வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (09:36 IST)

பிக் - பாஸ் 6: ஞாயிற்றுக் கிழமையும் அஸீம் மீதே தாக்குதல்; அமுதவாணன் அப்செட்!

"சமநிலை தவறாமல் இருப்பதுதான் முக்கியம். வீட்டில் சிலர் அடுத்தவர்களின் சமநிலையைத் தவற வைப்பதே வேலையாக இருக்கிறார்கள்" என்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடை பஞ்சாயத்துடன் ஆரம்பித்தார் கமல்.
 
போட்டியாளர்களுடன் பேச ஆரம்பித்ததும், சின்ன டாஸ்க் ஒன்றை அறிவித்தார் கமல். அதாவது, தனக்குத் தகுதியான போட்டியாளருக்கு வாளையும் மிகச் சாதாரணமான ஒருவருக்கு அட்டைக் கத்தியையும் கொடுக்க வேண்டும் என்றார் கமல். இந்த டாஸ்க்கிலும் வழக்கம்போல பலரும் தத்தம் சொந்தக் கணக்கைத் தீர்த்துக்கொண்டார்கள்.
 
ஷிவினுக்கு அதிக கத்திகளும் அஸீமுக்கு அதிக அளவில் அட்டைக் கத்திகளும் கிடைத்தன. தனக்குக் கிடைத்த அட்டைக் கத்திகளை அஸீம் எண்ணிக்கொண்டிருந்ததைப்  பார்த்தபோது பரிதாபமாகத்தான் இருந்தது.
 
பக்கத்திலிருந்த முத்துவிடம், "பல பேருக்கு கேள்வியே புரியலை" என்று பேசி சமாளித்துக் கொண்டிருந்தார் அஸீம்.
 
பிறகு, கதிரவனுக்கு மாட்டப்பட்டிருந்த விலங்கின் சாவியை அஸீம் ஒளித்துவைத்துக் கொண்டிருந்த விவகாரத்தை கையில் எடுத்தார் கமல். அதிலும் அஸீம் வறுத்தெடுக்கப்பட்டார்.
 
ஏடிகேவின் ராப்பைப் பற்றி அஸீம் மோசமாக 'கமெண்ட்' அடித்ததால், ஏடிகேவுக்கு ராப் பாட வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் பின்னியெடுத்தார் ஏடிகே.
 
பிறகு, இடைவேளையில் தனியாக அமர்ந்து, "என்னையே போட்டுத் தாக்குறாங்களே.. ஒன்னுமே புரியலையே" என்று புலம்பிக் கொண்டிருந்தார் அஸீம்.
முத்து வந்து அருகில் அமர்ந்தவுடன்,  "எனக்கு ஒன்னுமே புரியலையே, என்னதான் செய்யிறது? நான் மனிதாபிமானமில்லாம ஒன்னுமே பண்ணலையே மாம்ஸ். என்னை பர்ஸனலா டார்கெட் பண்ற மாதிரி ஃபீல் ஆகுது" என்று அவரிடமும் சொல்லி புலம்பினார்.
 
இதற்குப் பிறகு வில் - அம்பை வைத்து அடுத்த விளையாட்டைத் துவங்கினார் கமல். வீட்டிற்குள் இருப்பவர்களில் யார் வில்லாகவும் யார் அம்பாகவும் இருக்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும்.
 
ராஜா - ராணி டாஸ்க்கில் நடந்த ஒரு விவகாரத்தை வைத்து, அமுதவாணன் வில் என்றும் ஜனனி அம்பென்றும் சொன்னார் விக்ரமன். இதில் கடும் ஆத்திரமடைந்தார் அமுதவாணன்.
 
ஒருவருடன் சேர்ந்து விவாதிப்பதாலேயே ஒருவர் வில்லாகவும் மற்றொருவர் அம்பாகவும் ஆகிவிடுவதில்லை; தான் சொல்லி ஜனனி எதையும் செய்யவில்லை என்று கேமரா முன்பாக கூறிய அவர், வீட்டை விட்டு வெளியேற விரும்புவதாக சொன்னார்.
 
பிறகு, தான் ஏன் அப்படிச் சொல்ல வேண்டியிருந்தது என்பதை விக்ரமன் விளக்கினாலும் அமுதவாணன் சமாதானமடைந்ததாகத் தெரியவில்லை. இப்படி அமுதவாணன் ஒரு பக்கமும் அஸீம் மற்றொரு பக்கமும் புலம்பித் தள்ளி, இந்த எபிசோடையே புலம்பல் எபிசோடாக மாற்றிவிட்டார்கள்.
 
இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்களில் இறுதியில் அஸீமும் நிவாஸினியும் எஞ்சியிருந்தார்கள். இதில் யார் வெளியேற்றப்படுவார்கள் என கமல் கேட்டபோது, பலரும் அஸீம் பெயரையே சொன்னார்கள்.
 
ஆனால், நிவாஸினி வெளியேற்றப்பட்டார். அஸீம் காப்பாற்றப்பட்டாலும், மனிதர் மிகவும் சோர்வடைந்திருந்தார்.
 
கடந்த வாரம், ராஜா - ராணி டாஸ்க்கில் விறுவிறுப்பாகக் கழிந்துவிட்டது. இந்த வாரம் பிக் - பாஸ் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும்.