மலேசியா மற்றும் ஜப்பான் நாட்டுக்கு சிறப்பு விமானம் ! சொந்த நாட்டுக்கு செல்லும் மக்கள்!
கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் சிக்கிக்கொண்ட மலேசியத் தமிழர்கள் மற்றும் ஜப்பான் நாட்டு மக்கள் சிறப்பு விமானம் மூலம் தாய்நாடு செல்ல உள்ளனர்.
கொரோனா காரணமாக கடந்த் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் முதல் உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் அனைத்து நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் தங்கியிருந்த 98 மலேசிய தமிழ் குடும்பத்தினர், சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்தவர்கள் இன்று பிற்பகல் கோலாலம்பூருக்கு செல்ல இருக்கின்றனர். இதற்காக கோலாலம்பூரில் இருந்து சிறப்பு விமானம் தமிழகம் வர உள்ளது.
அதுபோலவே ஜப்பானைச் சேர்ந்த மக்கள் 258 பேர் நிப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று இரவு 8 மணிக்கு ஜப்பான் நாட்டின் நாரிட்டா விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கான முன்னெடுப்புகளை ஜப்பான் மற்றும் மலேசிய அரசுகள் தமிழக அரசுடன் மேற்கொண்டுள்ளன.
இதேபோல வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.