டெல்லி போலீசார் வைத்த ஆப்பு - தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன?

Last Updated: புதன், 13 டிசம்பர் 2017 (10:36 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

 
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என  இருவரும் இரட்டை இலை சின்னத்தை கோரியதால், அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. 
 
அதன் பின் அந்த சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். மேலும், பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர் மூலமாகவே இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் முயன்றார் என குற்றம் சாட்டப்பட்டது. 
 
அந்த வழக்கில் தினகரன் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த வழக்கில் சுகேஷுக்கு மட்டும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில், டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளனர். இதில், தினகரனின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தினகரன் தற்போது ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். எனவே, இந்த விவகாரம் அவரது அரசியல் வாழ்க்கைக்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :