ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (17:03 IST)

பாஜகவின் 'அருந்ததியர்' அரசியல்: கொங்கு மண்டல கணக்கால் திமுக, அதிமுக அதிர்ச்சியா?

கொங்கு மண்டல அருந்ததியர் சமூகத்தினரை முன்வைத்து பா.ஜ.க நடத்தி வரும் அரசியல் ஆட்டத்தால் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
`மேற்கு மண்டலத்தில் 5 மக்களவை தொகுதிகளை இலக்காக வைத்து பா.ஜ.க இயங்கி வருகிறது. அ.தி.மு.க கையாளும் அதே திட்டத்தை முருகன் கையில் எடுத்திருக்கிறார்,' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேற்கு மண்டலத்தில் என்ன நடக்கிறது?
 
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதன் காரணமாக, மத்திய அரசில் இணை அமைச்சராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். அதைக் கொண்டாடும் வகையில், `மக்கள் ஆசி யாத்திரை' என்ற ஒன்றை முருகன் முன்னெடுத்தார்.
 
கடந்த 16 ஆம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கிய இந்த யாத்திரையை திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் என 169 இடங்களில் நடத்தி, அங்குள்ள மக்களை சந்தித்து பயணத்தை நிறைவு செய்திருக்கிறார் முருகன்.
ஒருங்கிணைக்கப்பட்ட சாதி அமைப்புகள்
மூன்று நாட்கள் நீடித்த இந்தப் பயணத்தில், தனது சொந்த சமூகமான அருந்ததிய மக்களிடம் ஆசி பெறுவதை முக்கிய நோக்கமாக முருகன் வைத்திருந்தார். இதையொட்டி, யாத்திரை நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக முப்பதுக்கும் மேற்பட்ட சாதி அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒன்று திரட்டி, `எந்தவகையில் யாத்திரையை சிறப்பாக நடத்துவது?' என விவாதிக்கப்பட்டது.
 
அதற்கேற்ப, கோவையில் முருகனுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. கோவையில் அருந்ததியர் மக்கள் அடர்த்தியாக வாழும் காமராஜபுரம் பகுதியில் உள்ள அம்மக்களின் கால்களில் விழுந்து முருகன் ஆசிபெற்றார். இதனால் அப்பகுதியில் உள்ள பா.ஜ.கவினர் நெகிழ்ந்து போனார்கள்.
 
``அருந்ததியர் சமூகத்துக்கு மத்தியில் அமைச்சர் பதவி கொடுத்த ஒரே கட்சி பா.ஜ.கதான். திராவிடக் கட்சிகளால் எங்களுக்கு எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை. எல்.முருகனின் வருகையால் அருந்ததியர் மக்களுக்கான ஒரே கட்சியாக பா.ஜ.க மாறிவிட்டது" எனவும் பிபிசி தமிழிடம் விவரித்தார், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மதன்மோகன். இவர் கோவை மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவராக இருக்கிறார்.
 
அதேநேரம், எல்.முருகனின் யாத்திரை தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகளை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போது அருந்ததிய மக்களின் நலனை கவனத்தில் வைத்தே பிரதான கட்சிகள் இயங்கி வருகின்றன.
 
இதில், `எந்த ஆட்சியில் அருந்ததிய மக்களுக்கு அதிக நன்மை கிடைத்தது?' என்ற விவாதங்களும் நடைபெறுவது வழக்கம். மேற்கு மண்டலத்தின் பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக் கூடியவர்களாக அருந்ததிய மக்கள் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் தி.மு.க பெற்ற தோல்வியின் பின்னணியிலும் அருந்ததியர் சமூக வாக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
அ.தி.மு.க வெற்றிபெற்ற பின்னணி
``தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர்களும் வடக்கு மாவட்டங்களில் பறையர் சமூகம் பரவலாக வசிப்பது போல, மேற்கு மாவட்டங்களில் அருந்ததியர் சமூகத்தினர் அடர்த்தியாக வாழ்கின்றனர். மேற்கில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் 5 முதல் 15 சதவிகிதம் அளவுக்கு அருந்ததியர்கள் உள்ளனர். உதாரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ராஜாஜிபுரத்தில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட அருந்ததிய குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு சுமார் 2,000 பேர் உள்ளனர். மொத்தமாக ஈரோடு கிழக்கு தொகுதி முழுக்க பார்த்தால் பத்தாயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த சட்டமன்றத் தேர்தலில் 100 பேர் உள்ள இடத்தில் 15 பேர் மட்டுமே தி.மு.கவுக்கு வாக்களித்தனர். பல தொகுதிகளில் அ.தி.மு.கவுக்கு சாதகமாக நிலைமை மாறிவிட்டது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன" என்கிறார் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஒருவர்.
 
தொடர்ந்து அவர் சில புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டார். ``மேற்கு மண்டலத்தில் உள்ள அருந்ததியர் சமூகத்தினர் பலரும், வேளாள கவுண்டர் சமூகத்தைச் சார்ந்துள்ளனர். தொழில்முறையிலும் அவர்களை நம்பியே பலரும் உள்ளனர். இங்குள்ள ஊராட்சி மன்றங்களின் தலைவர் பதவிகளில் கவுண்டர் சமூகத்தினர் உள்ளனர். அதனால் அவர்களை சார்ந்தே செயல்பட வேண்டிய நிலையில் அம்மக்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் இருந்ததால் அவர்களை அடிக்கடி பார்த்து தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். இதனால் எதிர்பார்த்த அளவுக்கு தி.மு.கவால் வாக்குகளை கொண்டு வர முடியவில்லை. இதுதான் மேற்கு மண்டலத்தில் தி.மு.க தோல்விக்கு அடிப்படையாக அமைந்தது" என்றார் அந்த திமுக பிரமுகர்.
 
கணக்குகள் சொல்லும் அதிர்ச்சி
மேலும், ``குமாரபாளையம் தொகுதியில் அருந்ததியர் வாக்குகள் அ.தி.மு.க வேட்பாளர் தங்கமணி பக்கம் சென்று விட்டது. ஆனால், ஈரோடு மேற்கு தொகுதியில் தி.மு.கவுக்கு அம்மக்கள் வாக்களித்துள்ளனர்.
 
மொடக்குறிச்சியில் அருந்ததியர் சமூக வாக்குகள் தி.மு.கவின் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கிடைக்கவில்லை. ஆனால், அந்தியூரில் அவர்களின் கிடைத்ததால் தி.மு.க வெற்றி பெற்றது. அதேபோல், ஈரோடு கிழக்குத் தொகுதியில் கிடைத்த வாக்குகள், பெருந்துறையில் கிடைக்கவில்லை" என்கிறார் அவர்.
``இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வது?" என்றோம். ``தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை பார்த்து அம்மக்கள் வாக்களித்ததுதான். சாதியை பார்க்காமல் தங்களிடம் நன்றாகப் பழகும் நபர்களை அவர்கள் வரவேற்றுள்ளனர். கடந்த 15 வருடங்களாக குமாரபாளையத்தில் உள்ள அருந்ததிய மக்களுடன் தங்கமணி நெருங்கிப் பழகியதால், அவருக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், அதே சமூக மக்கள் ராசிபுரத்தில் தி.மு.கவின் மதிவேந்தனுக்கு வாக்களித்துவிட்டு அ.தி.மு.கவின் சரோஜாவை தோற்கடித்துள்ளனர். தங்களுக்கு நம்பிக்கையானவர் என நினைப்பவரை வரவேற்றுள்ளனர். இந்தக் கணக்குகளை முழுமையாக அறிந்ததால்தான் அருந்ததிய சமூகத்தின் முகமாக தன்னை முன்னிறுத்தி வாக்குகளை பா.ஜ.க பக்கம் கொண்டு வரும் வேலையை முருகன் செய்கிறார்" என்கிறார்.
 
பா.ஜ.கவின் திட்டம்தான் என்ன?
``கொங்கு மண்டலத்தில் பா.ஜ.கவின் திட்டம்தான் என்ன?" என அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அருந்ததியர் சமூகத்தில் இருந்து முதல்முறையாக மத்தியில் ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தெலுங்கு பேசும் அருந்ததிய மக்களிடம் பா.ஜ.க கொண்டு செல்கிறது. கொங்கு மண்டலத்தில் பலம் வாய்ந்த சக்தியாக உள்ள அ.தி.மு.கவின் வாக்குவங்கியை குறிவைத்து பா.ஜ.க நகர்கிறது" என்கிறார்.
 
