செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு சற்று முன் உயிர்பிழைத்த சிறுவன்

Last Modified புதன், 9 மே 2018 (17:53 IST)
அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுவனுக்கு அவனது பெற்றோர் அவனது உறுப்புகளை தானமாக வழங்கும் நடைமுறைகளில் கையெழுத்திட்டப் பிறகு அச்சிறுவனுக்கு நினைவு திரும்பியது.

 
ட்ரென்டன் மெக்கின்லே மார்ச் மாதம் ஒரு வாகன விபத்தில் சிக்கி கடுமையான மூளை காயங்களால் பாதிக்கப்பட்டார்.மருத்துவர்கள் அவனது பெற்றோரிடம், இனி அவன் திரும்பிவரமாட்டான். உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் ஐந்து சிறுவர்களுக்கு அவனது உடல் பாகங்கள் பொருந்திப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
அவனது உயிருக்கு ஆதரவு வழங்கி வந்த செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு, ஒருநாள் முன்னதாக ட்ரென்டன் தனக்கு நினைவு இருக்கும் அறிகுறிகளை காட்டினான். அலபாமாவில், ஒரு மொபைல் வண்டி விபத்தில் சிக்கியதில் மண்டைஓட்டில் ஏழு முறிவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார்.அவருடைய அம்மா ஜெனிஃபர் ரெய்ன்ட்டில்லை பொறுத்தவரையில் , தனது மகனுக்கு பல கிரேனியோடமி அறுவை சிகிச்சை (மண்டை ஓட்டில் செய்யப்படும் அறுவை சிகிச்சை) செய்யப்பட்டதிலிருந்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதய நிறுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
 
ஒரு புள்ளியில் திருமதி ரெய்ன்ட்டில் கூறுகையில், ட்ரென்டன் மறுபடி சாதாரண நிலைக்கு வரமாட்டான் என தன்னிடம் மருத்துவர்கள் கூறியதாக தெரிவிக்கிறார். சிபிஎஸ் நியூஸிடம் பேசிய ரெய்ன்ட்டில், தனது மகனின் உறுப்புகள் ஐந்து குழந்தைகளை காப்பாற்றும் என தெரிந்தபோது உறுப்பு தானத்துக்கான தாளில் கையெழுத்திட சம்மதித்தாக தெரிவித்தார். ''நாங்கள் கையெழுத்திட சரி என்றோம் மேலும் அவனது உறுப்புகள் தானத்திற்காக எடுக்கும் வரையில் ட்ரென்டனை மருத்துவர்கள் உயிருடன் வைத்திருக்க வேண்டும் என உறுதி வாங்கிக்கொண்டோம்'' என எப்படி தனது மகனுக்கு மார்ச் மாதம் மீண்டும் நினைவு திரும்பியது என்பதை நினைவு கூர்ந்து சொல்கிறார் ரெய்ன்ட்டில்.

 
'அடுத்தநாள், இறந்து விட்டார் என அறிவிப்பதற்காக அவனுக்கு இறுதி மூளை அலை பரிசோதனை செய்யப்பட வேண்டியதிருந்தது. ஆனால் நினைவு திரும்பிய சமிக்ஞை வந்ததால் பரிசோதனை ரத்துச் செய்யப்பட்டது'' ட்ரென்டன் தற்போது மெதுவாக குணமாகி வருகிறார். '' நான் அந்த வண்டியை சுவற்றில் மோதினேன், அந்த டிரைலர் வண்டி எனது மண்டையின் மீது விழுந்தது. அதற்குப் பிறகு எனக்கு எதுவும் நினைவில்லை'' என சொல்கிறார் ட்ரென்டன்.
 
சிறுவனுக்கு இன்னமும் நரம்பு வலி மற்றும் வலிப்பு இருக்கிறது. அவருடைய பாதி மண்டை ஓட்டை மீண்டும் பொருத்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளது. ட்ரென்டன் தற்போது விளையாடுகிறார், பேசுகிறார், படிக்கிறார் மற்றும் கணக்கு போடுகிறார். ரெய்ன்ட்டில் இதனை '' ஓர் அதிசயம்'' என கூறுகிறார் .
 
தனக்கு நினைவு திரும்பாதபோது தான் சொர்க்கத்தில் இருந்தது போல நம்புவதாக ட்ரென்டன் தெரிவித்துள்ளார். ''ஒரு திறந்த வெளியில் நேராக நடந்து கொண்டிருந்தேன். கடவுள் தவிர வேறு எந்த விளக்கமும் இதற்குச் சொல்ல முடியாது'' என்கிறார் 13 வயது சிறுவன்.
 
தற்போது இந்த குடும்பம் மருத்துவ செலவுகளை சமாளிப்பதற்காக பேஸ்புக்கில் ஒரு நிதிதிரட்டலில் ஈடுபட்டுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :