வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (13:30 IST)

தமிழ்நாடு அரசின் 'மக்கள் ஐடி' என்பது என்ன? 'ஆதார்' எண்ணுக்குப் போட்டியா?

aadhar
தமிழ்நாடு அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கென புதிதாக "மக்கள் ஐடி" என்ற பெயரில் தனித்துவமிக்க புதிய அடையாள எண்ணை வழங்கப்போவதாக வெளிவந்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், உண்மை நிலவரம் என்ன?

தமிழ்நாடு அரசின் மின் ஆளுமை முகமை சமீபத்தில் ஒரு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த, தமிழ்நாடு அரசு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் ஒரு தனித்துவம் மிக்க அடையாள எண்ணை உருவாக்க விரும்புவதாகவும் அதற்கான திறன் கொண்ட நிறுவனங்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த டெண்டர் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு மக்கள் ஐடி என்ற பெயரில், இந்திய மக்களுக்கு என ஆதார் எண் இருப்பதைப் போல தமிழ்நாட்டு மக்களுக்கு என ஒரு தனித்துவமான அடையாள எண்ணை உருவாக்கப் போவதாக செய்திகள் பரவின.

இதையடுத்து, இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் மிக்க எண்களை வழங்கும் 'ஆதார்' என்ற திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபோது, தமிழ்நாடு அரசு புதிதாக மேலும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணை உருவாக்க விரும்புவது ஏன் என்ற விவாதமும் ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு தற்போது அந்த டெண்டரில் முன்வைத்திருக்கும் குறிப்புகளின்படி, "மாநிலத்தில் உள்ள குடும்பங்களின் தகவல் தொகுப்பை தமிழ்நாடு அரசு உருவாக்க விரும்புகிறது. அந்தத் தகவல் தொகுப்பை உருவாக்குவதன் மூலம், திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துதல் ஆகியவை மேம்படும் என்று அரசு கருதுகிறது.

இந்தத் திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமிக்க ஓர் அடையாளம் உருவாக்கப்படும். இது மக்கள் ஐடி எனப்படும். இந்த ஐடிக்கான எண்கள் ஏதாவது ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காமல் 'Random' முறையில் உருவாக்கப்படும்.

இந்த ஐடியில், 10 அல்லது 12 எண்கள் இடம்பெற்றிருக்கலாம். தற்போதைய மக்கள் தொகையையும் எதிர்கால மக்கள் தொகையையும் மனதில் கொண்டு இந்த எண்கள் எவ்வளவு நீளம் என்பது முடிவு செய்யப்படும்.

ஒருவருக்கே இரண்டு எண்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதைத் தவிர்க்க, ஆதார் எண்கள், குடும்ப அட்டை எண் போன்றவற்றில் உள்ள தகவல்கள் பயன்படுத்தப்பட்டு, ஒரே பயனாளி இருமுறை தகவல் தொகுப்பில் இடம் பெறாமல் தவிர்க்கப்படும்.
TN assembly

ஏற்கெனவே அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பயன்படுத்தி வருவோருக்கு, இந்த மக்கள் ஐடியை ஒதுக்கீடு செய்ய, அவர்கள் அளிக்கும் தகவல்களும் தற்போதுள்ள தரவுத் தொகுப்பில் உள்ள தகவல்களும் ஒப்பிடப்படும்.

இரு தகவல்கள் துல்லியமாக இருப்போருக்கு உடனடியாக மக்கள் ஐடி ஒதுக்கீடு செய்யப்படும். அப்படியில்லாத நிலையில், கருவிழியைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட்டு, ஐடி ஒதுக்கீடு செய்யப்படும்."

மேலே உள்ள தகவல்கள் மாநில அரசின் டெண்டர் அறிவிப்பில் உள்ளவை. இந்த டெண்டர் அறிவிப்பை வைத்துத்தான் இத்தனை விவாதங்களும் நடந்தன. இதையெல்லாம்விட முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி, இந்த மக்கள் ஐடி திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பையும் பதிவு செய்தது.

அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாகக் கூறியிருந்தார்.

"இந்த முயற்சி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, கடும் விளைவுகளை உருவாக்கும். மாநில அரசு, ஏற்கெனவே அமலில் உள்ள கட்டமைக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றாமல் தனியாக ஒரு எண் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாகவே அமையும்.

ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இடைத்தரகர்கள், தவிர்க்கப்பட்ட போலி பயனாளிகள், பலனடைந்த அதிகாரிகள், ஊழல் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீண்டும் துளிர்த்தெழுந்து, மாநில அரசின் நலத் திட்டங்களில் மோசடி செய்ய வழிவகை செய்யவே தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த முயற்சி பயன்படும்.  மேலும், பலவேறு சட்டரீதியான பிரச்னைகளும் இந்த விவகாரத்தில் எழுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, ஊழலற்ற, முறைகேடுகளற்ற வகையில் மக்களுக்கு உதவிகளைச் செலுத்தும் தற்போதைய முறையை மேலும் பலப்படுத்த வேண்டுமேயன்றி, உறுதியாக லஞ்ச, ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் அமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படக் கூடாது. இந்த முயற்சியை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்" என்று தன் அறிக்கையில் நாராயணன் திருப்பதி தெரிவித்திருக்கிறார்.

