திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (21:57 IST)

கொரோனா வைரஸ்: 3 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை - மலேசியா அறிவிப்பு

கொரோனா வைரஸ்: 3 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை - மலேசியா அறிவிப்பு
மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது.
 
நேற்று இந்த எண்ணிக்கை 129ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 20 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் கொரோனா கிருமித் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 26 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்பியுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் தலைமைச் செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
 
இன்ஃபுளூயன்சா எனப்படும் ஃப்ளூ காய்ச்சல், சுவாசத் தொற்று ஆகிய பாதிப்பு உள்ளவர்கள் குறித்து நாடு முழுவதும் சுகாதார அமைச்சு தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
 
"குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்லாத போதிலும், கொரோனா கிருமித் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில்லாத போதிலும் சுவாசத் தொற்று, காய்ச்சல் இருப்பவர்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 
இந்த வகையில் இதுவரை 9,600 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 138 பேர் கடும் காய்ச்சலாலும், 462 பேர் சுவாசத் தொற்றாலும் பாதிக்கப்பட்டவர்கள். எனினும் இவர்களில் ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது," என்று நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்..
 
புரூனே நாட்டவருக்கு கொரோனா பாதிப்பு
சீனாவின் வூஹான் பகுதியில் இருந்து பிப்ரவரி 26ஆம் தேதி நாடு திரும்பிய 66 மலேசிய குடிமக்கள் மற்றும் அவரது குடும்பத்தார் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில் அவர்களில் யாருக்கும் கொரோனா கிருமித் தொற்று இல்லை என்பது உறுதியானதை அடுத்து அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் புரூனே நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மசூதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதும், அவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.
 
இத்தகவலை புரூனே அதிகாரிகள் நேற்று மலேசிய சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இது மலேசியாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்குறிப்பிட்ட நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர் என்றும், இவர்களில் குறைந்த பட்சம் 5 ஆயிரம் பேர் மலேசியர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும் சுகாதார அமைச்சு பொதுச் செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து மசூதி நிகழ்வில் பங்கேற்றவர்கள் குறித்து சுகாதார அமைச்சு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிறப்பு நிதி
 
கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு நிதி உதவியை அறிவித்துள்ளது மலேசிய அரசு. இந்த நிதிக்கு பொது மக்களும் தங்களது பங்களிப்பை வழங்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மொகிதின் யாசின், முதற்கட்டமாக இந்த சிறப்பு நிதிக்கு பத்து லட்சம் மலேசிய ரிங்கிட் ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.
 
"கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட வேலை இல்லாதோருக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் பொருளாதார ரீதியில் சிரமப்படக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே மனித நேய அடிப்படையில் அவர்களுக்கு மலேசிய அரசு உதவ முன்வந்துள்ளது.
 
"பொது மக்களிடம் இருந்தும் நிதி திரட்டப்படுமாயின், அவ்வாறு கிடைக்கும் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்," என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறினார்.
 
இதையடுத்து இந்த சிறப்பு நிதிக்கு மலேசிய அமைச்சர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கினர். நிலையான வருமானம், ஊதியம் இல்லாதவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படும்போது அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 மலேசிய ரிங்கிட் (ஒரு மலேசிய ரிங்கிட் = 17.5 ரூபாய் உத்தேசமாக) உதவித் தொகையாக வழங்கப்படும் என மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் அதம் பாபா தெரிவித்துள்ளார்.
 
கொரோனாவின் தாக்கம் மலேசியாவில் அதிகரித்து வரும் நிலையில், இரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வருபவருக்கு தனது எல்லைகளை மூடுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.
 
குறிப்பிட்ட இம்மூன்று நாடுகளிலும் கொரோனா கிருமித் தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாடுகளில் இருந்து வருபவர்கள் மலேசியாவில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டா்கள் என்றார் அமைச்சர்.
 
இந்த நாடுகளுக்குச் சென்றுவிட்டு மலேசியாவுக்கு வரக்கூடிய மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் அனுமதி இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
 
இம்மூன்று நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மலேசிய அரசு அறிவுறுத்தி உள்ளது.
 
மார்ச் 13ஆம் தேதிக்குப் பிறகு இந்த மூன்று நாடுகளில் இருந்து திரும்பும் மலேசிய குடிமக்கள், 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சீனாவில் உள்ள Hubei, Zhejiang and Jiangsu பகுதிகளில் இருந்தும், ஜப்பானில் உள்ள Hokkaido பகுதியில் இருந்தும் மலேசியாவுக்கு வருபவர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு இன்னும் அமலில் இருப்பதாகவும் மலேசிய அரசு மேலும் தெரிவித்துள்ளது.
 
சிங்கப்பூர் அரசின் நடவடிக்கைகள்: பாராட்டும் உலக சுகாதார அமைப்பு
மார்ச் 11ஆம் தேதி காலை நிலவரப்படி, சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 166 ஆகும். இவர்களில் 73 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 12 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 93 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பூர் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், அந்நாட்டுப் பிரதமரையும் உலக சுகாதார அமைச்சு பாராட்டியுள்ளது.
 
கொரோனாவின் தாக்கத்தை குறைக்க ஒட்டுமொத்த சிங்கப்பூர் அரசு இயந்திரங்களும் களமிறங்கி தீவிரமாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கொரோனா கிருமி பாதிப்பு குறித்தும், அது தொடர்பான அரசின் செயல்பாடுகள் பற்றியும் விவரித்து அவ்வப்போது காணொளிப் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவை மக்களுக்கு மன உறுதியை, தெளிவை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.
 
கொரோனா அபாயத்தை எதிர்கொள்வதில் உலக நாடுகள் சிங்கப்பூர் அரசைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இதற்கிடையே சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்ல விரும்புவோருக்கு தொடர்ந்து விசா வழங்கப்பட்டு வருவதாக அங்குள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.