உலக பார்வை: சீனாவுக்கு உதவும் டொனால்டு டிரம்ப்...

Last Modified திங்கள், 14 மே 2018 (15:27 IST)
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்....

 
உறுதிமொழி பெறுவதற்கான பயணம்:
இரான் அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினாலும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் அதற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறியதை உறுதிசெய்யும் பயணத்தை இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சரீப் தொடங்கியுள்ளார். சுற்றுப் பயணத்தில் முதலாவது நாடாக அவர் சீனாவுக்கு சென்றுள்ளார்.
 
இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தல்:
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதரகத்தை திறப்பதற்காக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப் தனது கணவருடன் இஸ்ரேல் சென்றுள்ளார்.
 
இந்நிலையில், அமெரிக்காவை போன்று மற்ற நாடுகளும் தங்களது தூதரகங்களை ஜெருசலேமிற்கு மற்ற வேண்டுமென்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
 
சீனாவுக்கு உதவும் டொனால்டு டிரம்ப்:
அமெரிக்காவின் ஏற்றுமதி தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான இசட்.டி.இ-யை (ZTE) மூடப்படும் நிலையிலிருந்து அந்நிறுவனத்தை காப்பதற்கு உதவுமாறு அமெரிக்க வர்த்தகத் துறையை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
சீனாவில் பல வேலைகள் ஆபத்தான நிலையில் உள்ளது தொடர்பாக தான் சீன அதிபருடன் சேர்ந்து பணியாற்றிவருவதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :