நடிகர் தனுஷ் விளாசல் - ''வெஸ்ட் இண்டீஸ் வென்றுவிடக்கூடாது என நடுவர் விரும்புகிறார்''

danush
Last Modified வெள்ளி, 7 ஜூன் 2019 (21:17 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இப்போட்டியின் நடுவர்களின் தீர்ப்புகள் பல முறை தவறாக அமைந்தது.
இதையடுத்து தனுஷ் நடுவர்களின் தீர்ப்பை விமர்சித்து ஒரு ட்வீட் பதிவிட்டிருக்கிறார்.
 
''வெஸ்ட் இண்டீஸ் எப்படியும் வென்றுவிடக் கூடாது என நடுவர் விரும்புகிறார் என்று நினைக்கிறேன். நன்றாக விளையாடினீர்கள் வெஸ்ட் இண்டீஸ். நடுவரின் செயல்பாடுகள் மோசமாக இருப்பது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. மிகவும் ஒருதலைப்பட்சமானதும் கூட'' என தனுஷ் ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
 
வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்யும்போது பல முறை ஆஸ்திரேலிய அணி பௌலரின் அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் உண்மையில் நாட் அவுட் என்பது மூன்றாம் அம்பயரிடம் ரிவ்யூ கேட்டதன் மூலம் தெரியவந்தது.
 
குறிப்பாக கிறிஸ் கெய்ல் விளையாடும்போது மூன்று முறை அம்பயர் அவுட் கொடுத்தார். அதில் இரு முறை கெய்ல் தப்பித்தார். மூன்றாவது முறை கள அம்பயரின் தீர்ப்பே இறுதியானது எனும் தீர்ப்பால் கெய்ல் அவுட் ஆனார்.
 
நேற்றைய போட்டியின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் ஆதரவு ரசிகர்கள் நடுவர்களின் முடிவை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
நேற்று போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் கார்லஸ் பிராத்வெய்ட், நடுவர்களின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.
 
'' எரிச்சலூட்டும் விதமாக இருந்தது'' என அவர் தெரிவித்தார்.
 
 
''எங்கள் பந்து எதிரணி வீரரின் கால்காப்பில் பட்டால் நடுவர்களின் விரல்கள் கீழே சென்றுவிடுகின்றன. நாங்கள் பேட்டிங் செய்யும்போது கால்காப்பில் பந்து பட்டுவிட்டால் உடனடியாக விரலை உயர்த்திவிடுகிறார்கள்'' என அவர் விமர்சித்தார்.
 
நேற்றைய போட்டியில் கள நடுவராக செயல்பட்ட கிறிஸ் கஃபனே மற்றும் ருச்சிரா பலியகுருகே தலா இரண்டு தவறான முடிவுகளை கொடுத்தனர். அவை மூன்றாவது நடுவரின் தீர்ப்புகளில் திருத்தப்பட்டன.
 
'' நான் இப்படிச் சொல்வதால் எனக்கு அபராதம் விதிக்கப்படுமா எனத் தெரியாது. ஆனால் நடுவர்களின் முடிவுகள் கொஞ்சம் எரிச்சலூட்டும் விதமாகத்தான் இருந்தது.''
 
இருப்பினும் நடுவரின் முடிவுகளால் தான் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது என அவர் கூறவில்லை. கெய்ல் விக்கெட் விழுந்தபிறகு அணி வெற்றி பெறுவதற்கு தேவையானதை செய்யவில்லை எனக் கூறினார்.
 
நேற்று போட்டியில் என்ன நடந்தது என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து படியுங்கள் - தான் ஏன் 'சாம்பியன்' அணி என நிரூபித்துக்காட்டிய ஆஸ்திரேலியா.
 

இதில் மேலும் படிக்கவும் :