திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (14:29 IST)

இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கடி - நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது ஆளும் கூட்டணி

Rajapaksa
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால், ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் தொடர்ந்து விலகி வருகின்றன. இதனால், பெரும்பான்மையை ராஜபக்ஷ அரசு இழந்துள்ளது.

இலங்கை மக்கள் பாரியளவிலான போராட்டங்களை ஆரம்பித்து, நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் சூழ்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கூடியுள்ளது. நாடாளுமன்றம் கூடிய வேளையில், அமைச்சர்கள் இல்லாமை குறித்து எதிர்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டன.நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைக்கு பதில் வழங்க சபையில் எவரும் கிடையாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.எனினும், அனைத்து பிரச்சினைகளுக்கும் பதிலளிக்கும் பொறுப்பு பிரதமர் வசம் காணப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார். எனினும், பிரதமரே செய்வதறியாதுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க, சபாநாயருக்கு பதிலளித்தார்.

அடுத்தடுத்து விலகும் கூட்டணிக் கட்சிகள்

இலங்கையில் ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த 10 கட்சிகள், கடந்த சில காலமாகவே சுயாதீனமாக செயற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறுகின்றார்.

இந்த 10 கட்சிகளை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொடர்ச்சியாகவே அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, விமல் வீரவங்ச, உதய பிரபாத் கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டிரான் அலஸ், அத்துரெலிய ரத்த தேரர், கிவிது குமாரதுங்க, வீரசுமன வீரசிங்க, அசங்க நவரத்ன, மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ, காமினி வலேபொட, ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, கயாசான், ஜயந்த சமரவீர ஆகியோர் சுயேட்சையாக நாடாளுமன்றத்தில் செயற்படவுள்ளதாக தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதியும் விலகல்

இதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளது. தமது கட்சியிலுள்ள 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று முதல் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.இதேவேளை, ஆட்சி பீடத்திலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் கூட்டணி வகித்த கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.;இதன்படி, இன்று (05) முதல் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக சபையில் அறிவித்தனர். இதன்படி, அரசாங்கம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை இழந்துள்ளது.

உறுப்பினர்கள் விபரம்

ஆளும் அரசாங்கத்தில் கூட்டணியில் 149 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்ததுடன், எதிர்கட்சிகளில் இருந்தவாறே அரசாங்கத்திற்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.இதன்படி, அரசாங்கத்தில் அங்கம் வகித்த 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அரசாங்கத்தை விட்டு வெளியேறி, சுயேட்சையாக செயற்படவுள்ளதாக சபையில் அறிவித்தனர். இதன்படி, 149 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இன்று 105 ஆசனங்களையே சபையில் கொண்டுள்ளது.113 ஆசனங்களே இலங்கை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை என்பதுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று பெரும்பான்மையை இழந்துள்ளது.