1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 28 ஏப்ரல் 2018 (16:39 IST)

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம் (Avengers: Infinity War)

2012ல் வெளிவந்த அவெஞ்சர்ஸ், 2015ல் வெளிவந்த அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான், 2016ல் வெளியான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் படம். Avengers: Infinity War இரண்டு பாகங்களைக் கொண்டது. தற்போது வெளியாகியிருப்பது முதல் பாகம்.



ஆஸ்கார்ட் பிரதேசத்தை அழித்து, ஸாண்டர் கிரகத்திலிருந்து பவர் ஸ்டோனை கைப்பற்றிய பிறகு, தானோஸ் இந்தப் பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு ஆட்களிடமிருக்கும் ஆறு சக்திவாய்ந்த கற்களைக் கைப்பற்ற முயல்கிறான். பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தி, பாதி மக்களைக் கொல்வதன் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதுதான் தானோஸின் திட்டம்இந்தத் திட்டம் டாக்டர் ஸ்ட்ரேஞ்சிற்குத் தெரியவருகிறது. அவர், அயர்ன் மேனான டோனி ஸ்டார்க்கிற்கு செய்தி அனுப்புகிறார். அதே நேரத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ் வசம் இருக்கும் கல்லைக் கைப்பற்ற வரும் தானோஸின் ஆட்கள், டாக்டர் ஸ்ட்ரேஞ், ஸ்பைடர் மேனான பீட்டர் பார்க்கர், அயர்ன் மேன் ஆகியோரை தூக்கிச்சென்றுவிடுகிறார்கள்.

பிறகு, பிற அவெஞ்சர்களுக்கு செய்தி போகிறது. பிறென்ன படம் முழுக்க மாயாஜாலமும் சாகஸங்களும்தான். ஆனால், இந்த அவெஞ்சர்கள் பல்வேறு கிரகங்களில் பிரிந்து சண்டையிடுவதால் அவர்களால் தானோஸை தோற்கடிக்க முடிவதில்லை. இந்த பாகத்தின் முடிவில் எல்லாக் கற்களையும் கைப்பற்றும் தானோஸ், சில அவெஞ்சர்களுக்கு மரண அடி கொடுத்துவிடுகிறான்.

இந்தப் படத்தின் கதை மிகச் சிக்கலானதுதான். ஆனால், கதையே புரியாமல் படத்தை ரசிக்க முடியும். ஒவ்வொரு சூப்பர் ஹீரோவும் தன் சக்தியை வெவ்வேறு விதமாக பயன்படுத்துவது, சிலர் தோல்வியடைவது என முழுப் படமும் சீட் நுனியில் உட்கார வைக்கிறார்கள் (ஆனால், அப்படியே இரண்டு மணி நேரம் அப்படி அமர்ந்திருப்பதும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது).ஏகப்பட்ட சூப்பர் ஹீரோக்கள் இருந்தும், யாராலும் முழுமையான சாகஸத்தில் ஈடுபட முடியாதது அந்தந்த ஹீரோக்களின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். குறிப்பாக, ஹல்க் பல முறை ஹல்க்காக முயன்றும் அவரால் அந்த ராட்சத உருவத்தை எடுக்க முடிவதில்லை. அதேபோல, ஸ்பைடர் மேனை பல முறை துவைத்துஎடுத்துவிடுகிறான் தானோஸ். இந்த ஹீரோக்கள் இனி தனியாக சாகஸம் புரியும்போது இந்த அடி ஞாபகத்திற்கு வரக்கூடும்.


படம் நெடுக வசனங்களில் நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். அதுவும் இரண்டு சூப்பர் ஹீரோக்கள் சந்திக்கும்போது, புன்னகையாவது நிச்சயம்.

எச்சரிக்கையாக ஒரு வார்த்தை: இது வயதானவர்களுக்கான படமில்லை. இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்குமான படம். அவர்கள் மனதளவில் அப்படியிருந்தால்கூட போதும்.