வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 14 மே 2020 (09:37 IST)

ஜப்பானை செல்வச் சுரங்கமாக மாற்றிய 'இக்கிகை' தத்துவம் குறித்து தெரியுமா?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை இரவு நேரத்தில் சுற்றிப்பார்த்தால் இவற்றை எல்லாம் சுலபமாகக் காணலாம்- பெரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சாலையோர இருக்கைகளில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.

அதிக நேரம் வேலை செய்துவிட்டு, நண்பர்களுடன் மது அருந்தச் செல்வார்கள். பலர் வீட்டுக்கு செல்ல வேண்டிய ரயிலைத் தவறவிட்டு, சாலைகளின் இரவை கழிப்பார்கள். இந்த காட்சிகள் வேலை மீது ஜப்பானியர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன.

ஜப்பானியர்களின் வேலை மீதான ஆர்வத்துக்கும், வேலை - குடும்ப வாழ்க்கை சமமின்மைக்கு அந்நாட்டின் பொருளாதாரம் ஒரு காரணமாக இருந்தாலும், ஜப்பானியர்களின் 'இக்கிகை' எனும் தத்துவம் முக்கிய காரணியாக உள்ளது.

இக்கிகை என்ற பழங்கால தத்துவத்தின் விளக்கம் என்னவென்றால் ''மனிதர்கள் வாழ்வதற்கான காரணம்'' என எளிமையாக விளக்குகிறார் முன்னாள் பெருநிறுவன அதிகாரி ஷிண்டோகு. நீங்கள் சிறப்பாக வேலை செய்தால் அது இக்கிகை, நீங்கள் குடும்பத்தினரிடம் உரிய முறையில் நேரம் செலவழித்தால் அதுவும் இக்கிகை.

இருபதாம் நூற்றாண்டில் ஜப்பான் அபார வளர்ச்சி அடைந்தது. அங்கு பலர் 14 மணி நேரம் வேலை செய்தார்கள். அவர்களில் பலர் வாழ்வதற்கான காரணம் வேலை மட்டுமே என நிர்ணயித்துக்கொண்டார்கள்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ''பொருளாதார அதிசயம்" என்று அழைக்கப்படும் புதிய வளர்ச்சிக் காலத்திற்குள் ஜப்பான் நுழைந்தது. இதன் மூலம் மக்களின் செல்வமும், ஆயுட்காலமும் அதிகரித்தது.

ஜப்பானின் பொருளாதார வெற்றி சாத்தியமான பிறகு, ஊழியர்களின் பணி நேரம் அதிகரித்தது. மக்களிடையே 'இக்கிகை' குறித்த அழுத்தம் அதிகரித்தது என சைனீஸ் யுனிவர்சிட்டி ஆப் ஹாங்காங்கின் மானுடவியல் பேராசிரியர் கார்டன் மேத்திவ் கூறுகிறார்.

''நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினால் நீங்கள் அந்த நிறுவனத்திற்காக வாழ வேண்டும் என உங்களுக்கு ஓர் அழுத்தம் ஏற்படும். அப்படி இல்லை என்றால் உங்களிடம் ஏதேனும் தவறு உள்ளது என கருதப்படும்'' என்கிறார் மேத்திவ்.

கால மாற்றத்தில் 'இக்கிகை' எனும் தத்துவம் சுரண்டலாக மாறியது. ஜப்பனின் பொருளாதார வளர்ச்சியும் இக்கிகையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக மாறியது. அலுவலகத்தில் நீண்ட நேரம் பணியாற்றுவதும், ஓய்வு நேரத்தில் கூட அலுவலக வேலை செய்வதும் சிறந்த ஊழியருக்காக எடுத்துக்காட்டாகப் பார்க்கப்பட்டது.

ஜப்பானில் அர்ப்பணிப்புடன் வேலை செய்வது என்பது அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் நின்றுவிடவில்லை. சமையல் கலைஞர்கள் முதல் தூய்மை பணிவரை தேர்வு செய்த துறையில் விடாமுயற்சியுடன் வேலை செய்வது மிகவும் மதிப்பு மிக்கதாக ஜப்பானில் பார்க்கப்பட்டது. ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியின் வரலாறு, மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட மன மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டது.

''முன்பு இருந்தது போல இல்லை. இப்போது ஜப்பான் வித்தியாசமான உலகத்தில் உள்ளது. வேலை மீதான விருப்பம் மட்டுமல்லாமல், தங்களுக்கான 'இக்கிகை' எது என்பதை தேர்வு செய்யும் சுதந்திரம் ஜப்பானியர்களிடையே உள்ளது என்கிறார் மேத்திவ்.

கடந்த சில ஆண்டுகளாக தங்கள் மீது கவனம் செலுத்த ஜப்பானியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊழியர்கள் தங்களது விருப்பங்களைத் தேர்வு செய்துகொள்ளவும், திறன்களை மேம்படுத்தவும் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

இன்றைய இளம் தலைமுறையினர் உண்மையான 'இக்கிகை'-க்கும் வேலைக்கும் இடையிலான தொடர்புகளைத் தடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதன் மூலம் ஜப்பானில் நிலவும் வேலை- வாழ்க்கை சமமின்மைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.