செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (14:37 IST)

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகல்: நடைமுறைகளை துவங்கிய அமெரிக்கா!

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான நடைமுறைகளை அதிபர் டிரம்ப் துவங்கியுள்ளார்.
 
கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவைப் பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டிய டிரம்ப், அந்த அமைப்புடனான அமெரிக்காவின் உறவைத் துண்டிப்பதாகக் கடந்த மே மாதமே அறிவித்தார்.
 
அமெரிக்காவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் கேட்டுக்கொண்டபோதும், உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி மற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.
 
உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதி அளிக்கும் ஒற்றை நாடான அமெரிக்கா, கடந்த 2019இல் மட்டும் 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் அளித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை ஐ.நாவுக்கும், அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் தற்போது டிரம்ப் தெரியப்படுத்தியுள்ளார். இதற்கான நடைமுறைகள் முடிய குறைந்தது ஒரு வருடங்கள் ஆகும்.
 
`உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுவதற்கான அறிவிக்கையை அமெரிக்கா அனுப்பியுள்ளது. 2021 ஜூலை 6-ம் பிறகு அமெரிக்கா விலகும்`` என ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
 
``கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்க அதிகாரப்பூர்வமாக விலகுவது குறித்த அறிவிக்கையை வெள்ளை மாளிகை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது`` என வெளியுறவுக் குழுவின் உறுப்பினரும், ஜனநாயக கட்சியின் முன்னணி செனட்டருமான ராபர்ட் மெனண்டெஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
இந்த முடிவு,``அமெரிக்கர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்; அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும்`` எனவும் அவர் தெரிவித்துள்ளார். நவம்பர் மாத நடைபெறவுள்ள அதிபர் தேர்தலின் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன்,``நான் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற முதல் நாள், மீண்டும் உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா இணையும்`` எனத் தெரிவித்துள்ளார்.
 
டிரம்ப் கூறியது என்ன?
" உலக சுகாதார நிறுவனத்துடனான எங்கள் உறவைத் துண்டித்துவிட்டு, அந்த நிதியை மற்ற உலகளாவிய பொதுச் சுகாதார தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளோம்" என்று டிரம்ப் முன்பு அறிவித்தார்.
 
"சீன அரசாங்கத்தின் தவறான செயலின் விளைவாக உலகம் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது" என்று கூறிய அவர், கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலகத்தைத் தவறாக வழிநடத்த உலக சுகாதார நிறுவனத்திற்குச் சீனா அழுத்தம் கொடுப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
 
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் உலக சுகாதார நிறுவனம் அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்றது என்று டிரம்ப் விமர்சித்திருந்தார்.