1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (16:30 IST)

ஹாத்ரஸ் சம்பவத்தை தொடர்ந்து உத்தரப்பிரசேதத்தில் மேலும் ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உயிரிழப்பு

ஹாத்ரஸ் கூட்டுப் பாலியல் வல்லுறவு சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் எனும் இடத்தில் மேலும் ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பல்ராம்பூர் போலீஸார் ட்விட்டரில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "22 வயதான அந்தப் பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். செவ்வாய்க்கிழமை மாலை நேரம் ஆகியும் இவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தார் அந்தப்பெண்ணை தொலைப்பேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால், முடியவில்லை. சிறிது நேரம் கழித்து ரிக்ஷாவில் வந்திறங்கிய பெண்ணின் கைகளில் ஊசியில் ஏதோ ஏற்றிய தழும்பு இருந்தது. அந்தப் பெண் மோசமான நிலையில் இருந்தார். அவரது குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அப்பெண் உயிரிழந்துவிட்டார்" என போலீஸார் அந்தக் காணொளியில் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஊடகங்களிட்ம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், "என் மகளை பாலியல் வல்லுறவு செய்தவர்கள் அவளுக்கு ஏதோ ஒரு போதைப்பொருளை ஊசியால் ஏற்றியுள்ளனர். அவள் மயக்க நிலையிலேயே வீட்டிற்கு வந்தார். அவளது கை, கால்களை உடைத்துள்ளனர். ஒரு ரிக்ஷாவில்தான் அவள் வீட்டிற்கு வந்தாள். வீட்டுவாசலில் அவளை தூக்கி எறிந்தனர். என் மகளால் நிற்கவோ சரியாக பேசவோ முடியவில்லை," என்று கூறினார்.

மேலும், "என்னை காப்பாற்றுங்கள், எனக்கு சாக வேண்டாம்" என தனது மகள் கூறியதாகவும் அவரது தாய் தெரிவித்தார்.

அந்தப்பெண்ணின் கைகள், கால்கள் மற்றும் முதுகுப்பகுதி உடைக்கப்பட்டதாக சில ஊடக செய்திகள் கூறுகின்றன.

ஆனால், அது உண்மையல்ல என்று பல்ராம்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை அப்பெண்ணின் கை, கால்கள் உடைக்கப்பட்டதாக கூறவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்தல்

"ஹாத்ரஸ் சம்பவத்திற்கு பிறகு பல்ராம்பூரில் கூட்டுப்பாலியல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாத்ரஸ் சம்பவத்தில் பாஜக அரசு கவனக்குறைவாக நடந்துகொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை போல இதிலும் செய்யாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார்.

"பல்ராம்பூர் சம்பவம் மனதை உலுக்குகிறது. மீண்டும் ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். யோகி அரசாங்கத்தின் கீழ் ஒரு பெண்ணாக வாழ்வது சாபக்கேடு. பெண்களை பாதுகாக்க முடியவில்லை, நீங்கள் பதவி விலக வேண்டும் யோகி ஜி" என்று அவர் கூறியுள்ளார்.

மிக சமீபத்தில்தான் உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பட்டியலின பெண் கூட்டுப்பாலியலுக்கு ஆளாகி கடுமையான காயங்களுடன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்