வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (14:37 IST)

தஞ்சாவூர் தேர் விபத்து: 10 ஆண்டுகளுக்கு முன் அடுத்தடுத்த நாளில் நடந்த 2 தேர் விபத்துகளில் 10 பேர் பலியானது எப்படி?

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 27) நடந்த தேரோட்டத்தின்போது தேரில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
 
தமிழ்நாட்டில் கோயில் தேரோட்டங்களில் விபத்துகள், குறிப்பாக மின்சார விபத்துகள் ஏற்படுவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் இது முதல் முறை அல்ல. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்த நாள்களில் நடந்த இரண்டு தேரோட்ட விபத்துகளில் மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டது தமிழ்நாட்டை உலுக்கியது. இதையடுத்து தேரோட்டங்களுக்கான ஏற்பாடுகளின்போது பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து திடீரென ஒரு அக்கறை உருவானது. அதையடுத்து தேர்த் திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
 
ஆனால், கால ஓட்டத்தில் அது தொடர்பான எச்சரிக்கை உணர்வு மங்கித் தேய்ந்துபோவதே இது போன்ற விபத்துகள் மீண்டும் மீண்டும் நடக்கக் காரணமாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணியிலும், குடியாத்தம் அருகிலும் அடுத்தடுத்த நாளில் இரண்டு தேர் விபத்துகள் எப்படி நடந்தன? எப்படி உயிரிழப்புகள் ஏற்பட்டன? என்று பார்ப்போம்.
 
ஆரணியில் தேர் கவிழுந்து நடந்த விபத்து: 2012 மே 1-ம் தேதி, செவ்வாய்க்கிழமை.
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள கைலாசநாதர் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவை குறிப்பதற்காக வழக்கம் போல தேரோட்டம் புறப்பட்டது. ஆரணி மணிக்கூண்டு அருகே அந்த மரத்தேர் திடீரென கவிழந்தது. பலர் தேருக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் கிரேன் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி அரைமணி நேரம் போராடி கீழே விழுந்த தேரை தூக்கினர்.
 
அப்போது ஆரணி ரோட்டரி சங்கத்தின் செயலாளராக இருந்த டி.ஜவஹர், தந்தையும் மகனுமான இரண்டு தச்சர்கள், இத்தாலியில் பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலும், மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
 
நிலை தடுமாறியது
சாலையில் இருந்த ஒரு சரிவில் நிலை தடுமாறித்தான் தேர் கீழே விழுந்ததாக அப்போது சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர். அப்போதைய அதிமுக அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த முக்கூர் என்.சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். தேர் வலுவாக இருந்ததா என்று ஆய்வு செய்யாததும், தேரோட்டத்துக்கு முன்பு சாலையை சரியாக செப்பனிடாததுமே விபத்துக்கு காரணம் என்று அப்போது மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியது.
 
இந்த விபத்து தமிழ்நாடு முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்த நாளே (மே 2, 2012, புதன்கிழமை) பக்கத்து மாவட்டமான அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்னொரு தேர் விபத்து நடந்தது. இது தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 
உயர் அழுத்த மின்சாரம் கம்பியில் உரசிய நெல்லூர்ப்பேட்டை விபத்து: 

அந்த விபத்தும் சித்திரைத் திருவிழாவை ஒட்டி நடந்ததுதான். குடியாத்தம் அடுத்த நெல்லூர்ப்பேட்டை என்ற ஊரில் உள்ள கருப்புலீஸ்வரர் (பாலசர்துலீஸ்வரர்) கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் நள்ளிரவில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 20 பேர் காயமடைந்தனர்.
 
56 அடி உயரமுள்ள இந்த தேர் உயர் அழுத்த மின் கம்பியைத் தொட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டது. மாலை தேரோட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே இரண்டு முறை மழை பெய்து தேரோட்டம் தடைபட்டது. மீண்டும் தேர் புறப்பட்டு நகர்ந்துகொண்டிருந்தபோது, நள்ளிரவு சுமார் 12.05க்கு மழையில் நனைந்திருந்த தேர் உயர் அழுத்த மின் கம்பி மீது உரசியது. தேர்மீது பாய்ந்த உயர் அழுத்த மின்சாரம், இரும்புச் சங்கிலியைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த பக்தர்களைத் தாக்கியது. பெல் நிறுவனத்தை சேர்ந்த ஈழத்தரசன் என்பவர் உள்பட 5 பேர் இதில் உயிரிழந்தனர்.
 
இழப்பீடு அறிவித்த ஜெயலலிதா
50 பேர் வெவ்வேறு அளவுகளில் காயமடைந்தனர் என்று அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த அஜய் யாதவ் கூறியதாக செய்திகள் கூறின. அந்த 50 பேரில் பெரும்பாலோருக்கு லேசான காயங்கள்தான் ஏற்பட்டிருந்தன. இந்த விபத்து எப்படி நடந்தது என்று ஆராய குடியாத்தம் வட்டாட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த விபத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 லட்சமும், தீவிர காயம் ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், லேசாக காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் இழப்பீடு அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா.
 
விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா?
இந்த இரண்டு விபத்துகளை அடுத்து, தேரோட்டங்களை நடத்துவதற்கு சில விதிமுறைகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு. தேரோட்டங்கள் மாலை 6 மணிக்குள் முடிக்கப்படவேண்டும், தேரோட்டத்துக்கு முன்னதாக பொதுப்பணித்துறையை சேர்ந்தவர்கள் தேரின் உறுதித் தன்மையைப் பரிசோதித்து சான்றளிக்கவேண்டும் என்பவை அந்த விதிமுறைகளில் சில.
 
இப்போது தஞ்சாவூர் அடுத்த களிமேட்டில் நடந்த விபத்துக்கு முன்னதாக உரிய முறையில் அனுமதி பெற்றார்களா, இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? அரசாங்கத் தரப்பில் என்ன விதமான கவனக்குறைவுகள் இந்த விபத்துக்குக் காரணமாயின என்பது இன்னும் ஆராயப்படவேண்டும்.
 
இந்த ஆண்டிலேயே பல சிறு சிறு தேரோட்ட விபத்துகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துள்ளன. சில நாள்களுக்கு முன்பு நாமக்கல் நகரில் ஒரு மாரியம்மன் கோயில் தேரோட்டத்தின்போதும் இதே போல உயரழுத்த மின் கம்பியில் தேர் உரசி தேர் சேதமானதாகவும், மின் ஊழியர் ஒருவர் காயமடைந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
 
இந்த விபத்துகள் எல்லாம் பழைய விதிமுறைகளைப் பின்பற்றிய பிறகும், விதிமுறைகளின் போதாமையால் நடந்தவையா? அல்லது அந்த விதிமுறைகளைப் பின்பற்றாததால் நடந்தவையா என்பதும் ஆராயப்படவேண்டும்.