பாஜக பெரும் வெற்றி: ‘அதிமுக ஆட்சி நீடிப்பது நரேந்திர மோதி கையில்தான் இருக்கிறது’ - ஏ.எஸ். பன்னீர்செல்வன்

bjp
Last Updated: சனி, 25 மே 2019 (12:15 IST)
இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியிருக்கும் நிலையில் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களைப் பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுவது என்ன என்பது குறித்து தி ஹிந்து நாளிதழின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ். பன்னீர்செல்வனிடம் உரையாடினார் முரளிதரன் காசிவிஸ்வநாதன். பேட்டியிலிருந்து:கே. 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. பாரதீய ஜனதாக் கட்சி கூடுதல் இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்டதா?

ப. எல்லோருமே என்ன சொன்னார்கள் என்றால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். ஆனால், கடந்த ஆண்டில் பெற்ற இடங்களைவிட குறைவான இடங்களைப் பிடித்தே ஆட்சிக்கு வரும் என்று பொதுவான கருத்து இருந்தது. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானபோது, இந்த எண்ணம் உடைந்து போனது. ஆனால், அந்தக் கருத்துக் கணிப்பில் சிக்கல் இருக்கலாம், அந்த கணிப்பு பொய்யாகும் என சொல்லப்பட்டது.

ஆனால், நடந்தது என்னவென்றால், 1985ல் ராஜீவ் காந்தி பெற்ற வெற்றிக்கு அடுத்த மிகப் பெரிய வெற்றியை மோதி தலைமையிலான பா.ஜ.க. பெற்றிருக்கிறது. ஆனால், இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்பதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.

முதல் முறையாக ஜாதியைவிட மதம் முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது. ஜாதி என்ற பிரிவினைக்குள் வெறுப்பு என்ற விஷயம் இல்லை. தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஒரு விஷயமாகத்தான் அது இருக்கும். தலித்துகளாக இருந்தாலும் ஓபிசிக்களாக இருந்தாலும் தங்களுக்கு கூடுதலான அதிகாரம் வேண்டும், சலுகைகள் வேண்டும், வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்ற விஷயங்களைத்தான் அது வலியுறுத்தும்.

ஆனால், இந்தச் ஜாதிப் பிரிவினையை மிக மோசம் என்று சொல்லிவிட்டு அதைவிட மோசமான மதவாதத்தை முன்வைப்பது எந்தவிதத்தில் மேம்பட்டது எனப் புரியவில்லை.

இதன் நீண்ட கால விளைவுகளை இனிமேல்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பா.ஜ.க. என்பது 1980களில் இருந்து மோதி - அமித் ஷா இணையவர் வரும்வரை ஒரு குழு தலைமையேற்கும், முடிவுகளை எடுக்கும் கட்சியாகத்தான் இருந்தது. அத்வானியும் வாஜ்பாயியும்கூட, இருவேறு கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். கருத்து மோதலுக்கான இடம் தலைமையில் இருந்தது.

2014க்குப் பிறகு தலைமையில் பெரிய அளவு அதிகாரம் குவிக்கப்பட்ட ஒரு அமைப்பாக பா.ஜ.க. மாறுகிறது. இந்த பா.ஜ.கவுக்கும் ஆரம்பகால பா.ஜ.கவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இது புதிய பா.ஜ.க. இந்த புதிய பா.ஜ.கவில் எல்லா அதிகாரங்களும் தலைமையிடம் குவிக்கப்பட்டுள்ளன.

இது என்ன செய்யுமெனத் தெரியவில்லை. இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் அதிகாரம் கீழ்மட்டம் வரை பகிரப்பட்ட கட்சிகள்தான் நல்லது என்பது பொதுவான புரிதல். அந்த புரிதலுக்கு எதிரான நிலையைத்தான் இந்த வெற்றி காட்டுகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸிற்குக் கிடைத்த தோல்வியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து சில மாதங்களிலேயே இவ்வளவு பெரிய பின்னடைவை ஆளும்கட்சி சந்தித்த நிகழ்வை நாம் இதுவரை பார்த்ததில்லை. ராஜஸ்தானில் ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால், 25 இடங்களையும் பா.ஜ.கவிடம் இழந்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா, அக்கட்சியின் அடுத்த தலைமுறை நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டு, பிரியங்கா காந்தியோடு சேர்ந்து பொது செயலாளராக்கப்பட்டார். காங்கிரசின் தலைமுறை மாற்றத்திற்கான அடையாளமாக அது பார்க்கப்பட்டது.


bjp

ஆனால், அப்படி யார் அடையாளம் காட்டப்பட்டார்களோ, அவர்களே தோற்றுப் போகிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?


ஆனால், ஒரு விஷயத்தில் பா.ஜ.க. சொல்வதை ஏற்க முடியாது. இந்தத் தேர்தலின் மூலம் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அது தவறு. ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிபெற்றிருக்கிறார். நவீன் பட்நாயக் வெற்றிபெற்றுள்ளார். காங்கிரசிலும் பல வாரிசுகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். பா.ஜ.கவிலும் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆகவே வாரிசு அரசியலுக்கு எதிரான வெற்றி என்பதை ஏற்க முடியவில்லை.

இது தவிர்த்த பா.ஜ.கவின் வெற்றிக்கான மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள கால அவசாகம் தேவைப்படும்.

கே. தமிழ்நாட்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தேசிய அளவில் உள்ள பா.ஜ.க. ஆதரவு மனப்போக்கிற்கு எதிராக இந்த வெற்றியை அந்தக் கூட்டணி அடைந்திருக்கிறது...

ப. 1977லில் இருந்தே தமிழ்நாட்டின் வாக்களிக்கும் தன்மை என்பது தேசிய போக்கிற்கு எதிராக பல தருணங்களில் இருந்திருக்கிறது. 1977ல் நெருக்கடி நிலைக்குப் பிறகு நாடு முழுவதும் இந்திரா காந்தி தோற்றபோது, தமிழகத்தில் காங்கிரசிற்கு பெரும் வெற்றி கிடைத்தது. 1989ல் ஃபோபர்ஸ் விவகாரத்தில் ராஜீவுக்கு எதிரான அலை உருவாகி, காங்கிரசை பல மாநிலங்கள் புறக்கணித்தன. ஆனால், தமிழ்நாட்டில் தேசிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகளும் அதில் இருந்த தி.மு.கவும் வெற்றிபெறவில்லை.

2014ல் நாடே மோதிக்கு ஆதரவாக வாக்களித்தபோது மக்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களித்தார். 37 இடங்களை அக்கட்சி பிடித்தது. அதனால், இதில் ஏதும் புதிதாக இருப்பதாகத் தெரியவில்லை.

இதில் மேலும் படிக்கவும் :