கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க ஒரு விலை மலிவான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு ஓராண்டு காலத்துக்குப் பிறகு, தற்போது மற்றொரு உயிர் காக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆனால் அந்த புதிய சிகிச்சை முறை விலை அதிகமானது. கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்ய மனிதர்களின் நரம்பு வழியாக ஆன்டிபாடிக்கள் செலுத்தப்படும். இது கொரோனாவால் ஏற்படும் அழற்சிகளை குறைப்பதற்கு பதிலாக வைரஸையே செயலிழக்கச் செய்யும்.
இந்த சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனையின் முடிவில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் மூன்றில் ஒருவரை குணப்படுத்த உதவும் எனத் தெரிய வந்திருக்கிறது.
100 நோயாளிகளில் ஆறு பேரின் உயிரை இந்த சிகிச்சை முறை காப்பாற்றுவதாக நிபுணர்கள் கணக்கிட்டு இருக்கிறார்கள்.
புதிய சிகிச்சை முறை
யாருடைய உடலில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிக்கள் தன்னிச்சையாக உருவாகவில்லையோ, அவர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை கொடுக்க முடியும். இந்த சிகிச்சைக்கு 1,000 முதல் 2,000 பவுண்ட் வரை செலவாகும்.
கிம்பர்லி ஃபெதர்ஸ்டோன் என்கிற 37 வயது பெண்மணி, மருத்துவ பரிசோதனையின் போது இந்த சிகிச்சையைப் பெற்றுக் கொண்டார்.
"இந்த சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை சரியான நேரத்தில் தொடங்கப்பட்டது. நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னால் இந்த சிகிச்சையைப் பெற முடிந்தது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன்" என்கிறார் கிம்பர்லி.
"இந்த சிகிச்சை முறை சோதனையில் கலந்து கொண்டதை மிகவும் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். இந்த சிகிச்சை முறை வெற்றிகரமானது என்பதை கண்டுபிடிக்க நானும் பங்களித்திருக்கிறேன்"
ரீஜெனரான் என்கிற மருந்து நிறுவனம் மோனோகுளோனல் ஆன்டிபாடி சிகிச்சை முறையை கொண்டு வந்திருக்கிறது. இந்த சிகிச்சை முறை கொரோனா வைரஸ்கள், மனித உடலில் இருக்கும் மற்ற செல்களை பாதிக்காமல் தடுக்கிறது.
10,000 பிரிட்டன் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த சிகிச்சை முறை பரிசோதனையில், மரண அபாயத்தை கணிசமாக குறைத்திருக்கிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் சராசரியாக நான்கு நாட்களைக் குறைத்திருக்கிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படுவதைக் குறைத்திருக்கிறது.
"இந்த கலவையான ஆன்டிபாடிக்களைக் கொடுப்பதன் மூலம், அவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்கலாம்" என்கிறார் இப்பரிசோதனையின் இணை முதன்மை ஆய்வாளரான சர் மார்டின் லாண்ட்ரே.
"நாம் ஒரு ஆன்டி வைரஸ் சிகிச்சை முறையை பயன்படுத்தலாம் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக சிகிச்சையளிக்கப்படவில்லை எனில் இறப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு சாத்தியமிருக்கிறது. அந்த அபாயத்தை இந்த சிகிச்சை முறை மூலம் குறைத்திருக்கிறோம்"
நிச்சயமற்ற தன்மை
இந்த மோனோகுளோனல் சிகிச்சை முறை, டெக்ஸாமெத்தோசோன் என்கிற அழற்சிகளை கட்டுப்படுத்தக் கூடிய ஸ்டீராய்டுகளோடு வழங்கப்படுகிறது. அம்மருந்தே கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் இறக்கும் அபாயத்தை மூன்றில் ஒரு பங்கு வரை குறைக்கிறது
ஆன்டிபாடி சிகிச்சை முறையினால் பலனில்லை என சில ஆராய்ச்சிகள் கூறும் போது, இந்த சிகிச்சை முறை சரியானது தானா என்கிற ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது என்கிறார் இப்பரிசோதனையின் மற்றொரு முதன்மை ஆய்வாளரான சர் பீட்டர் ஹார்பை.
உதாரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நோயாளிகளின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவில் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆன்டிபாடிக்கள் இருக்கும். அதை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து தொற்றை சமாளிக்கலாம் என்கிற பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் எந்த பயனும் இல்லை என கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அனால் இந்த ஆன்டிபாடி பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட, பரிசோதனைக் கூடத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு பிரத்யேக ஆன்டிபாடிக்கள், கொரோனா வைரஸைக் நன்றாகக் கட்டுப்படுத்துகின்றன.
"கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாக பாதித்திருக்கும் நபர்களின் உடலில் தன்னிச்சையாக ஆன்டிபாடிக்கள் உருவாகாத போது, அவர்கள் உடலில் கொரோனா வைரஸை மட்டும் இலக்கு வைப்பது, இறப்பை குறைக்க உதவும் என்பதைப் பார்க்கும் போது அருமையாக இருக்கிறது" என்கிறார் பீட்டர்.