ஆஃப்கானிஸ்தானில் பெண்ணுரிமையின் முன்னோடிகள் அவர்கள். நீதியின் காவலர்களாக, மிகவும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் நியாயம் தேடித்தந்தவர்கள். ஆனால் இப்போது ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200 பெண் நீதிபதிகள் தாலிபன் ஆட்சியின்கீழ் தண்டனைக்கு பயந்து தலைமறைவாகியிருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தானில் ஆறு இரகசிய இடங்களிலிருந்து பெண் நீதிபதிகள் பிபிசியிடம் பேசினார்கள். பாதுகாப்புக் கருதி அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
பாலியல் வன்புணர்வு, கொலை, சித்ரவதை போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்காக் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு எதிராகக் குற்றத்தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி மசூமா. ஆனால் அவர் வாழும் நகரம் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவருக்குக் கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவரது அலைபேசிக்குக் குறுஞ்செய்திகளும் குரல் செய்திகளும் தெரியாத எண்களிலிருந்து அழைப்புகளும் வந்தபடியே இருந்தன.
"தாலிபன்கள் சிறையில் இருந்த எல்லாரையும் விடுவித்துவிட்டார்கள் என்று ஒரு நள்ளிரவில் கேள்விப்பட்டோம். உடனே வீட்டை விட்டு வெளியேறினோம்" என்கிறார் மசூமா.
கடந்த 20 ஆண்டுகளில், ஆஃப்கானிஸ்தானில் 270 பெண் நீதிபதிகள் பதவி வகித்துள்ளனர். நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த முக்கியப் பெண்மணிகள் என்ற வகையில் அவர்கள் பொதுவாழ்வில் உள்ள நபர்களாகவே கருந்தப்படுகின்றனர்.
"நான் நகரத்துக்கு வெளியில் போக காரில் பயணித்தபோது புர்கா அனிந்துகொண்டேன், அப்போதுதான் யாரும் என்னை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருப்பார்கள். எல்லா தாலிபன் சோதனைச் சாவடிகளையும் அதிர்ஷ்டவசமாகக் கடந்துவிட்டோம்" என்கிறார்.
அவர் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அவரது வீட்டுக்குத் தாலிபன்கள் வந்ததாக அண்டை வீட்டாரிடமிருந்து மசூமாவுக்கு செய்தி வந்தது. அவர்களைப் பற்றி விவரித்ததை வைத்தே, அவர்கள் யார் என்பதை மசூமா அறிந்துகொண்டார்.
தாலிபன்கள் ஆட்சியைப் பிடிப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்பு, தாலிபனைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியைக் கொடூரமாகக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கை மசூமா விசாரித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மசூமா தீர்ப்பளித்தார்.
"அந்த இளம் பெண்ணின் உடல் அடிக்கடி என் மனதுக்குள் வந்து போகும். அது ஒரு கொடூரமான குற்றம். வழக்கு முடிந்தபிறகு என் அருகில் வந்த அந்தக் குற்றவாளி, "நான் வெளியில் வந்தபிறகு, என் மனைவிக்கு என்ன செய்தேனோ அதையே உனக்கும் செய்வேன்," என்றார். அப்போது நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியபிறகு அவரிடமிருந்து பலமுறை அழைப்பு வந்துவிட்டது, நீதிமன்றத்திலிருந்து என்னைப் பற்றிய எல்லா தகவல்களையும் சேகரித்துவிட்டதாகக் கூறுகிறார். "உன்னைத் தேடிப்பிடித்துப் பழி தீர்ப்பேன்" என்று மிரட்டுகிறார்" என்கிறார் மசூமா.
ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 220 பெண் நீதிபதிகள் தலைமறைவாக இருப்பதாக பிபிசி புலனாய்வில் தெரிய வந்துள்ளது. வெவ்வேறு மாகாணங்களைச் சேர்ந்த ஆறு முன்னாள் பெண் நீதிபதிகளிடம் பேசியபோது, கடந்த ஐந்து வாரங்களாக நடக்கும் நிகழ்வுகள் பற்றி அவர்கள் ஒரே மாதிரியாகத்தான் சொல்கிறார்கள்.
தாலிபனைச் சேர்ந்தவர்களை இவர்கள் தீர்ப்பு வழங்கி சிறைக்கு அனுப்பியதால் இப்போது அவர்களுக்குக் கொலை மிரட்டல் வந்திருக்கிறது. அதில் நான்கு நீதிபதிகள் மனைவியைக் கொன்றதற்காக தாலிபன் உறுப்பினர்களை சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
கொலை மிரட்டல் வந்த பிறகு ஆறு பேரும் ஒரு முறையாவது அலைபேசி எண்ணை மாற்றியிருக்கிறார்கள். எல்லாரும் தலைமறைவாக இருக்கிறார்கள், சில நாட்களுக்கு ஒரு முறை இடம் மாறுகிறார்கள். ஆறு பேரின் வீட்டிற்கும் தாலிபன் உறுப்பினர்கள் வந்து சென்றிருக்கிறார்கள், அண்டை வீட்டாரிடமும் நண்பர்களைப் பற்றியும் விசாரித்திருக்கிறார்கள்.
