1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 மே 2020 (14:40 IST)

ஆரோக்கிய சேது ஆப் ஆபத்தானதா? இந்திய அரசு விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிவதற்காக இந்திய அரசு வெளியிட்டுள்ள ஆப் ஆரோக்கிய சேது. 
 
ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிவதற்காக இந்திய அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கிய சேது எனும் செல்பேசி செயலியில், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக எத்திகல் ஹேக்கர் எலியட் ஆல்டர்சன் சுட்டிக்காட்டியதற்கு, செயலியை நிர்வகிக்கும் குழு இன்று விளக்கம் தெரிவித்துள்ளது.
 
ஆரோக்கிய சேதுவை நிர்வகிப்பவர்கள் அந்த ஹேக்கரைத் தொடர்புகொண்டு அவர் கூறிய குறைபாடுகளை கேட்டறிந்ததாகவும் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பயனாளிகளின் இருப்பிடம் குறித்த தகவல்களை அந்த செயலி சில நேரங்களில் சேகரிப்பதாக அவர் தெரிவித்ததார் என ஆரோக்கிய சேது தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
பயனாளர் ஒருவர் ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்யும் பொழுதும், தன் மதிப்பீட்டு பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும்போதும், தன்னுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து தாமாக முன்வந்து தரவுகள் கொடுக்கும் பொழுது அல்லது கோவிட் -19 இருப்பதாக உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் அந்த பயனாளி தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்படும் போதும் அவருடைய இருப்பிடம் குறித்த தரவுகள் தரவுகளை சேகரிக்கும் வகையிலேயே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
அவ்வாறு சேகரிக்கப்படும் இருப்பிடம் குறித்த தரவுகள் பாதுகாப்பாக மறையாக்கம் செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அது எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அந்த விளக்கத்தில் எதுவும் கூறப்படவில்லை.
 
செயலியின் நிரல்மொழி குறியீட்டில் பயனாளி இருக்கும் இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகை குறித்த விவரங்களையும், பாதிப்புக்கு உட்பட்ட பகுதியில் ஆரம் குறித்த விவரங்களையும் மாற்றுவதன் மூலம் கோவிட்-19 குறித்த புள்ளிவிவரங்களை செல்பேசியின் ஹோம் ஸ்கிரீனில் பயனாளி பெறமுடியும் என்று அந்த எதிகல் ஹேக்கர் தெரிவித்ததாகவும் அது தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு உள்ளதாகவும் ஆரோக்கிய சேது குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பயனாளி இருக்கும் இடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை குறித்த தகவல்கள் ஏற்கனவே பொதுவெளியில் இருப்பதால் அது செயலியைப் பயன்படுத்துபவரின் தனிப்பட்ட விவரங்கள் எதிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்று ஆரோக்கிய சேது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தங்களது அமைப்புகளை தொடர்ந்து பரிசோதனைக்கு உட்படுத்துவதாகவும் மேம்படுத்துவதாகவும் ஆரோக்கிய சேது செயலி எந்த ஒரு பயனாளியின் தனிப்பட்ட தகவலும் அபாயத்தில் இருக்கிறது என்பதை அந்த எதிகல் ஹேக்கர் நிரூபிக்கவில்லை என்று ஆரோக்கிய சேதுவை நிர்வகிக்கும் குழு தெரிவித்துள்ளது.
 
ஆரோக்கிய சேது செயலில் இருக்கும் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் தெரிந்தால் அதை உடனடியாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
தங்களைத் தொடர்புகொண்டு, ஆரோக்கிய சேதுவில் உள்ள குறைகளை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.