புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (20:12 IST)

பிபிசி; இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது

2019 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது பரிந்துரைக்கபட்டவர்களின் பட்டியலை பிபிசி அறிவித்துள்ளது

காத்திருப்பு இத்துடன் முடிவுக்கு வருகிறது. பிபிசி-யின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்காகப் பரிந்துரைக்கப்படும் ஐந்து போட்டியாளர்களை விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள், வல்லுநர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ளது. இன்றுமுதல், பிபிசி தமிழ் உள்பட பிபிசியின் இந்திய மொழிச் சேவைகளின் இணையதளங்கள் மற்றும் பிபிசி ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் தங்களுக்கு விருப்பமான விளையாட்டு வீராங்கனைக்கு பொதுமக்கள் வாக்களிக்கலாம்.

பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள்:

தூத்தி சந்த்                                 பிரிவு : தடகளம்
மானசி ஜோஷி                         பிரிவு : பாரா-பேட்மிண்டன்
மேரி கோம்                                 பிரிவு : குத்துச்சண்டை
வினேஷ் போகத்                      பிரிவு: ஃப்ரீஸ்டைல் மல்யுத்தம்
பி.வி. சிந்து                                   பிரிவு: பேட்மிண்டன்
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில், இந்த விருது குறித்து பிபிசி செய்திகள் பிரிவின் இயக்குநர் ஃபிரான் அன்ஸ்வொர்த் பெருமிதம் வெளியிட்டுள்ளார். “அதிக அளவில் வெற்றிகளையும் சர்வதேச அங்கீகாரத்தையும் இந்தியாவின் பெண் விளையாட்டு வீரர்கள் பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பிபிசி வழங்கவுள்ள இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை 2019 விருது, இந்திய மகளிர் விளையாட்டுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக அமைய உள்ளதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது இறுதியாகப் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து விளையாட்டு வீராங்கனைகளில், தங்களை மிகவும் கவர்ந்த ஒரு வீராங்கனையை உலகம் முழுவதும் உள்ள அவர்களது ரசிகர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்”, என்றார்.


வரும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி, டெல்லியில் நடைபெறவுள்ள விழாவில், பிபிசியின் தலைமை இயக்குநர் லார்ட் டோனி ஹால், விருதுக்குரிய வெற்றியாளரை அறிவிப்பார். அதே விழாவில், இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற வீராங்கனை ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பிபிசி சிறப்பிக்க உள்ளது.

தாங்கள் இறுதிப் பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அந்த வீராங்கனைகள் தெரிவித்த கருத்துக்கள் இதோ:
 
தூத்தி சந்த்

தூத்தி சந்த்: “என்னைப் பற்றி பிபிசி தயாரித்த ஆவணப்படத்தின் காரணமாக என்னையும், நான் விளையாடும் விளையாட்டையும் மென்மேலும் அதிக மக்கள் அங்கீகரிப்பார்கள். இந்தியாவில் முதல் முறையாக பிபிசி வழங்க உள்ள விளையாட்டு விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.” 
                           
மானசி ஜோஷி

மானசி ஜோஷி: “நான் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு பிரிவில் அல்லாது இயல்பான உடல்திறன் பெற்ற வீராங்கனைகளின் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.”      
மேரி கோம்

   
மேரி கோம்: “நான் இந்த விருதை வெல்வேனோ இல்லையோ என்பது எனக்கு முக்கியமில்லை, அதற்காக, மனம் புண்படமாட்டேன். ஆனால், இந்த விருது தகுதியான வீரரை சென்றடையும் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.”                               
                    
வினேஷ் போகத்

வினேஷ் போகத்: “சமீபத்திய ஆண்டுகளில் இந்திய விளையாட்டு வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதில் என் பெயரும் பேசப்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கும் தருணம், அதாவது நான் நல்லதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன் என்பது இதன் பொருள்.’’  
                
பிவி சிந்து

பி.வி. சிந்து: “இது மிகுந்த கெளரவம். இறுதிப் போட்டியாளராக பரிந்துரைக்கப்படுவது, ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், மற்றவர்களுக்கும் உற்சாகத்தை அளிக்கும். ஏனெனில், இறுதிப்  போட்டியாளர் பட்டியலில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.”                               

வாக்களிப்பு குறித்த தகவல்கள்:  BBC Tamil, BBC Sports, BBC Hindi, BBC Punjabi, BBC Marathi,  BBC Telugu, BBC Gujarati ஆகிய இணையதளங்களில் பொதுமக்கள் இலவசமாக வாக்களிக்கலாம். மேலும், அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் ஊக்கமளிக்கும் கதைகளை மேற்கண்ட இணையதளங்களில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11:30 மணிக்கு அல்லது ஜிஎம்டி நேரப்படி மாலை 6 மணிக்கு உலகம் முழுவதும் இந்த வாக்களிப்பு நிறைவடையும்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை 2019-இன் ஒருபகுதியாக, விளையாட்டுத் துறையில் பெண்கள் ஈடுபடுவது, பாலினங்களின் பங்களிப்பு, சமூகத்தில் 'பெண்கள் இருக்க வேண்டிய இடம்' குறித்த எண்ணங்கள் ஆகியவை குறித்து இந்தியாவில் நிலவும் மனநிலைகள் மற்றும் கண்ணோட்டங்கள் ஆகியவை குறித்த ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் முதல் வாரம் வெளியிடப்படும்.