பிபிசியிடம் பேசிய தாலிபன் செய்தித் தொடர்பாளர் பிலால் கரீமீ இதுபோன்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதில் தருகிறார்."எல்லாரையும் போலவே பெண் நீதிபதிகளும் பயமின்றி வாழவேண்டும். யாரும் அவர்களை மிரட்டக் கூடாது. எங்களது சிறப்பு ராணுவக் குழுக்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை விசாரித்து வருகின்றன. விதி மீறல் ஏற்பட்டது தெரிந்தால் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
ஆஃப்கானிஸ்தானில் உள்ள முன்னாள் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்ற உறுதிமொழி குறித்தும் அவர் பேசினார். "எங்களது பொது மன்னிப்பு ஆத்மார்த்தமானது. ஆனால் வழக்குத் தொடரவேண்டும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று யாராவது விரும்பினால், அவர்கள் அதைச் செய்யவேண்டாம் என்றும் தங்கள் நாட்டிலேயே இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டபோது தாலிபானுக்குத் தொடர்பில்லாத குற்றவாளிகளும் வெளியேற்றப்பட்டனர். பெண் நீதிபதிகளுக்கான பாதுகாப்பு குறித்துப் பேசிய கரீமி, "போதைப்பொருள் கடத்துபவர்கள், மாஃபியா உறுப்பினர்களை அழிக்க விரும்புகிறோம். அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்கிறார்.
நன்கு படித்திருந்த இந்தப் பெண் நீதிபதிகள், தங்கள் குடும்பத்தினருக்காக உழைப்பவர்களாகவும் இருந்தனர். ஆனால், இப்போது அவர்களது ஊதியம் நிறுத்தப்பட்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், உறவினர்களை நம்பியிருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகளை நீதிபதி சனா விசாரித்துவந்தார். தனது பெரும்பாலான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாலிபன் அல்லது ஐசிஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்கிறார்.
"முன்னாள் சிறைவாசிகளிடமிருந்து இதுவரை 20 கொலை மிரட்டல்கள் வந்துவிட்டன" என்கிறார். பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட தனது குடும்ப உறுப்பினர்களோடு இவர் தலைமறைவாக வசித்து வருகிறார். ஒரே ஒருமுறை இவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆண் உறுப்பினர் இவர்களது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். துணிகளை அவர் எடுத்து வைத்துக்கொண்டிருந்தபோது, ஆயுதம் ஏந்த தாலிபன்கள் ஒரு கமாண்டருடன் வந்து இறங்கினர்.
"கதவைத் திறந்தேன். இதுதான் நீதிபதியின் வீடா என்று கேட்டனர். அவள் எங்கே என்று தெரியவில்லை என்று நான் சொன்னதும் என்னை மாடிப்படியில் தூக்கி வீசினர். துப்பாக்கியின் மறுமுனையால் என்னை ஒருவர் அடித்தார். என்னை எல்லாரும் சேர்ந்து அடித்ததில் மூக்கு வாய் எல்லாம் ரத்தமாகிவிட்டது" என்று அந்த நிகழ்வை அவர் விவரிக்கிறார்.
தாலிபன்கள் கிளம்பிய பிறகு அவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். "இன்னொரு உறவினரிடம் நீதிபதியான என் சகோதரி இருக்கும் இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்று கூறினேன். எங்களுக்கு வேறு வழியே இல்லை. வேறு நாட்டுக்கும் தப்பிச் செல்ல முடியாது, பாகிஸ்தானுக்குக் கூட" என்கிறார்
பெண்ணுரிமைக்காகப் போராடுதல்
பல தசாப்தங்களாக, வாழ்வதற்கு மிகக் கடினமான நாடுகளில் ஒன்றாக ஆஃப்கானிஸ்தான் இருந்து வருகிறது. ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமைகள் அமைப்பு, இங்குள்ள 87% பெண்களும் சிறுமிகளும் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஆனால் இந்தப் பெண் நீதிபதிகள், பெண்களுக்கு ஆதரவு தருவதற்காக இயற்றப்பட்ட ஆஃப்கானிஸ்தானின் முன்னாள் சட்டங்களை நிலைநாட்டியுள்ளனர். பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை ஒரு தண்டனைக்குரிய குற்றம் என்ற புரிதலையும் பரவலாகக் கொண்டு சேர்ந்த்துள்ளனர்.
வன்புணர்வு, சித்ரவதை, கட்டாயத் திருமணம் போன்றவற்றில் குற்றத் தீர்ப்பு வழங்குவது, வேலை செய்வது/பள்ளிக்குச் செல்வது/சொத்து உரிமை போன்ற விஷயங்கள் பெண்களுக்கு மறுக்கப்படும்போது நீதி வழங்குவது என்று பலதரப்பட்ட அம்சங்களில் பங்களித்துள்ளனர். நாட்டின் முக்கியப் பெண் பிரபலங்கள் என்ற முறையில், தாலிபன்கள் முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்னரே தாங்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறோம் என்று ஆறு பேருமே தெரிவிக்கிறார்கள்.