தொடர்ந்து பேசுகையில், `` தி.மு.க கொடுத்த 3 சதவிகித உள்ஒதுக்கீட்டால் அக்கட்சியின் பக்கம் அம்மக்கள் கணிசமாக உள்ளனர். தி.மு.க, அ.தி.மு.க பக்கம் உள்ள அருந்ததிய வாக்குகளை பா.ஜ.க பக்கமும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முருகன் இறங்கியுள்ளார். அ.தி.மு.கவின் வேளாள கவுண்டர் பிளஸ் அருந்ததியர் ஃபார்முலாவை பா.ஜ.க கையில் எடுக்கிறது. இது கூட்டணியாக அ.தி.மு.கவுக்கு கூடுதல் பலம் கொடுக்கும் என நினைக்கின்றனர். மேலும், பா.ஜ.க இல்லாமல் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.கவால் எதையும் செய்ய முடியாது என்பதை நிறுவுவதற்கான முயற்சியாகவும் இதனைப் பார்க்கலாம்" என்கிறார்.
 
இலக்கு 5 எம்.பி தொகுதிகள்
 
மேலும், ``மேற்கு மண்டலத்தில் 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக் கூடிய வகையில் அருந்தியர் வாக்குகள் உள்ளன. இதனை வைத்து கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய 5 தொகுதிகளை இலக்காக வைத்து பா.ஜ.க செயல்படுகிறது. அருந்ததியர் சமூகத்தில் தனபால் தவிர வேறு யாரும் பெரிதாக வளராததால், அங்கு முருகனை முன்னிறுத்துகின்றனர். அம்மக்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதால் நம் பக்கம் வருவார்கள் என்பதுதான் பா.ஜ.கவின் கணக்கு. இதன்மூலம், அ.தி.மு.க கூட்டணிக்கு பா.ஜ.க அவசியம் என்பதைக் காட்டுவதற்காகவும் செய்கின்றனர்" என்கிறார்.
`எல்.முருகனின் யாத்திரையால் தி.மு.கவுக்கு பாதிப்பா?" என முன்னாள் எம்.எல்.ஏவும் தி.மு.கவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளருமான ஈரோடு சந்திரகுமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம் .`` அருந்ததியர் சமூக மக்கள் பா.ஜ.க பக்கம் செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. முருகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தவுடனேயே, அந்த சமூக மக்கள் அவர் பின்னால் சென்றுவிட வேண்டும் என்பது என்ன வகையான அரசியல் எனத் தெரியவில்லை. வடமாநிலங்களில் முழுக்க முழுக்க மதம் மற்றும் சாதியை வைத்து பா.ஜ.க அரசியல் செய்கிறது. பீகார், உ.பி, ம.பி ஆகிய மாநிலங்களில் பா.ஜ.கவின் நோக்கம் எடுபடுகிறது. இங்கும் அதேபோல் கொண்டு வரவேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், எந்தக் காலகட்டத்திலும் கொங்கு மண்டல அருந்ததிய மக்கள் அவர்கள் பின்னால் செல்ல மாட்டார்கள்" என்கிறார் அவர்.
 
பல் பிடுங்கப்பட்ட பாம்பா?
``அண்டை மாநிலங்களில் உள்ள அருந்ததிய சமூக மக்களைவிடவும், இங்குள்ள மக்களுக்கு தி.மு.க கொடுத்த சமூக முன்னேற்றத்துக்கான திட்டங்கள் எல்லாம் அவர்களை நல்ல இடத்துக்கு உயர்த்தியுள்ளன. அதற்காக அந்த மக்களுக்கு எதுவும் தேவையில்லை என கூறவில்லை. அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. ஆனால், இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் உள்ள அருந்ததிய மக்களின் வாழ்வு மேம்பாடு அடைந்துள்ளது. `நமக்கு யார் சரியான தலைவராக இருப்பார்?' என முடிவெடுத்ததால்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அம்மக்கள் வாக்களித்தனர்.
 