அதே போன்று, மற்றொரு திட்டத்தின் மூலம், 1951 முதல் 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான இந்திய பெண் விளையாட்டு வீரர்களின் செயல்பாடு குறித்த தரவுகளை மையமாகக்  கொண்டு பகுப்பாய்வு செய்யப்படவுள்ளது. 1951-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றது முதல், சர்வதேச விளையாட்டு தொடர்களின் அனைத்து பிரிவுகளிலும் நிகழ்ந்த முக்கியமான போக்குகளின் பரந்த பார்வையை இந்த ஆய்வுகள் வழங்கும்.

இந்தியாவின் அசாதாரணமான விளையாட்டு வீராங்கனைகளை கெளரவிக்கும் வகையிலும், அவர்களது திறமை மற்றும் ஊக்கமளிக்கும் கதைகளை உலகமெங்கும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும், கடந்த 2019-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 19-ஆம் நாளன்று, இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை எனும் முன்மாதியான விருது குறித்த அறிவிப்பை பிபிசி வெளியிட்டது.
மேலதிக தகவல்களுக்கு: [email protected]
பிபிசி உலக சேவை உலகெங்கிலும் உள்ள செய்தி உள்ளடக்கத்தை ஆங்கிலம் மற்றும் 41 மொழி சேவைகளின் வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக வழங்குகிறது. பிபிசி உலக சேவை ஒவ்வொரு வாரமும் 319 மில்லியன் நேயர்களை சென்றடைகிறது. பிபிசி உலக சேவையின் ஒரு பகுதியாக, பிபிசி லேர்னிங் இங்கிலீஷ் உலகளாவிய வாசகர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறது. பிபிசி வேர்ல்ட் சர்வீஸ், பிபிசி வேர்ல்ட் நியூஸ் டெலிவிஷன் மற்றும் bbc.com/news உள்ளிட்டவற்றின் வாயிலாக பிபிசி ஒவ்வொரு வாரமும் 394 மில்லியன் மக்களை ஈர்க்கிறது.

இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் குறித்த சிறுகுறிப்புகள்:

1. தூத்தி சந்த்

வயது 23, விளையாட்டு: தடகளம்

பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தற்போது இந்திய தேசிய சாம்பியனாக திகழ்கிறார் தூத்தி சந்த். 2016 கோடைகால  ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு தகுதி பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை இவர். 2018-ல் நடைபெற்ற ஜகார்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 1998-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா இதில் வென்ற முதல் பதக்கம் இது. பல சர்ச்சைகளை கடந்து வந்த இவர், இந்தியாவின் சிறந்த தடகள வீராங்கனைகளில் ஒருவராக விளங்குகிறார்.

2. மானசி ஜோஷி

வயது: 30, விளையாட்டு: பாரா-பேட்மிண்டன்

2019-ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற பாரா-பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றவர் மானசி ஜோஷி. உலகின் தலைசிறந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனைகள் பட்டியலில் இவர் முன்னணியில் உள்ளார். ஜகார்தாவில் 2018-ல் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை தன்வசமாக்கிக் கொண்டார்.
2011ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது இடது காலை இழந்தார் மானசி ஜோஷி. ஆனால், உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ வேண்டும் என்ற அவரது வேட்கையை அது தடுக்கவில்லை.

3. மேரி கோம்

வயது: 36, விளையாட்டு: குத்துச்சண்டை (ப்ளைவெயிட் பிரிவு)

பிரபலமாக மேரி கோம் என்று அழைக்கப்படும் மாங்க்டே சங்கினிசாங், இதுவரை எட்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற ஒரே குத்துச்சண்டை வீரராவார் (ஆண்கள் அல்லது பெண்கள்). உலக தொழில்சாரா குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 6 முறைகள் வென்றுள்ளார் மேரி கோம். ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்கிறார் மேரி கோம்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார் மேரி கோம். அவரது  பெயருக்கு முன்னால் ‘OLY’ என்ற அடைமொழியை வழங்கி உலக ஒலிம்பியன்ஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

 4. வினேஷ் போகத்
 வயது: 25, விளையாட்டு: மல்யுத்தம் (ஃப்ரீஸ்டைல் பிரிவு)
 சிறந்த சர்வதேச பெண் மல்யுத்த வீராங்கனைகள் குடும்பத்திலிருந்து வரும் வினேஷ் போகத், 2018-ஆம் ஆண்டு ஜகார்தா ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை. காமன்வெல்த் போட்டிகளிலும் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். 2019-ல், வெண்கலப் பதக்கம் பெற்று, முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்  போட்டியில் பதக்கம் வென்றார்.
5. பி வி சிந்து

வயது 24, விளையாட்டு: பேட்மிண்டன்

கடந்த ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீராங்கனையானார் பி.வி சிந்து. உலக சாம்பின்யன்ஷிப் போட்டிகளில் மொத்தம் 5 பதக்கங்களை அவர் வென்றுள்ளார். மேலும், ஒலிம்பிக் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் பிவி சிந்து. உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் முதல் 20 வீரர்களின் பட்டியலில் சிந்து செப்டம்பர் 2012-ஆம் ஆண்டே இடம்பெற்றார். அப்போது அவருக்கு 17 வயதுதான். கடந்த நான்கு ஆண்டுகளாக முதல் 10 இடங்களில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.