வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (13:07 IST)

"மோடி ஆட்சியின் 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி திட்டங்கள் தொடக்கம்" - அமித்ஷா பெருமிதம்..!

Amithsha
மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடிக்கு திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மூன்றாவது முறையாக பதவியேற்று நேற்றுடன் 100 நாள்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் 100 நாட்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழைக் குடும்பத்தில் பிறந்த பிரதமர் மோடி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக மாறியிருக்கிறார் என்று தெரிவித்தார்.
 
உலகின் 15 வெவ்வேறு நாடுகள் தங்கள் நாடுகளின் உயரிய மரியாதையை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளதாகவும், அவரது நீண்ட ஆயுளுக்காக 140 கோடி இந்தியர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் எனவும் அமிஷா கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, நாட்டின் உள் மற்றும் வெளி பாதுகாப்பினை பலப்படுத்தி வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
 
மேலும் பிராந்திய மொழிகளுக்கு மதிப்பளிக்கும், நமது பழைய கல்வி முறைகளை உள்ளடக்கிய புதிய கல்விக் கொள்கையை மோடி வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தனது முதல் 100 நாட்களில், 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் ரூ.15 லட்சம் கோடிக்கு திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளது என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
 
Modi
மஹாராஷ்டிராவில் உள்ள மெகா துறைமுகத்திற்கு ரூ.76,200 கோடிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என குறிப்பிட்ட அவர், இது உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.  25,000 கிராமங்களை இணைக்கும் வகையில் 62,500 கிலோ மீட்டர் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுவதற்கு, மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். மேலும் விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என உலக நாடுகள் ஒப்புக்கொள்கிறது என்று அவர் கூறினார். 

60 கோடி இந்தியர்களுக்கு, வீடுகள், கழிப்பறைகள், எரிவாயு, குடிநீர், மின்சாரம், 5 கிலோ ரேஷன் அரசி மற்றும் 5 லட்சம் வரையிலான சுகாதார வசதிகள் வழங்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். அடுத்தத் தேர்தலுக்குள் இந்தியாவில் சொந்த வீடில்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்பதே பாஜகவின் இலக்கு என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார்.