கொரோனா: அமெரிக்காவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி - பிப்ரவரி இறுதிக்குள் எதிர்பார்ப்பு
அமெரிக்கா இந்த மாத இறுதிக்குள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனம் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ) அதிகாரிகளிடம் இரண்டு தவணை தடுப்பூசியை அங்கீகரிக்க கோரியிருந்தது. மூன்று தவணை விதிமுறைகளையும் இந்நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது, ஆனால், இதற்கான தரவுகள் மார்ச் வரை சமர்ப்பிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில், கொரோனா ஓமிக்ரான் திரிபுக்கு பிறகு குழந்தைகளுக்கான கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ளது. குழந்தைகள் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்றும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க குழந்தைகள் மருத்துவ கழக ஆய்வின்படி, கடந்த மாதம் அமெரிக்காவில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. டிசம்பரில், ஃபைசர் நிறுவனம் குழந்தைகளுக்கான குறைந்தப்பட்ச தடுப்பூசி டோஸ் சோதனையை அறிவித்தது. முதியவர்களுக்கான மருந்தில் பத்தில் ஒரு பங்கு செலுத்தப்படுவது குறித்து கலவையான முடிவுகள் கிடைத்தது.