வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 4 ஜூன் 2022 (09:48 IST)

“பாஜக என்னைக் கொல்ல சதி செய்தது” – விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகைத்

Farmers Leader - Rakesh Tikait
பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத், வெள்ளிக்கிழமையன்று, பாஜக அவரைக் கொல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


அந்தச் செய்தியின்படி, சமீபத்தில் கர்நாடகாவில் தன் மீது நடத்தப்பட்ட மை தாக்குதல், "நன்கு திட்டமிடப்பட்ட சதி" என்று திகைத் கூறியுள்ளார்.

மேலும், "திகைத் குடும்பத்தையும் சங்கத்தையும் உடைக்க அரசாங்கம் தன்னைக் கொல்ல விரும்புகிறது. ஆனால், அது ஒருபோதும் நடக்காது," என்று கூறினார்.

மீரட் மாவட்டத்தின் ஜாங்கேதி கிராமத்தில் உள்ள தர்மேஸ்வரி பண்ணையில் பாரதிய கிசான் யூனியனின் ஆய்வுக் கூட்டத்தில் திகைத் உரையாற்றினார்.

அவர், மகாத்மா காந்தியை "சதிகாரர்கள்" சுட்டுக் கொன்றதைப் போல், நாட்டுக்காகவும் நாட்டின் விவசாயிகளுக்காகவும் குரல் எழுப்புபவர்கள், "சதிகாரர்களின்" இலக்கில் இருக்கின்றனர் என்று கூறினார்.

"ஒரு திகைத்துக்கு ஏதும் பாதிப்பு வந்தால், நாட்டில் இன்குலாபி கொடியை உயர்த்த லட்சக்கணக்கான திகைத்துகள் தயாராக உள்ளனர்," என்று அவர் கூறினார்.

மே 30ஆம் தேதி ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்தவர் என்றும், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டவர் என்று பெங்களூரு மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.டி. சரணப்பா புதன்கிழமை தெரிவித்தார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

சிவகுமார் அத்ரி எனும் அந்த 52 வயது நபர் ஹசன் சிறையில் இருந்து 2015ஆம் ஆண்டு வெளியானார்.

ராகேஷ் திகைத் மீது மை வீசி தாக்குதல் நடத்திய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
நாடு தழுவிய விவசாய புரட்சிக்கு சஜித் அழைப்பு

நாடு தழுவிய ரீதியிலான விவசாயப் புரட்சியொன்றை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அறிவித்துள்ளதாக தினகரன் வாரமஞ்சரி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

அந்தச் செய்தியில், "நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படவுள்ள உணவுப் பஞ்சத்தில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பசளை தட்டுப்பாட்டுக்கு மாற்று வழிகளைக் கண்டறிவதில், உள்நாட்டு பயிர்ச் செய்கை முறைகளை பிரபலப்படுத்துதல், உள்நாட்டு உணவுப் பயிர்ச் செய்கைக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இதற்கான நிதியுதவிகள் மற்றும் ஏனைய உதவிகளை கட்சியின் முக்கியஸ்தர்களும் தன்னார்வ அடிப்படையில் வர்த்தகர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எதிர்பார்த்துள்ளது.

கட்சியின் பிரதேச அமைப்பாளர்களையும் கிராமிய ஆதரவாளர்களையும் இணைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

"காய்க்கின்ற மரத்திற்கே கல்லெறியப்படும்"

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதிஅமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்தச் செய்தியின்படி, மல்வானை சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 21 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த திருத்தம் உங்களுக்காகக் கொண்டுவரப்படுகின்றதா என முன்னாள் நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் காய்க்கின்ற மரத்திற்கே கல்லெறியப்படும் என அவர் பதிலளித்ததுடன், அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க இருப்பதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.