப காலங்களில் மஹி என்றும், எம் எஸ் டி , தி ஃபினிஷர் என்றும் அழைக்கப்பட்ட தோனி, பிற்காலத்தில் 'கேப்டன் கூல்' என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களால் புகழப்பட்டார். தற்போது அவரை ரசிகர்கள் குறிப்பிடுவது 'தல' என்ற ஒற்றை சொல்லால்தான்.
 
தல என்றால் தலைமை தாங்குபவர் அல்லது வழிநடத்துபவர் என்று பொருள். ஆம், இந்தியா 2019 உலகக்கோப்பையை வெல்ல அணியை தோனி வழிநடத்துவார் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
 


இதில் மேலும் படிக்கவும் :