என்ன இந்த கிழி கிழிக்கிறாய்ங்க? சச்சினை வறுத்தெடுத்த தோனி ரசிகர்கள்

sachin dhoni
Last Updated: செவ்வாய், 25 ஜூன் 2019 (15:31 IST)
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி மோசமாக விளையாடினார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சொன்னது தோனி ரசிகர்களிடையே கோபத்தை கிளப்பியுள்ளது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான உலக கோப்பை போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா மோசமான ஆட்டத்தை தந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா வெறும் 224 ரன்களே பெற்றிருந்தது. இருந்தாலும் அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானை தனது அபாரமான பந்துவீச்சினால் நிலைகுலைய செய்தது. முகமது சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா, பாண்ட்யா, சஹால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தனர்.

இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளையே வென்ற இந்தியா, சிறிய அணியான ஆப்கானிஸ்தானிடம் நூலிழையில் வெற்றிபெற்றது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் “இந்தியாவின் இன்றைய ஆட்டம் ரொம்ப மோசமாக இருந்தது. தோனி போன்ற அனுபவமிக்க கிரிக்கெட்டர்கள் 52 பந்துகளுக்கு வெறும் 28 ரன்கள் எடுப்பது மோசமானது. கேதர் ஜாதவ், தோனி கூட்டணி மிகவும் மந்தமாக விளையாடியது” என தெரிவித்திருந்தார்.

இதனால் கடுப்பான தோனியின் ரசிகர்கள் சச்சினின் கிரிக்கெட் வரலாற்றை தூசி தட்டி எடுத்து திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ”சச்சின் தனது சாதனைகளை வெளிக்காட்டி கொண்டாரே தவிர அணியை பற்றி கவலைப்படவில்லை. இப்போதுகூட ஒழுங்காக கிரிக்கெட் விளையாட தெரியாத தனது பையனை இந்திய அணியில் சேர்த்துவிட முயற்சித்து கொண்டிருக்கிறார்” என ட்விட்டரில் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் “தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஹிட் அடித்ததென்றும், சச்சினின் வாழ்க்கை வரலாறு படம் ஓடவேயில்லை என்றும் கிண்டலடித்து வருகிறார்கள்.

இதனால் கடுப்பான சச்சின் ரசிகர்கள் சிலர் அடுத்து தோனியை கிண்டலடித்து பதிவுகள் போட தொடங்கியுள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் சச்சின் Vs தோனி ரசிகர்கள் சண்டை வெடித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :