செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (23:55 IST)

பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது?

பிரிட்டிஷ் அரசி எலிசபெத்தின் கணவரும் எடின்பரோ கோமகனுமான இளவரசர் ஃபிலிப், புதன்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
பக்கிங்காம் அரண்மனை தகவலின்படி, அவர் உடல் அசெளகரியமாக உணர்ந்ததை அடுத்து, லண்டனில் உள்ள கிங் எட்வர்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
அரண்மனை வட்டாரம், "மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் மருத்துவமனைக்கு காரில் சென்றார்," என பிபிசியிடம் கூறியது.
 
எடின்பரோ கோமகன் ஃபிலிப் நல்ல உணர்வுடனேயே காணப்பட்டதாக அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது. அடுத்த சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையிலேயே தங்கி பரிசோதனைகளை மேற்கொண்டு முழு ஓய்வில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த சில நாட்களாகவே ஃபிலிப் உடல் சுகவீனத்துடன் காணப்பட்டதாகவும் அது கொரோனா வைரஸ் தொடர்பானதாக இல்லை என்றும் பிபிசியிடம் பேசிய அரண்மனை வட்டாரம் கூறியது.
 
கடந்த மாதம் இளவரசர் ஃபிலிப்பும் அரசியும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை வின்சர் கோட்டையில் உள்ள குடும்ப மருத்துவர் மூலம் பெற்றுக் கொண்டிருந்ததாக அரண்மனை அறிவித்தது.
 
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்த பிரிட்டனில் தங்களுடைய அரண்மனையில் இல்லாமல் சிறிய அளவிலான ஊழியர்களுடன் ஹெச்.எம்.எஸ் பப்பிள் என்ற வின்சர் கோட்டியில் பிரிட்டிஷ் அரச தம்பதி வசித்து வந்தனர்.
 
அப்போது கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை சாண்டிரிங்காமில் குடும்ப நிகழ்வாக நடத்தாமல், பெர்க்ஷையர் மாளிகையில் அவர்கள் கொண்டாடினார்கள்.
 
97 வயதிலும் கார் ஓட்டிய இளவரசர் பிலிப்; காயமேதுமின்றி விபத்திலிருந்து உயிர் தப்பினார்.
 
இரண்டாம் எலிசபத் ராணியைவிட சோனியா காந்தி பணக்காரரா?#BBCFactCheck
இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இதே வேளை 94 வயதாகும் அரசி எலிசபெத், தொடர்ந்து வின்சர் கோட்டையிலேயே வசித்து வருகிறார்.
 
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் இளவரசர் ஃபிலிப் உடல் நலம் பெற பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார்.
 
இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டி டிசம்பர் மாதம் இதே எட்வர்டு மருத்துவமனையில் இளவரசர் ஃபிலிப் நான்கு நாட்களை கழித்தார். ஏற்கெனவே உள்ள உடல் பிரச்னைக்காக அவர் அப்போது மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.