"நான் என் நாட்டுக்கு சேவை செய்ய விரும்பினேன், அதனால்தான் நீதிபதியானேன்" என்கிறார் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்கும் அஸ்மா.
"குடும்ப நல நீதிமன்றத்தில், தாலிபன் உறுப்பினர்களிடமிருந்து மனவிலக்கு கேட்கும் பெண்களின் வழக்குகளை அதிகமாக விசாரித்திருக்கிறேன். அது பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. ஒருமுறை தாலிபன்கள் நீதிமன்றத்தின்மீது ஒரு ஏவுகணையைக் கூட ஏவி விட்டார்கள். நெருங்கிய நண்பரும் நீதிபதியுமான ஒரு பெண், வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது காணாமல் போனார். பிறகு அவரது உடல்தான் கிடைத்தது" என்கிறார்.
அவரைக் கொலை செய்ததற்காக யார் மீதும் குற்றம்சாட்டப்படவில்லை, அப்போது இருந்த தாலிபன் தலைவர்கள் தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று மறுத்துவிட்டார்கள்.
இப்போதைய ஆஃப்கானிஸ்தானின் புதிய தலைமை பெண்ணுரிமை தொடர்பான விஷயங்களை எப்படிக் கையாளும் என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் இதுவரை நடந்த சம்பவங்கள் கவலைக்குரியவையாக இருக்கின்றன.
தற்காலிக அரசின் அமைச்சரவையில் அறிவிக்கப்படுள்ள எல்லா உறுப்பினர்களும் ஆண்களே. பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனிக்க யாரும் நியமிக்கப்படவில்லை. கல்வி அமைச்சகம், மாணவர்களையும் ஆண் ஆசிரியர்களையும் திரும்பப் பள்ளிக்குச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது. மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பற்றி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
எதிர்காலத்தில் பெண் நீதிபதிகளுக்கு இடம் இருக்குமா என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்கிறார் தாலிபானைச் சேர்ந்த கரீமி. "பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வேலைச்சூழல் பற்றி இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்" என்கிறார்/
இதுவை ஒரு லட்சம் பேர் நாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள், ஆறு நீதிபதிகளும் வெளியேற வழி தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் போதுமான பணம் இல்லை என்பதும் எல்லா உறவினர்களிடமும் பாஸ்போர்ட் கிடையாது என்பதும் தடையாக இருக்கிறது.
இப்போது பிரிட்டனில் வசித்துவரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதி மார்சியா பாபாகார்கில், எல்லா பெண் நீதிபதிகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்படவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தலைநகரமான காபூலில் இருந்து வெகு தொலைவில் கிராமங்களில் வசிப்பவர்களையும் நாம் மறந்துவிடக்கூடாது என்கிறார்.
"கிராமங்களில் இருக்கிற சில நீதிபதிகள் என்னை அழைப்பார்கள் - மார்சியா, நாங்கள் என்ன செய்வது, எங்கு போவது? வெகு விரைவில் இறந்துவிடுவோம் என்பார்கள். எனக்கு மிகவும் வேதனையாக இருக்கும். இவர்களில் பெரும்பாலானோருக்கு பாஸ்போர்ட் கிடையாது. நாட்டை விட்டு வெளியேற சரியான ஆவணங்களும் கிடையாது, ஆனால் அவர்களும் ஆபத்தில் இருக்கிறார்கள், அவர்களை மறக்கவோ கைவிடவோ முடியாது" என்கிறார் மார்சியா.
நியூசிலாந்து, யுனைட்டட் கிங்க்டம் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தருவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால் இந்த உதவி எப்போது வரும், எத்தனை நீதிபதிகளுக்கு உதவும் என்பதெல்லாம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த உதவி தேவையான நேரத்தில் வராது என்று நீதிபதி மசூமா அஞ்சுகிறார்.
"நாங்கள் செய்த குற்றம்தான் என்ன? படித்திருக்கிறோம் என்பதா? குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்து பெண்களுக்கு உதவினோம் என்பதா? எது என் குற்றம் என்று அடிக்கடி யோசிப்பேன். என் தாய்நாட்டை நேசிக்கிறேன். ஆனால் இப்போது நான் சிறையில் இருப்பதாக உணர்கிறேன். எங்களிடம் பணம் இல்லை, வீட்டை விட்டு வெளியேற முடிவதில்லை. மற்ற குழந்தைகளிடம் ஏன் பேசக்கூடாது, ஏன் வெளியில் விளையாடக் கூடாது என்று கேட்கும் என் மகனிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏற்கனவே அவன் மன உளைச்சலில் இருக்கிறான். சுதந்திரமாக இருக்கும் நாள் வருவதற்காகப் பிரார்த்திக்கிறேன். என்னால் முடிந்தது அவ்வளவுதான்" என்கிறார்.
கூடுதல் தகவல்களை வழங்கியது அகமது காலித்.