1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (19:47 IST)

நிர்பயா சம்பவம்: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியின் நிலை என்ன?

ஐந்து வருடங்களுக்கு முன்பு, ஒரு 23 வயதான பிசியோதெரபி மாணவி, டெல்லி பேருந்தில் கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார். இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே, தற்போது இந்தியப் பெண்கள் வாழ்வதற்கு மேம்பட்ட இடமாக டெல்லி உள்ளதா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.



ஐந்து வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை பார்ப்போம் - 2012ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16ஆம் தேதி, நண்பருடன் இளம்பெண் ஒருவர், பேருந்தில் பயணித்தபோது, அந்த கொடுமையான குற்றம் நடந்தது.பேருந்து ஓட்டுநர் மற்றும் ஐந்து ஆண்களால் அவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடன் பயணித்த நண்பர் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். ஆடைகளின்றி, ரத்தம் வழிய இருவரும், சாகட்டும் என சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்டனர்.சாலையில் சென்றவர்களால் காப்பாற்றப்பட்டு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதோடு, மருத்துவமனைக்கும் அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். காயங்களால் உயிர்விடுவதற்கு முன்பு, அந்த பெண் உயிருக்குப் போராடினார்.

அவரின் நண்பர் மாறாத வடுக்களோடு உயிர்பிழைத்தார்.இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்திய ஊடகங்கள், அவருக்கு நிர்பயா, அதாவது பயமற்ற பெண், என பெயர் வைத்தன.ஆனால், அதற்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பே, தான் ஒரு நிர்பயாவை, பயமற்ற பெண்ணை, சந்தித்ததாகக் கூறுகிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே. வன்புணர்வுகளைப் பற்றிய ரேடியோ செய்தித் தொகுப்புக்கு பணியாற்றியபோது இது நடந்தது.

"மத்திய டெல்லியிலுள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் அவரை நான் சந்தித்தேன். குஜராத்தில் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர் அவர். அவர்கள் எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்கும் பழங்குடியினர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கென்று, நிரந்தர முகவரி இல்லை."
அந்த பெண் தன் கணவர் மற்றும் இளம்பிள்ளையோடு டெல்லிக்கு வந்திருந்தார் என்று அவர் கூறுகிறார்.


சில மாதங்களுக்கு, தினக் கூலிகளாக அவர்கள் பணியாற்றிவிட்டு, குஜராத்தில் உறவினர்களை சந்திப்பதற்காக சென்றனர். ரயில் நிலைய சந்தடியில், அவர் தமது குடும்பத்திடமிருந்து பிரிந்து விட்டார் அந்த பெண். ரயில் நிலைய பணிமனையில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்த அந்த பெண்ணிற்கு, உதவி செய்வதாக ஒரு சீக்கிய லாரி ஓட்டுநர் கூறியுள்ளார்.

உதவி கிடைப்பதாக நம்பி அவரின் வாகனத்தில் ஏறிய அந்த பெண், அடுத்த நான்கு நாட்களுக்கு, லாரி ஓட்டுநர் மற்றும் பிற மூன்று ஆண்களால் தொடர்ந்து பாலியல் வன்புணர்விற்கு ஆளாகியுள்ளார்.அவர் இறந்துவிடுவார் என்று எண்ணி, அவர்கள், அந்த பெண்ணை சாலையோரத்தில் தூக்கிப் போட்டுள்ளனர். அங்கிருந்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.


அவரின் உடல், போர்க்களம் போல காட்சியளித்ததாக, கீதா பாண்டே குறிப்பிடுகிறார். உடல்பாகங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவரின் வயிற்றின் அடிப்பகுதியில் குழாய்கள் பொருத்தப்பட்டு, அதில் ஒரு பை தொங்கிக்கொண்டு இருந்தது. அவர் மார்பகங்களில், அந்த ஆண்கள் சிக்ரெட்டால் வைத்த காயங்களை அவர் காண்பித்ததாக, கீதா குறிப்பிட்டுள்ளார்.



தன்னுடைய குடும்பம் எங்குள்ளது என்று அவருக்கு தெரியவில்லை. அவரின் குடும்பத்தை கண்டுபிடிக்க, தன்னார்வ தொண்டு நிறுவனம் எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.அவரோடு பேசியதில் மனிதர்களால் எவ்வளவு கொடுமையாக நடந்துகொள்ள முடியும் என்பதை அறிந்து வருந்தியதாக கீதா தெரிவிக்கிறார்.

