1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 12 மே 2021 (23:39 IST)

இலங்கையை உலுக்கும் கொரோனா மூன்றாவது அலை

மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளை தவிர ஏனைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
 
இலங்கையை உலுக்கும் கொரோனா மூன்றாவது அலை
 
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் நேற்றைய தினம் முதல் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே, வியாழக்கிழமை முதல் 17ம் தேதி அதிகாலை வரை முழுப் பயணத் தடைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் சடுதியாக அதிகரித்து வருவதுடன், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கடந்த காலங்களை விட அதிகரித்துள்ளது.
 
குறிப்பாக நாளொன்றில் சுமார் 2500ற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதுடன், கோவிட் தொற்றில் உயிரிழந்தோரின் விபரங்கள் தொடர்பிலான அறிவிப்பில் நாளாந்தம் 20ற்கும் மேற்பட்ட மரணங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
 
இவ்வாறான நிலையில், கடுமையான சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறு சுகாதார தரப்பினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
 
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தருவோரை தனிமைப்படுத்துவதற்கான கால எல்லை மீண்டும் 14 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியா, டென்மார்க், பிரித்தானியா, தென்ஆபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவிவரும் வீரியம் கொண்ட கோவிட் வைரஸ் இனங்கள் அடையாளம் காணப்பட்டதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்திருந்தது.
 
இலங்கையில் கோவிட் தொற்றினால் 850 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இலங்கையில் கோவிட் 3வது அலை ஆரம்பித்திருந்ததாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது