புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : சனி, 1 ஜூலை 2023 (22:01 IST)

பைஜூஸ்: கொரோனா காலத்தில் உச்சம் தொட்ட ஆன்லைன் கல்வி நிறுவனம் அதே வேகத்தில் சரிவைச் சந்தித்தது ஏன்?

byjus
உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் 'ப்ரோசஸ்' குழுமம், இந்தியாவின் எஜுடெக் ஸ்டார்ட்-அப் நிறுவனமான பைஜு'ஸ் மீதான மதிப்பீட்டை 5.1 பில்லியன் டாலராகக் குறைத்துள்ளது.
 
செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, நெதர்லாந்தில் பட்டியலிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப முதலீட்டு நிறுவனமான 'ப்ரோசஸ்' குழுமம், பைஜு'ஸ் மீதான மதிப்பீட்டை 22 பில்லியன் டாலரில் இருந்து 5.1 பில்லியன் டாலராகக் குறைத்துள்ளது.
 
பொருளாதாரப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்த சரிவு 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
 
ப்ரோசஸ் குழுமம் பைஜு'ஸின் மிகப்பெரிய முதலீட்டாளராக விளங்குகிறது. மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், ப்ரோஸஸ் குழுமம் பைஜு'ஸ் நிறுவனத்தின் மீதான 9.6 சதவீத முதலீட்டின் மதிப்பை 493 மில்லியன் டாலர்களாகக் குறைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
 
பைஜு ரவீந்திரன் 2011 இல் தொடங்கிய பைஜு'ஸ் நிறுவனம் தற்போதைய காலகட்டத்தில் சுபிட்சமாகச் சென்றுகொண்டிருக்கிறது எனக் கருத முடியாது.
 
இந்நிறுவனம் இந்தியாவில் பணியாளர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது என்பது மட்டுமல்ல, கடன்களை அடைக்க முடியாமல் வெளிநாட்டில் சட்டப் போராட்டத்தையும் நடத்தி வருகிறது.
 
 
பைஜு'ஸ் நிறுவனம் தற்போதைய காலகட்டத்தில் சுபிட்சமாகச் சென்றுகொண்டிருக்கிறது எனக்கருத முடியாது
 
கணக்கு தணிக்கை நிறுவனம் விலகல்
சில நாட்களுக்கு முன்பு, டெலாய்ட் ஹாஸ்கின்ஸ் & செல்ஸ் (Deloitte Haskins & Sells) என்ற ஆடிட்டிங் நிறுவனம் பைஜூ'ஸின் ஆடிட்டர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த நிறுவனம் தான் அடுத்த ஆண்டு பைஜு'ஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்ய ஏற்கெனவே உடன்படிக்கை மேற்கொண்டிருந்தது.
 
2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைகள் கிடைக்காததால் பைஜு'ஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்ய முடியவில்லை என்று டெலாய்ட் தெரிவித்துள்ளது.
 
டெலாய்ட் ஹாஸ்கின்ஸ் & செல்ஸ் நிறுவனம் பைஜு'ஸ் நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில், "கணக்கு வழக்குகள் தணிக்கை குறித்து இதுவரை எங்களுக்கு தங்களிடம் இருந்து எந்த விவரங்களும் வரவில்லை. இது தணிக்கை தரநிலைகளுக்கு ஏற்ப தணிக்கையை திட்டமிடுதல், வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் நிறைவு செய்வதற்கான பணிகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். இதைக் கருத்தில் கொண்டு, தங்களின் சட்டப்பூர்வ தணிக்கையாளர்கள் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுகிறோம்," எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, இந்த தணிக்கை நிறுவனம் வெளியேறிய பிறகு, பைஜு'ஸ் நிறுவனம் தனது 2022-ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கை இந்த ஆண்டு செப்டம்பரிலும், 2023-ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கை டிசம்பர் மாதத்திற்குள்ளும் தாக்கல் செய்யும் என்று முதலீட்டாளர்களிடம் கூறியுள்ளது.
 
தற்போது பைஜு'ஸ் நிறுவனத்திற்கு புதிய கணக்கு தணிக்கை நிறுவனம் கிடைத்துள்ளது. BDO (MSKA & Associates) என்ற நிறுவனத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தணிக்கையாளராக பைஜு'ஸ் நியமித்துள்ளது.
 
 
பி.எஃப். கணக்கில் பணம் செலுத்தத் தவறியதாக பைஜு'ஸ் மீது பணியாளர்கள் புகார்
 
ஆங்கில செய்தி இதழான 'தி இந்து பிசினஸ் லைன்' வெளியிட்ட செய்தியில் , "பைஜூ'ஸின் முன்னாள் ஊழியர்கள் பலரது ஈபிஎஃப் கணக்கில் வரவுவைக்கப்படவேண்டிய தொகைகள் டெபாசிட் செய்யப்படவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளனர் எனக்கூறப்பட்டுள்ளது.
 
ஆனால் பைஜு'ஸ் நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் பி.எஃப். கணக்கில் செலுத்தவேண்டிய தொகையைப் பிடித்தம் செய்ததாகவும் இருப்பினும் இந்தத் தொகையை ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்றும் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்..
 
செய்தி இதழில் இந்த விவரங்கள் வெளியான பின், பைஜூ'ஸின் தாய் நிறுவனமான 'திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட்' (Think and Learn Private Limited) ஆகஸ்ட் 2022 முதல் மே 2023 வரை 10 மாதங்களுக்கான EPF தொகையைச் செலுத்தியுள்ளது.
 
இதற்காக ரூ.123.1 கோடி டெபாசிட் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.3.43 கோடியை சில நாட்களில் செலுத்தப் போவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
 
கடந்த வாரம், 'தி எகனாமிக் டைம்ஸ்' என்ற ஆங்கில நாளிதழின் செய்தியில், பைஜு'ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து மூன்று இயக்குனர்கள் பதவி விலகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பீக் XV பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஜி.வி. ரவிசங்கர், சான் ஜுக்கர்பெர்க்கின் விவியன் வு மற்றும் ப்ரோசஸ் நிறுவனத்தின் ரஸ்ஸல் டிரெஸ்சென்ஸ்டாக் ஆகியோர் நிர்வாகக் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளனர் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
ஆனால், இதுபோன்ற அனைத்து செய்திகளுக்கும் பைஜூ'ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இது குறித்து பைஜூ'ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பைஜு'ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவி விலகியதாக அண்மையில் வெளியான ஊடகத் தகவல்கள் முழுவதும் கற்பனையானது. பைஜூ'ஸ் இந்தத் தகவல்களை முழுமையாக மறுக்கிறது என்பது மட்டுமின்றி சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்புவதையோ அல்லது ஆதாரமற்ற ஊகங்களின் பெயரில் கட்டுக்கதைகளை வெளியிடுவதையோ தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்களை பைஜு'ஸ் வலியுறுத்துகிறது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
செயலி மூலம் இணையவழி கல்வி கற்பித்தலில் உச்சம் தொட்ட நிறுவனம்
 
இதற்கிடையே, பங்குதாரர்களின் கலகத்தை முறியடிக்கும் விதத்தில் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்ட பைஜூ'ஸ் நிறுவனம் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
 
அமெரிக்க செய்தி நிறுவனமான 'ப்ளூம்பெர்க்' வெளியிட்டுள்ள செய்தியின் படி,"பைஜூ'ஸ் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்டும் முயற்சியில் புதிய முதலீட்டாளர்களுடன் கடைசி சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது", எனத் தெரியவந்துள்ளது.
 
நிறுவனர் பைஜு ரவீந்திரனின் கட்டுப்பாட்டை குறைக்க சில முதலீட்டாளர்கள் முயற்சிப்பதைத் தடுக்க பைஜு'ஸ் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதற்கிடையே, கடந்த மாதம் மட்டும் சுமார் ஆயிரம் ஊழியர்கள் பைஜு'ஸ் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக 'மின்ட் ' என்ற ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
 
முன்னதாக, பைஜூ'ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு மூவாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. தற்போது இந்நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
 
தற்போது பரவி வரும் இதுபோன்ற செய்திகளுக்கு இடையே, பைஜூ'ஸ் அமெரிக்க நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் ஒன்றையும் நடத்திவருகிறது.
 
நியூயார்க் சுப்ரீம் கோர்ட்டில் 1.2 பில்லியன் டாலர் கடன் தொடர்பாக பைஜூ'ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
 
இந்த கடன் தொகையை பைஜு'ஸ் நிறுவனம் திருப்பி செலுத்த வேண்டிய நிலையில், அந்த கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதிகள் தற்போது அந்நிறுவனத்திடம் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நீண்ட கால அடிப்படையிலாகப் பெற்ற கடன் தொகையை விரைவாகத் திருப்பிச் செலுத்துமாறு கடன் கொடுத்த ரெட்வுட் நிறுவனம் அழுத்தம் கொடுப்பதாக பைஜு ரவீந்திரன் கூறுகிறார்.
 
2020-ம் ஆண்டு மார்ச் மாதம், கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தியாவில் நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகள் முதல் கடைகள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அந்த நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் நிலையில் இருந்தனர். வீடே உலகம் என ஏற்றுக்கொண்ட வாழ்ந்த பொதுமக்கள் இணையதளங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டனர்.
 
கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டபோது, ​​​​குழந்தைகள் ஆன்லைன் எஜுடெக் நிறுவனங்களில் சேர்வதில் அதிக ஆர்வம் எழுந்தது. இந்த காலகட்டத்தில் தான் திடீரென்று பைஜூ'ஸ் வேகமாக வளரத் தொடங்கியது.
 
அதன் பின் இந்நிறுவனம் ஒரு வருடத்திற்குள் சந்தையில் இருந்து ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் நிதி திரட்டியது.
 
இந்த பணத்தைக் கொண்டு, பைஜு'ஸ் நிறுவனம் அதன் போட்டியாளர்களாக விளங்கிய டஜன் கணக்கான நிறுவனங்களைக் கைப்பற்றி கல்வித்துறையில் அவற்றின் பங்களிப்புகளையும் தன்னகப்படுத்தியது. இதில் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ், கிரேட் லேர்னிங் மற்றும் ஒயிட் ஹாட் ஜூனியர் போன்ற நிறுவனங்களும் அடங்கும்.
 
இதன் மூலம், குழந்தைகளுக்கான தொடக்க நிலை வகுப்புகள் முதல் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது வரை அனைத்து கல்வித் தேவைகளையும் அளிக்கும் நிறுவனமாக மாறியது.
 
ஊடகங்களில் விளம்பரங்களை அளிப்பதற்காக செலவு செய்வதில் கூட பெரும் தொகையை இந்நிறுவனம் செலவழித்தது.
 
இந்த காலகட்டத்தில் இந்தியத் தொலைக்காட்சிகளில் அதிகம் காணக்கூடிய பிராண்டாக பைஜூ'ஸ் இருந்தது.
 
ஹிருத்திக் ரோஷன் பைஜு'ஸின் குறியீட்டு தளமான ஒயிட் ஹாட் ஜுனியரின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பைஜு'ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.
 
இந்நிறுவனம் இத்துடன் தனது பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. பின்னர் 2022-ம் ஆண்டு நவம்பரில் செலவினங்களைக் குறைக்கும் சூழ்நிலையில், பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை உலகளாவிய பிராண்ட் அம்பாசிடராக பைஜு'ஸ் தேர்வு செய்தது.
 
இது தவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐசிசி மற்றும் ஃபிஃபா ஆகியவற்றுடன் பிராண்டிங் பார்ட்னர்ஷிப்பும் ஏற்படுத்தப்பட்டது.
 
பைஜூஸ் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுள் வரை பிசிசிஐயின் முன்னணி ஸ்பான்சராக இருந்தது. இதே காலகட்டத்தில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 போட்டிக்கு நிதியுதவி செய்யும் முதல் இந்திய நிறுவனமாக வளர்ந்தது.
 
தற்போது, ​​பைஜூ'ஸ் மூன்று நிறுவனங்களுடனும் தனது வர்த்தக கூட்டாண்மையை முடித்துக் கொண்டுள்ளது.
 
நிறுவன வளர்ச்சிக்கு உதவிய கொரோனா பொதுமுடக்கம்
 
தொடர்ந்து போராட்டத்தில் சிக்கியுள்ள பைஜூ'ஸ் நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிய, மார்னிங் காண்டக்ஸ்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்திரிக்கையாளருமான பிரதீப் சாஹா, மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர் வணிக நிறுவனத்தின் விமர்சகரான டாக்டர் அனிருத் மல்பானி ஆகியோரிடம் பிபிசி பேசியது.
 
பிரதீப் சாஹா பேசிய போது, "பைஜூ'ஸ் நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டது திடீரென நடந்தது அல்ல. பைஜு'ஸ் வேகமாக வளர்ந்து வந்தது என்பதுடன் சிறப்பாக செயல்பட்டது என்ற பொதுவான கருத்துதான் அனைவரிடமும் நிலவுகிறது. இருப்பினும், இதுதான் நடந்தது என்று எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. குறிப்பிட்ட காலத்தில் இந்த நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான சந்தாக்களைக் காட்டி நிறைய பணம் திரட்டியது. கொரோனா தொற்று பரவிய காலத்தில் மட்டுமே நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டது என்பதற்கு, அது திரட்டிய பணத்தைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை," என்றார்.
 
மேலும் விளக்கிய அவர், “உதாரணமாக, 2020-21 நிதியாண்டிற்கான கணக்குகளை ஆய்வு செய்தால், அந்நிறுவனத்தின் வருவாய் நிலையானது என்பதுடன், பற்றாக்குறை 19 மடங்கு அதிகரித்திருந்ததை அறிய முடியும். பைஜூ'ஸ் நிறுவனத்தின் பணப் புழக்கத்தில் சிக்கல் உள்ளது என்றே தோன்றுகிறது," என்றார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "அந்நிறுவனத்துக்கு கடனளித்த நிறுவனத்துடன் சட்டப் போராட்டம் நடந்து வரும் நிலையில், வணிகமும் மிகமெதுவாக நடந்துவருகிறது. 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான வரவுசெலவு அறிக்கைகளை அந்நிறுவனம் தாக்கல் செய்யும் வரை அதன் பொருளாதார நிலை குறித்து எதுவும் பேச முடியாது," என்றார்.
 
மறுபுறம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுடனான உறவுகளை பைஜு'ஸ் நிறுவனம் முறையாகப் பேணவில்லை என்பதே அந்நிறுவனத்தின் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என டாக்டர் அனிருத் மல்பானி கூறுகிறார்.
 
தொடர்ந்து பேசிய அவர், ​​“ஆரம்பத்தில் இருந்தே பைஜூ'ஸ் நிறுவனத்துக்கு இப்படி ஒரு சூழல் உருவாக்கப்பட்டு வந்தது. நிறுவன உரிமையாளர் தொடர்ந்து நிதி திரட்டிக் கொண்டிருந்ததால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. இவ்வாறு நிதி ஆதாரங்களைப் பெருக்கும் முயற்சியில் அவர் ஈடுபடாமல் இருந்திருந்தால் எப்போதோ அவரது நிறுவனம் தற்போதைய நிலைக்குச் சென்றிருக்கும். பணியாளர்களை இயந்திரங்கள் போல் நடத்தியது மட்டுமின்றி வாடிக்கையாளர்களிடமும் வரவு செலவுகளில் முறையான உறவுமுறைகளை அவர் பேணவில்லை," என்றார்.
 
மேலும், “இதன் விளைவாக நல்லதும் ஏற்பட்டிருக்கிறது; கெட்டதும் ஏற்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கெட்ட விஷயம் என்னவென்றால், இது ஒரு பெரிய எஜுடெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் சோகமான கதையாகிவிட்டது. நல்ல விஷயம் என்னவென்றால், மக்கள் இதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளனர்," என்றார் அவர்.
 
பைஜு'ஸ் நிறுவனத்துக்கான தீர்வுகள் குறித்து பேசிய போது, நிறுவனம் லாபம் ஈட்டுவதில் வெற்றி பெற்றால், அது நிச்சயமாக மீண்டும் முன்பிருந்ததைப் போலவே மீண்டும் வரும் என்று பிரதீப் சாஹா நம்புகிறார்.
 
பிரதீப் பேசிய போது, ​​“பைஜு'ஸ் அதன் பிரச்சனைகளில் இருந்து மீண்டுவர முடியுமா இல்லையா என்பது பல விஷயங்களைப் பொறுத்தது. முதலில், அமெரிக்காவில் இருக்கும் கடன் நெருக்கடியை எப்படி தீர்க்க முடியும் எனத் தெரியவில்லை. இரண்டாவதாக, வென்ச்சர் கேபிட்டல் (VC) மூலம் அதிக நிதியைத் திரட்ட முடியுமா என்பதைப் பொறுத்தது. மூன்றாவதாக, எவ்வளவு விரைவாக லாபம் ஈட்டும் நிலையை அந்நிறுவனம் அடைகிறது மற்றும் மிக முக்கியமாக, ஆகாஷ் நிறுவனப் பங்குகள் எவ்வளவு விரைவாக வெளியிடப்படுகின்றன என்பதை பொறுத்தே எந்த முடிவுக்கும் வரமுடியும்," என்றார்.
 
பைஜு'ஸ் ஆக இருந்தாலும் சரி, வேறு எந்த எஜுடெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருந்தாலும் சரி, முதலீட்டாளர்களுக்குப் பதிலாக வாடிக்கையாளருக்கு முன்னுரிமை கொடுத்தால், அந்த ஸ்டார்ட்அப்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்கிறார் டாக்டர் அனிருத் மல்பானி.
 
டாக்டர் அனிருத் பேசிய போது, ​​“எதிர்காலம் கணிக்க முடியாதது என்பது மட்டுமல்ல, அது நிச்சயமற்றதும் கூட. பைஜு'ஸ் தனது சொந்த யோசனையை மட்டும் கொண்டிருக்கவில்லை. அந்நிறுவனத்துக்கு முன்னர் அன்அகாடமி என்ற ஒரு நிறுவனம் மிகச்சிறந்த பிராண்டாக இருந்தது.
 
தற்போது இந்தியாவில் கல்வி கற்பித்தல் என்பது பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறிவிட்டது. அதனால்தான் இது போன்ற எஜுடெக் நிறுவனங்கள் இன்னும் முன்னேற வாய்ப்புகள் இருப்பதாக நான் நம்புகிறேன்," என்றார்.
 
இந்த நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு பைஜு'ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்பதில் பிரதீப் சாஹா மற்றும் அனிருத் மல்பானி இருவரும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர்.