திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (16:46 IST)

கொரோனா வைரஸ்: ’உலகம் முழுவதும் பரவும் அபாயம்’ - Coronavirus news

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை இல்லை என்றாலும், உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தென் கொரியா, இத்தாலி, இரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதால் அங்கு இது குறித்த கவலை எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது சீனாவாகவே உள்ளது. அந்நாட்டில் இதுவரை 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2,600 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவுக்கு வெளியே சுமார் 30 நாடுகளில் 1200 பேருக்கு கொரானா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20 பேர் அதற்கு பலியாகியுள்ளனர். இத்தாலியில் திங்களன்று நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் உலக பங்குத் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பவர்களின் விகிதம் ஒன்றிலிருந்து இரண்டு சதவீதம் வரை இருக்கலாம் என கூறப்பட்டாலும், சரியான தகவல்கள் இன்னும் தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தாலி, இரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரானோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, "கவலைக்குரியது" என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலையில் ஏற்றம்

கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.32,800-ஐத் தொட்டுள்ளது. இந்த விண்ணை முட்டும் தங்கத்தின் விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் என்கிறார்கள் நிபுணர்கள்.

''தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என மக்கள் கருதுகிறார்கள். குறைந்த காலத்தில் தங்களது பணத்தை பாதுகாப்பாக வைக்கவேண்டும் எனில் அதனை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது'' என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.