செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : சனி, 18 ஜூன் 2022 (00:53 IST)

ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடி: வீசப்பட்ட ரொட்டித் துண்டுகளை உண்ணும் மக்கள்

தாலிபன் ஆட்சியில் பெண்கள் நடத்தப்படும் விதம் மற்றும் பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட அவர்கள் மீது விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள் குறித்த கவலைகளுக்கான எதிர்வினையாக மேற்கு நாடுகளின் இந்நடவடிக்கைகள் உள்ளன.
 
ஆனால், இதனால் மூன்று குழந்தைகளின் தந்தையான ஹஷ்மத்துல்லா போன்ற ஏழை குடும்பங்களே பாதிக்கப்படுகின்றன.
 
ஏற்கெனவே அவருடைய சொற்ப வருமானம் கடந்தாண்டில் இருந்ததைவிட ஐந்தில் ஒரு பங்காக குறைந்துவிட்டது.
 
ஒரு பையில் பழைய ரொட்டித்துண்டுகளை வாங்கிக்கொண்டிருந்த அவர், "நான் காலையிலிருந்து வேலை பார்க்கிறேன், ஆனால் என்னால் வாங்க முடிந்தது இவ்வளவுதான்" என பிபிசியிடம் தெரிவித்தார்.
 
ரொட்டித்துண்டு தொழில்
 
இந்த பழைய ரொட்டித்துண்டு வியாபாரத்திற்கு பின்னால் ஒரு சிறிய தொழிலே உள்ளது. இந்த பழைய ரொட்டித்துண்டுகளை சேகரிப்பவர்கள் அதனை உணவகங்கள், மருத்துவமனைகள், வீடுகள் ஆகியவற்றிலிருந்து சேகரித்து பின்னர் இடைத்தரகர்களிடம் கொண்டு சேர்க்கின்றனர், பின்னர் இடைத்தரகர்கள் அவற்றை கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
 
நாட்டின் பாதி மக்கள் தொகை பசியில் உள்ள நிலையில், இந்த ரொட்டிகள் குறைவாகவே உள்ளன, அனைத்தும் குறைவாக உள்ளன.
 
"அவமானமாக உணர்கிறேன்"
 
"மக்கள் பசியில் உள்ளனர்" எனக்கூறும் விற்பனையாளர் ஒருவர் வாரம் முழுவதும் சேகரிக்கப்பட்ட பழைய ரொட்டிகள் அடங்கிய ஒரேயொரு சாக்குமூட்டையை காட்டுகிறார். ஆனால், கடந்த காலங்களில் நாளொன்றுக்கு ஒரு சாக்கு மூட்டை ரொட்டிகள் சேகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
 
"சுத்தமான ரொட்டிகளை நாங்கள் கண்டால், அவற்றை நாங்களே சாப்பிட்டுவிடுவோம்" என மற்றொரு விற்பனையாளர் கூறுகிறார்.
 
காபூலின் ஏழ்மையான பகுதியொன்றில் அமைந்துள்ள தன் வீட்டில் ஹஷ்மத்துல்லா தன் குடும்பத்தினருக்காக உணவு சமைத்துக்கொண்டிருக்கிறார்.
 
பெரும்பான்மையான குடும்பங்களில் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது போன்று அல்லாமல், தன் மூன்று மகன்களை பள்ளிக்கு அனுப்புவதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் அவர் செய்கிறார்.
 
ஆனால், பழைய ரொட்டிகளை மீண்டும் சமைத்து, மிருதுவாக்கி, அதனை தக்காளி மற்றும் வெங்காயங்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் மட்டுமே உயிர்வாழ்வதை இது குறிக்கிறது.
 
"என் குடும்பத்தினருக்கு நல்ல உணவைக்கூட கொடுக்க முடியாமல் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதைக்கண்டு, நான் குடும்பத்தின் முன்னால் அவமானகரமாக உணர்கிறேன்," என அவர் நம்மிடம் தெரிவித்தார்.
 
"என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் கடன் வாங்க முயற்சித்தாலும், யாரும் எனக்குக் கடன் வழங்க மாட்டார்கள். என் மகன்கள் சரியாக சாப்பிடாததால் மிகவும் மெலிந்து போயுள்ளனர்" என அவர் தெரிவித்தார்.
 
காபூலில் உள்ள பேக்கரிகளில் மாலை நேரங்களில் இலவசமாக வழங்கப்படும் புதிய 'நான்' ரொட்டிகளுக்காக பெண்கள் மற்றும் சிறுமிகள் வரிசையில் நிற்பதை வழக்கமாக காண முடியும்.
 
புதிய ரொட்டிகளை தவறவிடக்கூடாது என்பதற்காக, அவர்களில் சிலர் தங்களின் தையல் இயந்திரங்களை கொண்டு வந்து அங்கேயே நாள் முழுதும் வேலை செய்கின்றனர்.
 
ஆப்கானிஸ்தானில் பில்லியன் கணக்கிலான டாலர்கள் கொட்டினாலும், ஊழல் மற்றும் போரின் தாக்கங்களால் அங்கு வாழ்வது போராட்டமாகியுள்ளது.
 
இப்போது போர் முடிந்துவிட்டது, ஆனால், வாழ்க்கைக்கான போராட்டம் இன்னும் கடினமாகிக் கொண்டிருக்கிறது.