அதனால், அருந்ததிய சமூக மக்கள் தி.மு.க பக்கம் நிற்கிறார்கள். பா.ஜ.கவின் தமிழ்நாடு தலைவராக முருகன் வருவதற்கு முன்னர் தான் சார்ந்த சமூகத்தின் எதாவது பெரிய நிகழ்வுகளில் பங்கெடுத்திருந்தாலோ, வழக்குரைஞர் பணியில் அம்மக்களுக்காக எதையாவது செய்து கொடுத்திருந்தாலோ அவரை நம்பலாம். ஆனால், அவ்வாறு எதையும் அவர் செய்து கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்தநிலையில், அருந்ததிய மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பா.ஜ.க கொடுத்துள்ள அமைச்சர் பதவி என்பது பல் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றதுதான். இந்தப் பதவியை வைத்துக் கொண்டு அந்த மக்களுக்கு இவரால் எதுவும் செய்ய முடியாது," என்கிறார்.
 
மேலும், ``அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர், துணை சபாநாயகர், எம்.எல்.ஏ, எம்.பி, துணைப் பொதுச் செயலாளர் என ஏராளமான பதவிகளை கொடுத்து அலங்கரித்தது தி.மு.கதான். அம்மக்களுக்கான 3 சதவிகித உள்ஒதுக்கீட்டையும் கருணாநிதி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் பின்னால் அவர்கள் நிற்கிறார்கள். அப்படியிருக்கையில் முருகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிட்டதாலேயே அம்மக்கள் அவரோடு நிற்பார்கள் என்பதையெல்லாம் நகைச்சுவையின் உச்சமாகத்தான் பார்க்கிறேன்," என்கிறார்.
 
அ.தி.மு.கவுக்கு பாதிப்பா?
``முருகனின் யாத்திரையால் அ.தி.மு.க பக்கம் உள்ள அருந்ததியர் வாக்குகள் சிதறும் என்கிறார்களே?" என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அவர்கள் அவர்களின் கட்சியை வளர்க்கப் பாடுபடுகிறார்கள். நாங்கள் வரும் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெறும் வகையில் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது எந்த வகையிலும் எங்களை பாதிக்காது. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அம்மக்கள் அ.தி.மு.க பக்கம்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்றுமே அ.தி.மு.க அரணாக உள்ளது," என்கிறார்.
 
``அம்மக்களில் தூய்மைப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கியது, வீடு ஒதுக்கீடு என சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளோம். தலித் மக்களின் வாழ்வுரிமைகளை காப்பதில் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.கவால் அ.தி.மு.கவின் அருந்ததியர் வாக்குகள் பிரியப் போவதில்லை. தங்களை வளர்த்துக் கொள்ளும் வேலைகளில் பா.ஜ.கவினர் உள்ளனர். தவிர, அவர்கள் எங்கள் கூட்டணியில் இருப்பதால் எந்த பாதகமும் வரப்போவதில்லை. இதனால் எங்கள் கூட்டணிதான் பலப்படும். அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் பாதிப்பு வரப் போவதில்லை," என்கிறார்.
 
`` முருகனின் மக்கள் ஆசி யாத்திரைக்குக் கிடைத்த வரவேற்பு சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதைப் பார்க்கிறேன். அருந்ததியர் சமூகம் மட்டுமல்லாமல் பிற சமூகத்தினரும் முருகனை வரவேற்கின்றனர். சமூகங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு அகற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். முருகனின் மக்கள் ஆசி யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பை, பெரிய மாற்றத்துக்கான விதையாக பார்க்கிறேன்" என்கிறார், கேரள மாநில பா.ஜ.க பொறுப்பாளரும் முன்னாள் எம்.பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன்.
 
``அடுத்து வரக் கூடிய தேர்தல்களின் மூலம் பா.ஜ.கவின் நோக்கம் நிறைவேறியதா.. அருந்ததிய மக்களின் வாக்குகள் மடைமாறியதா என்பதை அறியலாம்" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.