1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By bala
Last Modified: சனி, 24 ஜூன் 2017 (12:57 IST)

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்- விமர்சனம்

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த இதயக்கனி போன்ற படங்களில் படத்தின் முதல் பாதி ஒரு விதமாகவும், அந்தக் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் இரண்டாவது பாதியும் இடம்பெற்றிருக்கும். அப்படியான ஒரு படம் இது.


 


மதுரையைக் கலக்கிக்கொண்டிருக்கும் கூலிப்படையைச் சேர்ந்தவரான மதுரை மைக்கேல் (சிம்பு), சில பல கொலைகளைச் செய்கிறார். பிறகு, ஸ்ரேயாவைக் காதலித்து ரவுடித்தனத்தை விட்டுவிடலாம் என்று நினைக்கும்போது, அவரைக் காவல்துறை கைது செய்துவிடுகிறது. கைதிகள் எல்லாம் சேர்ந்து ஜெயிலை உடைத்து, மைக்கேலை தப்பச் செய்கிறார்கள். ஆனால், அதற்குள் ஸ்ரேயாவுக்கு திருமணம் ஆகிவிடுகிறது. பிறகு துபாயில் போய் பெரிய டானாகிவிடுகிறார்.

வயதான நிலையில், சென்னைக்கு வந்து அஸ்வின் என்ற பெயரில் தங்கியிருக்கும்போது அவருக்கு ரம்யா (தமன்னா) என்ற இளம் பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. ரம்யாவும் தன்னைக் காதலிப்பதாக நினைக்கிறார். ஆனால், முடிவில் ரம்யா, மற்றொரு இளைஞரை (அதுவும் சிம்புதான்) காதலிப்பதாகச் சொல்கிறார். இதனால், அஸ்வின் குடித்துவிட்டு, ரம்யாவைப் பழிவாங்கப் போவதாகச் சொல்கிறார். அதை இரண்டாவது பாகத்தில் பார்க்க வேண்டுமாம்.





கதை, திரைக்கதை, படத்தொகுப்பு, வசனம் என எல்லாவிதத்திலும் தோல்வியடைந்திருக்கும் ஒரு படம். மதுரையிலிருந்து தப்பிக்கும் மைக்கேல், துபாயில் போய் பெரிய டானாகிவிடுகிறார் என்கிறார்கள். அவர் என்ன செய்து டான் ஆனார் என்று தெரியவில்லை. ஆனால், அவரை ஒரு பெண் போலீஸ் அதிகாரி (கஸ்தூரி) தலைமையில் பெரிய போலீஸ் படையே உலகம் முழுக்கத் தேடுகிறதாம். ஆனால், அவர் சென்னையில் ரம்யாவை காதலித்துக்கொண்டிருப்பாராம். இப்படியாக படத்தில் இருக்கும் லாஜிக் ஓட்டைகளைப் பற்றிப் பேசினால் பல பக்கங்களுக்கு எழுதிக்கொண்டேயிருக்கலாம்.

ஆனால், படம் நெடுக பெண்கள் குறித்து சிம்பு வகுப்பெடுத்துக்கொண்டே இருக்கிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தன் முதல் படத்திலும் இதே வேலையைத்தான் செய்தார். இந்தப் படத்திலும் இதையே கேட்கவேண்டியிருக்கிறது. அதுவும் படத்தின் முடிவில், பெண்களைப் பற்றி ஒரு கால் மணி நேர உரையாற்றுகிறார் சிம்பு. ரொம்ப ரொம்ப நெளியவைக்கிறது. தவிர, ஆபாச வசனங்களும் ஆங்காங்கே. இந்தப் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

எல்லாவிதத்திலும் நிராகரிக்கத்தக்க இந்தப் படத்தை சிரமப்பட்டு தாங்கிக்கொண்டாலும், இரண்டாம் பாகமும் வெளிவரும் என அறிவிப்பதுதான் ரசிகர்களை நிலைகுலைய வைக்கிறது!