செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (14:54 IST)

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் 75 கோடி தயார் நிலையில் - ஏன்? எதற்காக?

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண அதிகாரிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை பறக்கவிடும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

என்னது? இருக்கும் கொசுக்களால் படும் அவதி போதாதென்று புதிதாக கோடிக்கணக்கான கொசுக்களை பறக்கவிடுவதா? இது ஏன் என்று கேட்கிறீர்களா?

நீங்கள் நினைப்பதை போல இவை சாதாரணமான கொசுக்கள் அல்ல. டெங்கு, ஜிகா வைரஸ் உள்ளிட்ட நோய்களை மனிதர்களுக்கு பரப்பும் கொசு வகைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த வகை கொசுக்கள் பறக்கவிடப்படவுள்ளன.

இதனால் எதிர்பார்க்காத பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததன் காரணமாக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பொது மக்களை கொண்டு நடத்தப்படும் "ஜுராசிக் பார்க் பரிசோதனை" என்றும் இதனால் இயற்கை மண்டலத்துக்கு கடும் சேதம் ஏற்படக்கூடும் என்றும் செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த திட்டத்தை முன்னெடுத்து வரும் நிறுவனமோ, அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை சுட்டிக்காட்டி, இதனால் மனிதர்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கி சில மாதங்களே ஆன நிலையில், 2021ஆம் ஆண்டு ஃபுளோரிடா கீஸ் என்னும் பகுதியில் சுமார் 75 கோடி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பறக்கவிடும் திட்டத்திற்கான அனுமதியை உள்ளூர் அரசு அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

கடந்த மே மாதம் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு அமெரிக்காவில் செயல்படும் ஆக்ஸிடெக் என்னும் நிறுவனத்திற்கு OX5034 என்றழைக்கப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி வழங்கியது.

அதாவது, இந்த ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள்தான் மனிதர்களுக்கு டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை பரப்புவதாக அறியப்படுகிறது.

முட்டைகளை உற்பத்தி செய்ய இரத்தம் தேவை என்பதால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடிக்கின்றன. எனவே இந்த திட்டத்தின்படி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் விடுவிக்கப்படும். பின்பு அவை பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்.

அந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்களுக்குள் இருக்கும் ஒருவித புரதம், பெண் கொசு மனிதர்களை கடிக்கும் நிலையை அடையும் முன்பே அவற்றை கொன்றுவிடும். ஆனால், பூக்களிலுள்ள தேனை மட்டுமே அருந்தும் ஆண் கொசுக்கள் தொடர்ந்து வாழ்ந்து அதன் மரபணுக்களை பரப்பிக்கொண்டே இருக்கும்.

இந்த முறையின் மூலம், காலப்போக்கில் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களின் அளவை குறைத்து அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்ப்பாதிப்பை கட்டுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, ஃபுளோரிடா கீஸில் அடுத்த இரண்டாண்டுகளில் 75 கோடி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பறக்கவிடுவதற்கு அங்குள்ள கொசுக்கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த திட்டத்திற்கு எதிராக Change.org இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ள சுமார் இரண்டரை லட்சம் பேர், ஆக்ஸிடெக் நிறுவனம் "அமெரிக்காவை சோதனை களமாக" பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனினும், இதுதொடர்பாக தனது இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம், இதே முறையை பிரேசிலில் தாங்கள் சோதனை முறையில் முயற்சித்து பார்த்ததாகவும் அதில் சாதகமான முடிவுகள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 2021ஆம் ஆண்டு செயல்படுத்துவதற்கு அமெரிக்க நடுவணரசின் அனுமதியை ஏற்கனவே பெற்றுவிட்டதாகவும், ஆனால் மாகாண மற்றும் உள்ளூர் அரசு நிர்வாகங்களிடமிருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.