ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழப்பு
பந்திப்பூர் காட்டுப்பகுதியில் ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்ததாக, 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த யானையின் உடல் கபினி அணை அருகே குழித்தோண்டி புதைக்கப்பட்டது.
அச்செய்தியில், "கபினி அணையின் பின்புறம் உள்ள நாகரஒலே, பந்திப்பூர் வனப்பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. அந்த யானை 'போகேஸ்வரன்', 'கபினி' என பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்தது. இந்த யானை மிக நீளமான தந்தங்களை உடையது. அதாவது இது, ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் உடைய காட்டு யானை ஆகும். அதன் தந்தங்கள் சுமார் 7 அடி முதல் 8 அடி வரை இருக்கும். தும்பிக்கை போன்று தரையில் படும் அளவுக்கு அதன் தந்தங்கள் இருக்கும்.
68 வயதான போகேஸ்வரன் யானை, பந்திப்பூர் வனப்பகுதியில் நேற்று இறந்த நிலையில் கிடந்தது. நேற்று முன்தினம் வனத்துறை ஊழியர்கள் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்துக்குட்பட்ட குன்றே வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள போகேஸ்வரர் கோவில் அருகே 'போகேஸ்வரன்' காட்டு யானை இறந்து கிடந்தது.
இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வனத்துறையினர், யானையின் 2 தந்தங்களை வெட்டி எடுத்தனர். இதையடுத்து அதேப்பகுதியில் யானையின் உடலை கபினி அணை அருகே குழித்தோண்டி புதைத்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.