1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : திங்கள், 3 பிப்ரவரி 2020 (15:10 IST)

முகத்தை மூடிக் கொள்வதால் வைரஸ் பரவுவதைத் தடுத்துவிட முடியுமா?

வைரஸ் பரவும் போதெல்லாம் மக்கள் முகத்துக்கு சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து மூடிக் கொள்ளும் படங்களைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அவற்றைப் பயன்படுத்துவது உலகம் முழுக்க பல நாடுகளில் இது வழக்கமாகிவிட்டது.
 
சீனாவில் அதிகமான மாசுபாட்டில் இருந்து காத்துக் கொள்வதற்காக பலர் இதை அணிந்து வந்த சூழ்நிலையில், இப்போது கரோனா வைரஸ் பரவும் ஆபத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக அதிகமானோர் இதைப் பயன்படுத்துகின்றனர்.
 
காற்றில் வரும் வைரஸ் பரவுவதைத் தடுக்க இது எந்த அளவுக்கு திறன்மிக்கதாக இருக்கும் என்று வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
 
கைகளில் இருந்து வாய் மூலமாக தொற்று பரவாமல் தடுப்பதில் இந்த முகத்திரைகள் ஓரளவுக்கு திறன்மிக்கவையாக உள்ளன என்பதற்கு சில ஆதாரங்கள் இருக்கின்றன.
 
சர்ஜிக்கல் மாஸ்க் எனப்படும் இந்த முகத்திரைகள் அணிவது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மருத்துவமனைகளில் பழக்கத்துக்கு வந்தன. ஆனால் 1919ல் 50 மில்லியன் பேருக்கும் மேல் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஸ்பானிஷ் ஃப்ளூ பரவிய காலம் வரையில் இது பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
 
``காற்றில் கலந்துள்ள வைரஸ் அல்லது பாக்டீரியாவைத் தடுப்பதில் வழக்கமான சர்ஜிகல் மாஸ்க் -குகள் திறன்மிக்க பாதுகாப்பு தருவது கிடையாது'' என்று லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் கேர்ரிங்டன் பிபிசியிடம் கூறினார். அதனால் தான் ``பெரும்பாலான வைரஸ்கள்'' தொற்றிக் கொள்கின்றன, ஏனெனில் அந்த முகத்திரைகளில் இழைகள் இடைவெளி உள்ளதாக உள்ளன, காற்றை வடிகட்டும் வசதி இதில் இல்லை, கண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.
 
ஒருவர் தும்மும் போதோ அல்லது இருமும்போதோ ``திடீரென வெளியாகும்'' கிருமிகள் நம்மைத் தாக்காமல் காப்பாற்ற அவை உதவியாக இருக்கும். கைகளில் இருந்து வாய் வழியாக கிருமிகள் தொற்றுவதும் ஓரளவுக்கு தவிர்க்கப்படும். மனிதர்கள் ஒரு மணி நேரத்தில் 23 முறை தங்கள் முகத்தைத் தொடுவதாக 2016ல் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
Corona Virus
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மூலக்கூறு வைரஸ் ஆராய்ச்சித் துறை பேராசிரியர் ஜோனாதன் பால், ``மருத்துவமனை போன்ற நன்கு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் நடத்திய ஆய்வில், ப்ளூ காய்ச்சல் தொற்றை தடுப்பதில் முகத்துக்கான மாஸ்க் -குகள் நல்ல பலன் தருவதாக கண்டறியப்பட்டது'' என்று கூறியுள்ளார். சுவாசத்துக்கான வலைமூடிக் கருவியைப் போன்ற பயனை இது தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சுவாசத்துக்கான வலைமூடிக் கருவிகள், விசேஷமான காற்று வடிப்பான் அம்சங்கள் கொண்டதாக, காற்றில் மிதந்து வரும் நச்சுத் துகள்களை வடிகட்டி தடுக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
 
``இருந்தபோதிலும், பொது இடங்களில் மக்கள் பயன்படுத்தும்போது அது எந்த அளவுக்கு திறன்மிக்கதாக இருக்கும் என்று பார்த்தால், தகவல்கள் ஊக்கம் தருவதாக இல்லை - அதிக நேரத்துக்கு அவற்றை அணிந்து கொண்டிருப்பது என்பது இயலாத விஷயமாக உள்ளது'' என்று பேராசிரியர் பால் கூறியுள்ளார்.
 
பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில், வெல்கம் - வுல்ப்சன் பரிசோதனை மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் கன்னோர் பாம்ஃபோர்டு, ``சாதாரணமான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது'' பெரும்பாலும் மிக திறன்மிக்கதாக இருக்கும் என்று கூறுகிறார்.
 
corona virus
``தும்மும்போது வாயை மூடிக் கொள்வது, கைகளைக் கழுவுதல், கழுவாமல் கைகளை வாயில் வைப்பதை தவிர்த்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் சுவாசம் மூலம் வைரஸ்கள் பரவும் ஆபத்தைக் குறைக்க முடியும்'' என்று அவர் கூறுகிறார்.
 
ஃப்ளூ போன்ற வைரஸ்கள் பரவாமல் தடுக்க பின்வரும் வழிமுறைகள் சிறந்தவையாக இருக்கும் என என்.எச்.எஸ். கூறுகிறது:
 
•கைகளை இளம் சூடான நீரில் சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும்
 
•முடிந்த வரை கண்கள் மற்றும் மூக்கை கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்
 
•ஆரோக்கியமான, உடல் தகுதியான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்
 
இங்கிலாந்து பொது சுகாதாரத் துறையில் தொற்றுநோய்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் பற்றிய ஆராய்ச்சித் துறையின் தலைவராக உள்ள டாக்டர் ஜேக் டன்னிங், ``முகத்துக்கு மாஸ்க் போட்டுக் கொள்வது பயன்தரும் என்ற எண்ணம் இருந்தாலும், மருத்துவமனை சூழலுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் இதைப் பயன்படுத்துவதால் எந்த அளவுக்குப் பயன் கிடைக்கும் என்பதற்கு மிகக் குறைந்த ஆதாரங்களே உள்ளன'' என்று கூறுகிறார்.
 
இவை நல்ல பலனைத் தர வேண்டுமானால், இவற்றை சரியாக அணிய வேண்டும், அடிக்கடி மாற்ற வேண்டும், பாதுகாப்பாக அதை அப்புறப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.
 
``குறிப்பிட்ட காலத்துக்கும் அதிகமாக மாஸ்க் அணிவதால், தொற்று நோய் பரவும் ஆபத்தைக் குறைக்க வேண்டுமானால், பரிந்துரைக்கப்பட்ட பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன'' என்கிறார் அவர்.
 
மக்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனிப்பட்ட முறையில் நல்ல பழக்கங்கள் மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கங்கத்தைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் டன்னிங் கூறியுள்ளார்.