வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (14:06 IST)

மோதி இடத்திற்கு நிதின் கட்கரி வர முடியுமா? பிரதமர் பதவி குறித்த பேச்சை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்

இந்தர்ஜீத், அனில் விஜ், நிதின் கட்கரி ஆகியோர் பாஜக தலைவர்கள் ஆவர்.

 

இந்த மூன்று தலைவர்களின் கருத்துகளும் தற்போது தலைப்புச் செய்திகளில் உள்ளன. ராவ் இந்தர்ஜீத் மற்றும் அனில் விஜ் ஆகிய இருவருமே ஹரியாணா முதல்வர் பதவி, தங்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்று வெளிப்படையாக கோரியுள்ளனர்.

 

அதே நேரத்தில் நிதின் கட்கரியின் கருத்தும் இதே போக்கில் இருப்பதாக சில எதிர்க்கட்சித் தலைவர்கள் பார்க்கின்றனர்.

 

“நீங்கள் பிரதமரானால் நான் உங்களுக்கு ஆதரவளிப்பேன் என்று ஒரு தலைவர் என்னிடம் கூறினார்” என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்ற வாரம் கூறியிருந்தார்.

 

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நல்லுறவு இல்லாதவராக எதிர்க்கட்சித் தலைவர்கள், பலமுறை அவரை சித்தரித்து வந்துள்ளனர்.

 

நிதின் கட்கரி வெளியிட்ட சில கருத்துகளை அடுத்து அது குறித்து விவாதங்கள் எழுந்தன.

 

நிதின் கட்கரி என்ன சொன்னார்?

2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, “நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள் என்றால் நான் உங்களுக்கு ஆதரவளிப்பேன் என்று அவர் சொன்னார்,” என்று குறிப்பிட்டார்.

 

"நீங்கள் ஏன் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும், நான் ஏன் உங்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்று நான் அவரிடம் கேட்டேன். பிரதமர் ஆவது எனது வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. என் கட்சி மற்றும் அதன் மீதான பற்றுக்கு நான் நேர்மையாக இருக்கிறேன். எந்த பதவிக்காகவும் நான் இவற்றில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். விடாமுயற்சி மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்,” என்று கட்கரி மேலும் கூறினார்.

 

”இந்த மன உறுதியே இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் என்று சில சமயங்களில் நான் உணர்கிறேன்,” என்றார் அவர்.

 

எதிர்க்கட்சிகளிலும் கட்கரிக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

 

சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் ‘ஐடியா எக்ஸ்சேஞ்ச்’ நிகழ்ச்சியில் கட்கரியிடம் இது தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

 

''எதிர்க்கட்சிகளை எதிரியாகவோ, தேச விரோதியாகவோ கருதாத சில பாஜக தலைவர்களில் நீங்களும் ஒருவர். இந்த சூழலில் ஒரு வலுவான எதிர்க்கட்சி அரசியலுக்கு சிறந்ததா அல்லது மக்களவையில் பாஜக பெரும்பான்மையாக இருந்தபோது எல்லாம் சரியாக இருந்ததா?'' என்று கட்கரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு பதிலளித்த கட்கரி,“ இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாம் ஜனநாயகத்தின் தாய் என்று பிரதமர் கூறுகிறார். ஜனநாயகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் உள்ளன. கார் அல்லது ரயிலுக்கு சக்கரங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு இவையும் முக்கியம். அவற்றுக்கு இடையே சமநிலை அவசியம். நாங்கள் எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளோம், இப்போது ஆட்சியிலும் இருக்கிறோம். அது எங்கள் அதிர்ஷ்டம். 'அனைவரையும் உள்ளடக்கிய , அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் அதற்கு அனைவரின் முயற்சி..’ இதுதான் நம்முடைய உணர்வாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.

 

பிரதமர் பதவி குறித்த பேச்சை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்
 

நிதின் கட்கரியின் இந்த கருத்து குறித்து பல எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Modi

"நிதின் கட்கரி ’தலைமை நாற்காலிக்கான’ தனது மனப்பூர்வமான விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். இதற்காக எதிர்க்கட்சிகளின் பெயரில் மோதிக்கு செய்தி அனுப்புகிறார். இந்தியா கூட்டணியில் நாட்டை வழிநடத்தக்கூடிய திறமையான தலைவர்கள் பலர் உள்ளனர். பா.ஜ.கவிடம் இருந்து தலைவர்களை கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. நன்றாக விளையாடியுள்ளீர்கள் நிதின் கட்கரி,” என்று சிவசேனா கட்சியின் (உத்தவ் தாக்கரே) எம்பி பிரியங்கா சதுர்வேதி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

