வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (15:28 IST)

அமெரிக்க அரசு மீது சைபர் தாக்குதல்: முக்கியத் துறைகள், முகமைகள் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை

ஒரு பெரிய சைபர் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை, அமெரிக்க அதிகாரிகள் இந்த வாரம் கண்டுபிடித்தனர். இந்த தாக்குதலால், அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.

அமெரிக்க கருவூலம் மற்றும் வணிகத் துறையும் இந்த சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டது.

இந்த சைபர் தாக்குதலைத் தடுப்பது மிகவும் சிக்கலானது என, அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்புப் பாதுகாப்பு முகமை (சி.ஐ.எஸ்.ஏ) கூறியுள்ளது.

ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பலரும் சந்தேகிக்கிறார்கள். ஆனால் ரஷ்யா இதை மறுத்திருக்கிறது.

மிக நுட்பமான, தொடர் தாக்குதல் இது எனவும், இந்த சைபர் தாக்குதலில் அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அரசு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், நேற்று (டிசம்பர் 17, வியாழக்கிழமை) சி.ஐ.எஸ்.ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல், குறைந்தபட்சமாக கடந்த மார்ச் 2020-ல் தொடங்கி இருக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த சைபர் தாக்குதலுக்குப் பின் யார் இருக்கிறார்கள்? எந்த முகமைகள் மற்றும் அமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடந்தது, என்ன மாதிரியான விவரங்கள் திருடப்பட்டன அல்லது வெளிப்பட்டன என எதையும் சி.ஐ.எஸ்.ஏ அமைப்பு கண்டுபிடிக்கவில்லை.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன், தன் நிர்வாகத்தில் சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

முதலில் சைபர் தாக்குதல்களை நடத்தும் எதிரிகளை நாம் தடுக்க வேண்டும். நம் கூட்டாளிகள் மற்றும் நம் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, இதுபோன்ற தீங்கிழைக்கும் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் மீது கணிசமான அபராதங்களை விதிப்பதன் மூலம், அதைச் செய்வோம் எனக் கூறினார் ஜோ பைடன்.

சைபர் தாக்குதலின் பின்புலம் என்ன?

சில அமெரிக்க அரசு முகமைகள், இந்த சைபர் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த தாக்குதல் இப்போதும் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள், குறைந்தபட்சமாக அமெரிக்காவின் உள் துறை, பாதுகாப்புத் துறை, உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை, கருவூலம், வணிகம் போன்ற துறைகளின் தரவுகளைக் வேவு பார்த்திருக்கலாம் என ராய்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிடுகிறது.

அமெரிக்காவின் எரிசக்தித் துறை மற்றும் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத் துறை ஆகியவை தொடர்புடைய நெட்வொர்க்குகளில், தாக்குதல் நடத்தியவர்கள் நுழைந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, பொலிடிகோ இதழில் செய்தி வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சோலார் விண்ட்ஸ் என்கிற ஐடி நிறுவனத்தின், நெட்வொர்க் மேனேஜ்மெண்ட் மென்பொருளைப் பயன்படுத்திதான், சைபர் தாக்குதல் நடத்தியவர்கள், அமெரிக்காவின் முக்கிய கணிணிகளில் நுழைந்து இருப்பதாக சி.ஐ.எஸ்.ஏ அமைப்பு கூறியது.

சுமாராக 18,000 சோலார் விண்ட்ஸ் ஓரியன் வாடிக்கையாளர்கள், தங்களின் நெட்வொர்க் மேனேஜ்மெண்ட் மென்பொருளின் வெர்சனை புதுப்பித்திருக்கிறார்கள். இந்த புதிய வெர்சனில் இருக்கும் பாதுகாப்புக் குறைவைப் பயன்படுத்தி, தாக்குதல் நடத்தியவர்கள், கணிணிக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

எனவே, இந்த வாரத்தின் தொடக்கத்தில், சோலார் விண்ட்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் மேனேஜ்மெண்ட் மென்பொருளை, தங்களின் சர்வர்களிலிருந்து நீக்குமாறு, அமெரிக்காவின் அனைத்து சிவில் முகமைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

சோலார் விண்ட்ஸ் நிறுவனத்தின் மென்பொருளைத் தவிர, வேறு ஏதாவது வழிகளில் தாக்குதல் நடத்தியவர்கள் நுழைந்திருக்கிறார்களா? என்பதை சி.ஐ.எஸ்.ஏ அமைப்பு விசாரித்து வருவதாக, நேற்று (டிசம்பர் 17, வியாழக்கிழமை) வெளியான செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

சி.ஐ.எஸ்.ஏ அமைப்போ அல்லது எஃப்.பி.ஐ அமைப்போ, இதுவரை யார் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என எதையும் குறிப்பிடவில்லை. அனால் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், ரஷ்யாவைக் கை காட்டுகிறார்கள்.

"சைபர் துறையில், எந்த ஒரு தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை" என தன் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறது அமெரிக்காவில் இருக்கும் ரஷ்ய தூதரகம். இந்த செய்திக் குறிப்பு சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டிருக்கிறது.