வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2020 (15:44 IST)

அசைவம் உண்ண விரும்பும் சைவ பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் உலக அளவில் இப்போது இறைச்சி உணவுப் பழக்கம் ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 330 மில்லியன் டன் அளவில் இறைச்சி சாப்பிடப்படுகிறது. இந்தநிலையில் இறைச்சிக்கு மாற்றான உணவுப் பொருளைத் தயாரித்து, இறைச்சியின் அடுத்த தலைமுறை உணவை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இறைச்சியில் உள்ள தனிமங்களை போலவே செயல்படக் கூடிய சுரப்பிகள், கொழுப்புகள் மற்றும் புரதச் சத்துகளைக் கண்டறியத் தாவர இனங்களில் பியாண்ட் மீட் எனும் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

இப்போது வேர்க்கடலை, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் இருந்து மாற்று இறைச்சியை உருவாக்குகின்றனர். ரத்தத்திற்கு மாற்றாகப் பீட்ரூட்டையும் பயன்படுத்துகின்றனர்.

இதன் விளைவாக உண்மையான இறைச்சியை கொண்டது போன்றே ஒரு பர்க்கரை உருவாக்கியுள்ளனர்.

இது இறைச்சி உணவு போலவே காட்சியளிப்பதுடன், வாசனையும் உள்ளதா என்பதைக் கண்டறிய 'இ-நோஸ்' என்ற நுட்பத்தைக் கையாள்கிறார்கள்.


``எங்களிடம் இருப்பது அமினோ அமிலங்கள், கொழுப்புகள், சிறிதளவு தாதுகள், வைட்டமின்கள், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டுப் பொருள் . இவைதான் விலங்கு புரதம் அல்லது இறைச்சியின் கூட்டுப் பொருள்களாகவும் இருக்கின்றன. எனவே விலங்குகள் இல்லாமல் இறைச்சியை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். தாவரங்களிலிருந்து நேரடியாக இறைச்சியை உருவாக்குவதுதான் எங்களுடைய பணியாக இருக்கிறது. நாங்கள், 90 சதவீதம் குறைவான நீரை பயன்படுத்துகிறோம். மின்சாரம் பாதியளவுதான் பயன்படுத்துகிறோம். கார்பன் உற்பத்தி 90 சதவீதம் குறைவு. 93 சதவீதம் குறைவான நிலப் பரப்பை பயன்படுத்துகிறோம். எனவே நீங்கள் ஒரு விவசாயி ஆக இருந்து, 100 ஏக்கர் நிலம் இருக்குமானால், அவ்வளவு நிலத்தில் செய்த இறைச்சி உற்பத்தியை எங்களால் 7 ஏக்கரில் செய்துவிட முடியும்.'' என்கிறார் பியாண்ட் மீட் நிறுவனத்தின் நிறுவனர் எத்தான் பிரவுன்
 
சராசரியான இறைச்சியை விரும்பும் குடும்பத்துக்கு ஒரு சிக்கல் இதில் இருக்கிறது. நேரடியாக மாட்டிறைச்சியில் தயாரிக்கப்படும் ஒரு பர்கரின் விலையைவிட, பியாண்ட் மீட் பர்கர்களின் விலை ஆறு மடங்கு அதிகம்.

"இந்த புதிய தொழில் ஆரம்ப நிலையில் இருக்கிறது. எங்களுடைய விநியோகச் சங்கிலியை இப்போதுதான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தொடர் இன்னும் விரிவாகும் போது, விலங்கு இறைச்சியை விட, குறைவான விலைக்கு எங்களால் வழங்க முடியும்," என்கிறார் எத்தான் பிரவுன்.

அத்துடன் அலெப் பார்ம்ஸ் என்ற மற்றொரு நிறுவனம் ஆய்வகத்தில் இறைச்சியை உருவாக்குகிறது. விலங்குகளின் உயிரணுக்களைக் கொண்டு இறைச்சி உருவாக்கப் படுகிறது.

காய்கறிக்கான மாற்றுப் பொருட்களால் இறைச்சியின் தன்மையைத் தர முடியாமல் போனால், இறைச்சியை ஆய்வகத்திலே உருவாக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தவகை இறைச்சியைத் தயாரிக்க விவசாய நிலத்தில் கார்பனை உற்பத்தி செய்யும் கால்நடைகளை வளர்க்க வேண்டாம், கால்நடைகளை வெட்டவும் வேண்டாம்.


"நாங்கள் குறைவான ஆதார வளங்களை பயன்படுத்துகிறோம், கால்நடைகளுக்கு கொடுப்பதைவிட இந்த செல்களுக்குக் குறைவான சத்துப் பொருட்களைத்தான் தருகிறோம். ஆனால் விலங்குகள் நலன் குறித்த விஷயங்கள், ஆண்டிபயாட்டிக் பயன்பாடு ஆகிய பிரச்சனைகளை நாங்கள் எளிதாக்குகிறோம்," என்கிறார் அலெப் பார்ம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிடியர் டவ்பியா.

உலகில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து உணவளிக்க, அதிக நீடித்த தன்மையுள்ள வாய்ப்பை உருவாக்குவது பெரிய விஷயம். ஆனால் இந்த வகை உணவுக்கான விலை, வழக்கமான குடும்ப செலவை மிஞ்சியதாக இருக்கிறது. இதை விற்பதற்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் அங்கீகாரத்தை பெறுவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதற்கு பல ஆண்டுகள் தேவைப்படலாம்.

''உண்மையில், உங்களை வந்தடையும் வழியில் அந்த உணவில் என்னவெல்லாம் செய்யப்படுகிறது என்று, எவ்வளவு சக்தி சேர்க்கப்படுகிறது என்றும், பதப்படுத்தல் நடப்பது பற்றியும் கவனியுங்கள். அது ஒரு முக்கியமான விஷயம்,'' என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் ரே பியர்ரெஹம்பர்ட்.

ருசியானதாகவும், கட்டுபடியான விலை உள்ளதாகவும் இறைச்சிக்கு மாற்றான உணவைத் தயாரிப்பதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம். ஆனால் இறைச்சிக்கு சரியான மாற்று உணவைத் தயாரிக்கும் தொழில் அதிக முதலீட்டை ஈர்க்கும் சந்தையாக மாறி வருகிறது.