 

“பாஜகவில் பிரதமர் பதவிக்கான சண்டை தொடங்கியுள்ளது. அதன் விளைவை வரும் மாதங்களில் பார்க்கலாம். இந்த முறை நரேந்திர மோதியை பிரதமராக பாஜக தேர்ந்தெடுத்ததா? நன்றாக கவனித்து பார்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணிதான் தேர்ந்தெடுத்தது,” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் மனோஜ் குமார் ஜா கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

2024 மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பா.ஜ.க நாடாளுமன்றக் கட்சியின் கூட்டம் நடக்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டமே நடைபெற்றது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

 

பாஜகவின் இணையதளத்தில் 2024 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பாஜக நாடாளுமன்றக் கட்சிக்கூட்டம் பற்றி தெரிவிக்கப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் தொடர்பான செய்திக்குறிப்பே வெளியிடப்பட்டது.

 

அதே நேரம் 2019-ஆம் ஆண்டு 303 இடங்களில் வெற்றி பெற்ற பிறகு, தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே அதாவது மே 24-ஆம் தேதி பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் அல்ல.

 

மோதி இடத்திற்கு நிதின் கட்கரி வர முடியுமா?
 

மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 எம்பிக்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவுடன் நரேந்திர மோதி ஆட்சி அமைத்து பிரதமரானார்.

 

பா.ஜ.க வில் கட்கரி, நரேந்திர மோதியின் இடத்தை பெறமுடியுமா என்று முன்னாள் மாநிலங்களவை எம்பியும், அரசியல் ஆய்வாளருமான குமார் கேட்கரிடம் வினவப்பட்டது.

 

நம்பிக்கை வாக்கெடுப்பில் மோதி தோல்வியடைந்தால் அந்த இடத்திற்கு மற்றொருவர் வரவேண்டியிருக்கும். அந்த நிலையில் நிதின் கட்கரி மேலே வர வாய்ப்புள்ளது என்று கேட்கர் கூறினார்.

 

“கட்கரியை முன்னிறுத்துவதற்கான சூழல் பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டிலும் உருவாகத் தொடங்கியது என்பதை ஒரு பத்திரிக்கையாளராக என்னால் சொல்ல முடியும். மோதியின் இடத்தை வேறு யாராவது எடுக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகி, நம்பிக்கை வாக்கெடுப்பில் மோதி தோல்வியடைவது அவசியம்,” என்று கேட்கர் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்தமுறை பொது பட்ஜெட்டில் ஆந்திரா, பிகார் தொடர்பாக தனித்தனியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

 

அரசின் நட்பு கட்சிகளை திருப்திப்படுத்தி, அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் இது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

 

நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் பங்கு குறித்து கருத்து தெரிவித்த கேட்கர், "நிதீஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் நரேந்திர மோதியை அதிகம் சார்ந்துள்ளனர். மோதி அவர்களை அல்ல என்று நான் கருதுகிறேன். இரண்டு தலைவர்களில் ஒருவர் கூட்டணியைவிட்டு வெளியேறினாலும் மோதி தொடர்ந்து பிரதமராக இருப்பார். இந்தியா கூட்டணியில் நிதீஷுக்கும் சந்திரபாபுவுக்கும் எதுவும் கிடைக்காது என்பது மோதிக்கு தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மோதி அரசு நிலைத்திருக்கும்,” என்று குறிப்பிட்டார்.

 

ஏதேனும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டால் பிரதமர் மோதிக்கு மாற்றாக கட்கரி வரக்கூடும் என்று குறிப்பிட்ட கேட்கர், ''பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய இரண்டிலுமே அவர் விரும்பப்படுகிறார்'' என்றார்.

 

கட்கரியின் கருத்து மற்றும் ஊகங்கள்
 

நிதின் கட்கரி இது போன்ற கருத்தை கூறி அதன் காரணமாக பா.ஜ.கவிற்கு உள்ளேயும் வெளியேயும் விவாதம் கிளம்புவது இது முதல் முறையல்ல.

 

"கனவுகளைக் காட்டும் தலைவர்களை மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் காட்டிய கனவுகள் நிறைவேறவில்லை என்றால் பொதுமக்கள் அவர்களை அடிக்கவும் செய்வார்கள். எனவே, நிறைவேறக்கூடிய கனவுகளை மட்டும் காட்டுங்கள். நான் கனவுகளை காட்டுபவர்களில் ஒருவன் அல்ல. நான் என்ன சொன்னாலும் அது 100% முழுமையாக நிறைவேற்றப்படுகிறது,” என்று 2019-ஆம் ஆண்டு கட்கரி மும்பையில் கூறினார்.

