'இலங்கையில் பாஜக ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளது' - மறவன்புலவு க. சச்சிதானந்தன்

BBC
Prasanth Karthick| Last Modified புதன், 17 பிப்ரவரி 2021 (14:46 IST)
பாரதிய ஜனதா கட்சி நேபாளம் மற்றும் இலங்கையில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவை மேற்கோள்காட்டி திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் வெளியிட்ட கருத்து இலங்கையில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இலங்கையில் பாஜக கிளையை தொடங்க இங்குள்ள இந்துத்துவவாதிகள் விரும்புகின்றனர் என்கிறார் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர்.

பிப்லப் குமார் தேப் வெளியிட்ட கருத்து தொடர்பான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் க்யாவாலி ட்விட்டர் பயனர் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ள நேபாள தூதரகமும் இந்திய அதிகாரிகளிடம் தங்கள் எதிர் கருத்தைத் தெரிவித்துள்ளாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள், இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கான உதவிகள், 5 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் நோக்குடனேயே பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசு செய்தது என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

'தமிழர் பகுதிகளில் தேவையற்ற அழுத்தம்'

இலங்கை தமிழர் பகுதிகளில் தேவையற்ற விதத்தில் அழுத்தங்களை உண்டாக்குவதற்காக இவ்வாறான கருத்தொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவதாக ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை நிர்க்கதி நிலைக்கு உட்படுத்தி, இந்தியாவிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளா மேற்கொள்ளப்படுகின்றது எனவும் கேள்வி எழுவதாக அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்க மறுப்பு தெரிவித்த சந்தர்ப்பத்தில் இருந்தா, இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் ராஜாங்க அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் உள்ளக நோக்கம் என்னவென்பது தொடர்பில் முதலில் ஆராய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவிக்கின்றார்.

திடீரென வெளியிடப்பட்ட கருத்தின் ஊடாக, இதனை புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

'நோக்கம் உள்ளது' - இலங்கை சிவ சேனை

இலங்கைப் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான நோக்கம் உள்ளதாக இலங்கை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள இந்துத்துவவாதிகளுக்கே இவ்வாறான நோக்கம் ஒன்று உள்ளதாகவும் தான் உறுதிபட கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயரை இலங்கையில் பெயராக்கி கட்சி தொடங்குவது புதிய செய்தி அல்ல என அவர் நினைவூட்டியுள்ளார்.

இந்தியாவின் விடுதலை இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸின் வெற்றிகரமாக செயலைப் பார்த்துக் கொழும்பில் சிங்களவரும் தமிழரும் இணைந்து உருவாக்கியது இலங்கை தேசிய காங்கிரஸ் என அவர் கூறியுள்ளார்.

இலங்கை வரலாறு இந்தியப் பண்பாட்டை தழுவியதாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் என்ன சொல்கிறது?

பாரதீய ஜனதா கட்சியின் நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக அமித் ஷா கருத்தொன்றை வெளியிட்டதாக உறுதியான தகவல்கள் எதுவும் கிடையாது இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்தொன்றை அமித் ஷா கூறியதாக திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சரே தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக அமித் ஷா, இவ்வாறான கருத்தை வெளியிடும் வகையிலான காணொளி அல்லது அறிக்கை இதுவரை ஊடகங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து, தனது அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, இலங்கை வாழ் தேச பற்றாளர்கள், வெளிநாட்டு கட்சியொன்றுக்கு ஆதரவு வழங்குவார்கள் என தான் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கட்சி இலங்கையில் போட்டியிட முடியுமா?

இலங்கை அரசியலமைப்புக்கு அமைய, வெளிநாட்டு கட்சியொன்றை இலங்கையில் பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள கட்சிகளுக்கு வெளிநாட்டு கட்சிகளுடன் தொடர்புகளை பேண முடியும் என்ற போதிலும், வெளிநாட்டு கட்சியொன்று நாட்டிற்குள் பதிவு செய்ய முடியாது எனவும் அவர் கூறினார்.

இலங்கை குடியுரிமை பெறாத ஒருவரால், இலங்கையில் கட்சியொன்றை ஆரம்பிக்கவோ வாக்களிக்கவோ முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.


இதில் மேலும் படிக்கவும் :