"அது என்னை மிகவும் பாதித்தது. வாழ்வில் முதல்முறை நான் பயத்தை உணர்ந்தேன். இந்த பயம் குறித்து, என் சகோதரி மற்றும், தோழியுடன் பகிர்ந்துகொண்டேன்" என்கிறார் கீதா.அவர்கள் எப்போது என்னை சந்திக்க வந்தாலும், மீண்டும் தங்களின் வீட்டை அடைந்தவுடன், குறுஞ்செய்தி அனுப்புமாறு வலியுறுத்துவேன் என்று கீதா தெரிவிக்கிறார்.

ஆரம்பத்தில் அவர்கள் என்னைப்பார்த்து சிரித்தனர். அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்ப மறந்தால், காலையில் எழுந்தவுடன் போன் செய்து, கடிந்துகொள்வேன் என்று அவர் தெரிவிக்கிறார். பிறகு, டிசம்பர் 16ஆம் தேதி சம்பவம் நடந்தது.


அந்த கொடுமையான சம்பவம் நடந்தவுடன், இந்திய ஊடகங்கள் என்ன நடந்தது என்பதை விவரித்தன.அதன்பிறகு, என் சகோதரியோ, தோழியோ என்னைப் பார்த்து சிரிக்கவில்லை.ஆனால், அந்த ஒரு மாற்றம் மட்டுமில்லை. இந்த சம்பத்தை தொடர்ந்து, வீதிகளில் இறங்கி போராடியவர்களின் கோரிக்கைக்கு இணங்க, பெண்களுக்கு எதிரான குற்றங்களை கவனிக்க, இன்னும் மேம்படுத்தப்பட்ட சட்டத்தை கொண்டு வந்தது இந்திய அரசு. ஆனால், அதைவிட பெரிய மாற்றம் மனிதர்களின் மனநிலையில் ஏற்பட்டதுதான். பாலியல் தாக்குதல், வன்புணர்வு உள்ளிட்ட விஷயங்கள் வீட்டின் கூடத்தில் பேசும் தலைப்புகளாக மாறின. பாலியல் சார்ந்த விஷயங்களைப் பேசுவதே தவறு எனக்கூறும் நாட்டில் இந்த மாற்றம் என்பது பெரிய ஒன்றாகும்.

பெண்கள் வாழ்வதற்கான சிறந்த இடமாக இந்தியா மாறுவதற்கான முதல்படி, இந்த விவாதங்களை கைப்பற்றுவதுதான். இந்த விவாதம் சமூக வலைத்தளங்களுக்கும் பரவியது. இதனை "பல லட்சம் கிளர்ச்சிகள்" என்று எழுத்தாளர் வி.எஸ்.நைபால் குறிப்பிட்டார்.சம்பவங்கள் சிறியது, பெரியது என எப்படி இருந்தாலும், அதுகுறித்து விவாதிக்கப்பட்டது. சமீப காலங்களில், இந்த தலைப்புகளில் நாங்களும் நிறைய எழுதியுள்ளோம்.

இதற்குமுன்பு, பெண்கள் இதுகுறித்து பேசவில்லை என்று அர்த்தமில்லை. பல ஆண்டுகளாக ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்துப் போராடிய போராளிகளெல்லாம் இருக்கிறார்கள்.அடுத்த சில தினங்களுக்கு, மேம்பட்ட, பாதுகாப்பான, தங்களை உள்ளே இணைத்துக்கொள்ளக்கூடிய உலகம் வேண்டுமென தொடர்ந்து குரல்கொடுக்கும் பெண்களை குறித்த செய்திகளை நாங்கள் வழங்கவுள்ளோம்.

இதில் கேள்வி என்னவென்றால்: அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்களா?

"சமீபத்தில் தேசிய குற்ற ஆவணப்பதிவு அமைப்பு, 2016 ஆம் ஆண்டிற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.இன்னும், வரதட்சணை கொடுமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கொல்லப்படுகின்றனர், பத்தாயிரக்கணக்கான பெண்கள் வன்புணர்வு செய்யப்படுகின்றனர்.லட்சக்கணக்கான குடும்ப வன்முறைகளும் பெண் சிசுக்கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கடந்த வாரம் மட்டும், ஆறு வயது குழந்தை, மிக மோசமாக பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டது, புற்றுநோயிலிருந்து மீண்ட 16 வயது பெண்ணுக்கு நடந்த வன்புணர்வு சம்பவம், பாலிவுட் நடிகை விமானத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது ஆகியவை நடந்துள்ளன.

இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், இத்தகைய கொடுமைகளுக்கு எதிரான தங்களின் போராட்டத்தை பெண்கள் கைவிடத் தயாராக இல்லை. இந்த உறுதியில்தான், வருங்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான மேம்பட்ட இந்தியா கிடைக்கும் என்ற நம்பிக்கை புதைந்துள்ளது.