 

இந்திரா காந்தியை பா.ஜ.க அடிக்கடி விமர்சித்து வருகிறது. அதேசமயம் 2019 இல் கட்கரி இந்திரா காந்தியைப் புகழ்ந்தார்.

 

“பா.ஜ.க, கருத்தியல் கொண்ட ஒரு கட்சி. பாஜக ஒருபோதும் அடல்-அத்வானியின் கட்சியாக இருக்கவில்லை. அதேபோல இப்போது அது மோதி-ஷாவின் கட்சி அல்ல,” என்று 2019 மே மாதம் கட்கரி தெரிவித்தார்.

 

2019-ஆம் ஆண்டு மக்களவை கூட்டத்தின் போது நிதின் கட்கரி, "நான் சிறப்பாக பணியாற்றியுள்ளேன் என்று எல்லா கட்சிகளின் எம்.பி.க்களும் நினைப்பது என் அதிர்ஷ்டம்" என்று கூறியிருந்தார்.

 

கட்கரி இப்படி சொன்னபோது சோனியா காந்தியும் தனது மேஜையைத் தட்டி அதற்கு தனது ஒப்புதலை தெரிவித்தார்.

 

2022 மார்ச் மாதம் கட்கரி, "ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு மிகவும் முக்கியமானது. காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இன்று காங்கிரஸில் இருப்பவர்கள் கட்சி மீது அர்ப்பணிப்பு காட்டி கட்சியில் நீடிக்க வேண்டும். தோல்வியால் ஏமாற்றம் அடையாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

 

"அரசியலில் இருந்து விடைபெறவேண்டும் என்று அவ்வபோது மனம் ஆசைப்படுகிறது. ஏனென்றால் அரசியல் தவிர வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது,” என்று 2022 ஜூலையில் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

 

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்கள், தாங்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று கட்கரி குறிப்பிட்டிருந்தார்.

 

இதுபோன்ற கருத்துக்களை கூறிய மூன்று வாரங்களுக்குப் பிறகு பா.ஜ.க நாடாளுமன்றக் குழுவில் இருந்து கட்கரி நீக்கப்பட்டார். பின்னர் மத்திய தேர்தல் குழுவில் இருந்தும் நீக்கப்பட்ட கட்கரியின் இடத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் சேர்க்கப்பட்டார்.

 

"பா.ஜ.கவில் தான் அவமதிக்கப்படுவதாக நிதின் கட்கரி உணர்ந்தால், அவர் எங்களிடம் வர வேண்டும். 2024 தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்று 2024 தேர்தலுக்கு முன் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

 

இதற்கு பதிலளித்த கட்கரி, “பா.ஜ.க தலைவர்களைப் பற்றி உத்தவ் தாக்கரே கவலைப்படத் தேவையில்லை” என்று கூறினார்.

 

கட்கரி பா.ஜ.க தலைவராக இருந்தபோது
 

ஆர்எஸ்எஸ்க்கு பிடித்த தலைவர்களில் ஒருவராக நிதின் கட்கரி கருதப்படுகிறார். ஆனால் நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவுடனான கட்கரியின் உறவு குறித்து பல்வேறு விதமாக சொல்லப்படுகிறது.

 

“பா.ஜ.க தலைவராக நிதின் கட்கரி இருந்தபோது நீதிமன்ற உத்தரவு காரணமாக அமித் ஷா குஜராத் மாநிலத்தை விட்டு வெளியேற நேரிட்டது. மேலும் கட்கரியை சந்திக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு கட்சியில் மோதி மற்றும் ஷாவின் ஆதிக்கம் மெள்ள மெள்ள அதிகரித்தபோது கட்கரியின் சிறகுகள் படிப்படியாக வெட்டப்படத் தொடங்கின,” என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரதீப் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

2013க்கு பிறகும் பா.ஜ.க தலைவராக நிதின் கட்கரி நீடிப்பார் என்று பேச்சு அடிபட்டது.

 

ஆனால் அந்த நேரத்தில் நிதின் கட்கரி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். ராஜினாமாவுக்குப் பிறகு கட்கரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த பேச்சு முற்றிலுமாக நின்றுபோனது. கட்கரி ராஜினாமா செய்ததையடுத்து ராஜ்நாத் சிங்குக்கு கட்சியின் தலைமைப் பொறுப்பு கிடைத்தது.

 

ராஜ்நாத் சிங்கின் தலைமையின் போதுதான் 2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

 

2014 இல் நிதின் கட்கரி கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்திருந்தால் ஒருவேளை நரேந்திர மோதி பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக ஆகியிருக்க மாட்டார் என்று பிரதீப் சிங் கருதுகிறார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.