ஆனால், 'மக்கள் ஐடி' என்பது புதிய திட்டம் அல்ல.  2013ஆம் ஆண்டின் ஆளுநர் உரையிலும் 2013-14ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலும் முதன் முதலாக இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.

அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு 'மாநிலத்தில் குடியிருப்போரின் தரவுத் தொகுப்பு' அதாவது State Residents Data Hub ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டது. அதன்படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலிருந்து தமிழ்நாட்டில் வசிப்பவர்களின் தகவல்களை எடுத்து, அனைத்துத் துறைகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கென 'மக்கள் செயலி' உருவாக்கப்பட்டது.

இந்த மக்கள் செயலியில், ஆதார் மூலம் கிடைத்த தகவல்கள் தொகுக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளுக்கும் வழங்கப்படும். இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கண்காணிக்கவும் சிறப்பாகச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் தகவல்களும் ஒன்றாகத் திரட்டப்பட்டு, பாதுகாப்பான முறையில் அனைத்து துறைகளோடும் பகிரப்படும். ஒவ்வொரு துறையிலும் பயனடைவோரின் விவரம், ஆதாருடன் இணைக்கப்படும்.  குடிமக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கும் ஒரு வழிமுறையையும் உருவாக்க முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி 'மக்கள் ஐடி' என்பது ஏற்கெனவே உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் வசிக்கும் பல கோடி பேரின் தகவல்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஆதார் எண் VS மக்கள் ஐடி

இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஆதார் எண்ணிற்கும் மக்கள் ஐடிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

1. ஆதார் அடையாளத்தைப் பொறுத்தவரை, எல்லா தகவல்களுடனும் சம்பந்தப்பட்ட குடிமகனுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். மக்கள் ஐடியில் அப்படி எந்த அடையாள அட்டையும் வழங்கப்படாது.

2. ஆதார் அட்டையின் நோக்கம், அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு, வங்கிகளில் பயன்படுத்துவதற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை உருவாக்குவது. ஆனால், மக்கள் ஐடியைப் பொறுத்தவரை, இதிலும் தனித்துவமான எண் இருக்குமென்றாலும்கூட, அவை தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்குள் மட்டும் பயன்படுத்தப்படும். ஆதார் எண் இல்லாத பயனாளிகளும்கூட, மக்கள் ஐடியின் மூலம் அரசுத் துறைகளுக்குள் அடையாளம் காணப்படுவார்கள்.

3. ஆதார் எண்ணை எல்லா இடங்களிலும் ஒற்றை அடையாளமாக பயன்படுத்த முடியும். ஆனால், மக்கள் ஐடி எண்ணை அப்படிப் பயன்படுத்த முடியாது.

4. ஆதார் எண்ணைப் பெற, சம்பந்தப்பட்டவர்கள் கைரேகை, கருவிழிப் படல அடையாளம் போன்றவற்றை அரசுக்குத் தர வேண்டும். ஆனால், மக்கள் ஐடிக்கு என இது போன்ற அடையாளங்கள் எதுவும் சேகரிக்கப்படமாட்டாது. மக்கள் ஐடி என்பது, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் பலன்களைப் பெறுபவர்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் ஒரு எண் மட்டுமே.

5. ஆதார் எண்ணைப் பொறுத்தவரை, சில தருணங்களில் ஒரே எண்ணுடன் வேறு வேறு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தத் தருணத்தில் KYC சரிபார்த்தல் தேவைப்படுகிறது. ஆனால், மக்கள் ஐடியில், பல துறைகளிலும் உள்ள அடையாளங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒருவரது 'Golden Record' உருவாக்கப்படும். அதில் இது போன்ற பிரச்சனைகள் இருக்காது.

6. ஆதார் எண்ணைப் பொறுத்தவரை, வெவ்வேறு சேவைகளோடு வாடிக்கையாளர்கள் அதனை இணைக்க வேண்டும். மக்கள் ஐடியில் அப்படி எந்த சேவையோடும் இணைக்க வேண்டியதில்லை. பல துறைகளிலும் உள்ள புள்ளிவிவரங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகே இந்த ஐடி உருவாக்கப்படும்.

மேலும், அரசுத் துறைகள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன. ஆனால், ஆதார் எண்ணைப் போல, இந்த எண் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்காது.

இந்தத் திட்டம் குறித்து, மேலும் விளக்கம் அளிக்கப்படுமா என்பது குறித்து அறிய மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜை தொடர்புகொள்ள பல முறை முயன்றும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.