வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 7 அக்டோபர் 2022 (13:12 IST)

ஹாங்காங் சுற்றுலா துறைக்கு ஊக்கம் தர நடவடிக்கை: 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கத் திட்டம்

Hong Kong
கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக, சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள (200 கோடி ஹாங்காங் டாலர்) 5 லட்சம் விமான டிக்கெட்களை பயணிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக ஹாங்காங் கூறியுள்ளது.


கடந்த சில வாரங்களாக ஹாங்காங்கில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் முக்கிய விமான நிறுவனங்கள், கொரோனா தொற்றுக்கு முந்தைய அட்டவணைப்படி விமானங்களை இயக்குவதற்கு போராடி வருகின்றன.

பிரிட்டிஷ் விமான நிறுவனமான வர்ஜின் அட்லாண்டிக், யுக்ரேன் போர் காரணமாக ஹாங்காங் நகருக்கு விமானங்கள் இயக்குவதை நிறுத்துவதாக புதன் கிழமை தெரிவித்தது.

இந்த இலவச விமான டிக்கெட் திட்டம் தொடர்பாக ஹாங்காங் "விமான நிலைய ஆணையம் விமான நிறுவனங்களுடன் பேசி ஏற்பாடுகளை இறுதி செய்யும். ஹாங்காங் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான கோவிட்-19 கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளும் அறிவிப்பை அரசு வெளியிட்ட பிறகு இலவச விமான டிக்கெட் வழங்குவது குறித்து விளம்பரம் செய்ய உள்ளோம்," என ஹாங்காங் சுற்றுலா வாரியத்தின் செயல் இயக்குநர் டானே செங்க் கூறினார்.

கொரோனா தொற்றின்போது ஹாங்காங் ஏர்லைன்சுக்கு ஆதரவு தரும் வகையில் இலவச டிக்கெட்கள் வாங்கப்பட்டன. அவை அடுத்த ஆண்டு ஹாங்காங் வரும், ஹாங்காங்கில் இருந்து செல்லும் விமான பயணிகளுக்கு ஹாங்காங் விமான நிலைய ஆணையத்தால் வழங்கப்படும் என்றும் செங்க் கூறினார்.

இதனிடையே வர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம், ஹாங்காங்கில் உள்ள தங்களது அலுவலகத்தை மூட உள்ளதாகவும், லண்டன் ஹீத்ரூ-ஹாங்காங் இடையே இனி விமானங்கள் இயக்கப்படாது என்றும் கூறியுள்ளது.

"ரஷ்யாவின் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக முக்கியமான செயலாக்க சிக்கல்கள் எழுந்துள்ளன. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி 2023ம் ஆண்டு மார்ச் மாதம் விமான சேவையை தொடங்கும் முடிவை நிறுத்தி வைப்பது என வணி ரீதியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என பிரிட்டிஷ் விமான நிறுவனம் கூறியுள்ளது.

கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஹாங்காங் நகருக்கான விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது.

யுக்ரேன் - ரஷ்யா போர் காரணமாக பல விமான நிறுவனங்கள் தங்களது சேவையை ரத்து செய்துள்ளன அல்லது, போர்ப் பகுதியில் பறப்பதை தவிர்த்து வேறு பாதையில் நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு பயணிக்கின்றன.

"இந்த விமானப் பாதையில் பயணிக்கும் எங்களுடைய நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திக்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றோம். 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பயணிப்பதற்கான முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு அவர்களின் கட்டணம் திருப்பித்தரப்படும். அல்லது வவுச்சராக அளிக்கப்படும். வர்ஜின் நிறுவனத்தின் மாற்று வழி விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்படும்," என வர்ஜின் நிறுவனம் கூறியுள்ளது.

அண்மை காலம் வரை, சீனா மேற்கொண்ட உலகின் மிக கடுமையான ஜீரோ கொரோனா தொற்று கொள்கையை ஹாங்காங் நகரும் பின்பற்றியது.

ஹாங்காங் நகருக்கு வரும் பயணிகள் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள், ஹாங்காங் நகருக்கு வரும் விமானங்களில் பயணிக்கும் முன்பு கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழை காட்டுவது இனி அவசியமாக இருக்காது என்று கடந்த மாதம் அறிவித்தது ஹாங்காங் அரசாங்கம்.

இப்போது, ஹாங்காங் வந்த பின்னர் மூன்று நாட்கள் கழித்து தங்களுக்கு தொற்றுக்கான சாத்தியம் உள்ளதா என பயணிகள் தாங்களே கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இந்த தகவல் காரணமாக ஹாங்காங் வரும், ஹாங்காங்கில் இருந்து செல்லும் விமானங்களில் பயணிப்பதற்கான நெருக்கடி அதிகரித்துள்ளது.

யுரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் புருடென்ஸ் லாஸ், ஹாங்காங் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலம் என்ற பெயரை மீட்டெடுப்பதற்கான செயல்பாடுகளை விரைவுபடுத்த இந்த இலவச டிக்கெட் சலுகை உதவும் என்று கருத்துத் தெரிவித்தார்.

"கோவிட் தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் ஹாங்காங் கொண்டிருந்த சந்தை திறன் நிலை முழுமையாக மீட்கப்பட்டுள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"எனினும், சீன சுற்றுலா பயணிகள் எப்போது திரும்பி வருவார்கள் என்பதை பொருத்தே இது இருக்கிறது. சீனாவில் இருந்துதான் ஹாங்காங்குக்கு பாதியளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் மூலம்தான் சுற்றுலா வருவாய் கிடைக்கிறது," என்றார் லாய்.

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஹாங்காங் நகருக்கு 1.84 லட்சம் பேர் வந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு முன்பு 2019ம் ஆண்டு மொத்தமும் 5.6 கோடி சுற்றுலாப் பயணிகள் ஹாங்காங் வந்துள்ளனர். இதனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் சுற்றுலாப் பயணிகள் வருகை எவ்வளவு பெரிய சரிவு என்பது புரியும்.